இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டார், குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கோமகன்! 

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் நலன்களுக்காக செயற்பட்டுவருகின்ற குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கோமகன், அண்மைக்காலமாக இலங்கை பாதுகாப்புத் தரப்பினரால் அழைக்கப்பட்டு விசாரணை என்கின்ற போர்வையில் அச்சுறுத்தப்பட்டு வந்துள்ளார்.
இறுதியாக, ஏப்ரல் 30-2022 அன்று பயங்கரவாத விசாரணைப் பிரிவு அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டு சுமார் ஒன்றரை மணிநேரம் விசாரிக்கப்பட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர், 05/05/2022 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடளித்துள்ளார்.
அதற்கமைய, HRC/JA/086/2022 என்ற இலக்கத்தின் கீழ் முறைப்பாட்டினை பெற்றுக்கொண்ட மனித உரிமைகள் ஆணைக்குழுவானது சுமார் 15 மாதங்கள் கடந்த நிலையில் (25/08/2023) கோமகன் அவர்களை மீண்டும் ஆணைக்குழு அழைத்துள்ளது.
அதனை ஏற்று ஆணைக்குழுவிற்கு சென்றபோது,
அங்கு, பயங்கரவாத விசாரனைப்பிரிவினரிடமிருந்து கிடைக்கப்பெற்ற சிங்கள மொழிமூல பதில் தகவலை அவர்கள் வாசித்துக்காட்டியுள்ளனர்.
அதாவது, “தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை விடயத்தில் குரலற்றவர்களின் குரல் அமைப்பு மற்றும் கோமகனது செயற்பாடுகள் தொடர்பில் பிரதேச கிராம உத்தியோகத்தரிடம் கேட்டறிந்துகொண்டனர் என்றும், எவ்வேளையிலும் அவரை தமது அலுவலகத்திற்கு அழைத்திருக்கவில்லை” என்றும் பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் தெரியப்படுத்தியுள்ளதாக ஆணைக்குழு கூறியுள்ளது.
பயங்கரவாத விசாரணைப் பிரிவின் உண்மைக்குப் புறம்பான இத்தகைய செயற்பாடுகள், குடிமக்கள் சார்ந்து செயற்படுகின்ற சிவில் மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாக குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கோமகன் கவலை வெளியிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews