தையிட்டி விவகாரம் காணிச் சொந்தக்காறர்களின் விவகாரமல்ல. அது தமிழ் மக்களின் தேசிய விவகாரம்..! அரசியல் ஆய்வாளர், சட்டத்தரணி  சி.அ.யோதிலிங்கம்

தையிட்டி விவகாரம் காணிச் சொந்தக்காரர்களின் விவகாரமல்ல. அது தமிழ் மக்களின் தேசிய விவகாரம் என அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியும், சமூக விஞ்ஞான ஆய்வு மைய்ய இயக்குனருமான

சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார். அவர் வெளியீடு செய்த வராந்த அரசியல் ஆய்வு கட்டுரையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதன் முழு விபரமும் வருமாறு

 

தையிட்டி சட்ட விரோத விகாரை விவகாரம் மக்கள் மயமாதல் என்ற அடுத்த கட்டத்தை நோக்கி வளரத் தொடங்கி விட்டது. கடந்த மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்ற போராட்டத்தில் வேலன் சுவாமிகள், வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராசா நிரோஸ் உட்பட ஐவர் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டமை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு காரணமாக அமைந்தது. வேலன் சுவாமிகள் ஒரு மத குரு என்பதும் கணக்கிலெடுக்காமல் மோசமாக தாக்கப்பட்டுள்ளார். அவரது கழுத்து மாலை அறுக்கப்பட்டு மாலையோடு சேர்த்து கழுத்து நெரிக்கப்பட்டது. பொலிஸ் வானுக்குள் அவர்; பலவந்தமாக தள்ளப்பட்ட போது வானுடன் அவரது உடம்பு அடிபட்டது. இத்தனைக்கும் நான் வருகின்றேன் எனக் கூறிய போதும் பொலிசார் தாக்கியிருந்தனர். இதே போல ஏனையவர்களும் தாக்கப்பட்டிருந்தனர். வலைதளங்கள் இத் தாக்குதலை தெளிவாக ஒளிபரபபியிருந்தன.

வேலன் சுவாமிகள் தாக்கப்பட்டமை தமிழ் மக்களின் சுயமரியாதைக்கு விழுந்த பேரடியாகும். தமிழ் மக்கள் பொதுவாகவே மதகுருமார்களுக்கு மிகப்பெரும் மதிப்பைக் கொடுப்பவர்கள். கடவுளின் தூதுவர்களாக அவர்களைப் பார்ப்பவர்கள். ஒரு பௌத்த மத குருவில் இப்படிக் கை வைப்பர்களா என்ற கேள்வியையும் அவர்கள் கேட்கின்றனர். திருகோணமலை புத்தர் சிலை விகாரத்தில் ஒரு பௌத்த பிக்கு பொலிஸ் அலுவலரை கன்னத்தில் அறைந்த போதும் பொலிஸ் அலுவலர் எதுவும் செய்யவில்லை. இந்த தாக்குதல் மத சுதந்திரத்திற்கு விழுந்த பேரடியாகும்

வேலன் சுவாமிகள் தாக்குதல் நடந்த இரவே யாழ் போதனா வைத்தியசாலை அவசரப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்தார். வைரஸ் காய்ச்சலும் அவரைப் பீடித்திருந்தது. நீரிழிவு நோயும் உச்சத்தைத் தொட்டிருந்தது. ஒரு வார காலம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றிருந்த அவர் தற்போது தனது ஆதீனம் திரும்பி உள்ளார். கத்தோலிக்க மதத்தலைவர்கள் அவரை ஆதீனத்தில் பார்வையிட்டதுமல்லாமல் கூட்டாக ஊடகவியலாளர் மாநாட்டையும் நடாத்தியுள்ளனர். வேலன் சுவாமிகள் தன்னைக் கொலை செய்வதற்கு அல்லது அங்கவீனமாக்;குவதற்கு பொலிசார் முயற்சித்துள்ளனர் எனக் கூறியுள்ளார். அன்றைய தினம் யாழ்ப்பாண மாவட்டத்தின் முக்கிய பொலிஸ் அதிகாரிகள் தையிட்டில் பிரசன்னமாகியிருந்தனர். எனவே முழுக்க முழுக்க அரசாங்கத்தின் மேலிட கட்டளையின் படியே இத்தாக்குதலும், கைதும் இடம்பெற்றிருந்தது. இதன்மூலம் அரசாங்கமே இப் போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியுள்ளது.

தாக்குதல் நடந்த அடுத்த நாளே யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடாத்தியுள்ளனர். நயினாதீவு விகாராதிபதியும் யாழ்ப்பாணம் நாகவிகாரை விகாராதிபதியும் விகாரை சட்டவிரோதமான விகாரை மக்களின் காணியில் கட்டப்பட்டுள்ளது என ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியிருக்கின்றனர்.

நயினாதீவு விகாராபதி ஒரு படி மேலே சென்று அரசாங்கம் தலையிட்டு இந்த விவகாரத்தை தீர்க்காவிட்டால் தான் மக்களின் பக்கம் நிற்க வேண்டி வரும் எனக் கூறியிருக்கின்றார். தங்களுடைய விகாரைகளுக்கு எதிராகவும் மக்கள் கிழர்ந்தெழலாம் என அவர்கள் அஞ்சியிருக்கலாம். படையினரால் நீண்ட காலத்திற்கு விகாரைகளை பாதுகாக்க முடியாது. சூழவுள்ள மக்களினால் தான் பாதுகாக்க முடியும் என்பது அவர்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாகப் புலப்படத் தொடங்கியுள்ளது.

தமிழ்நாட்டில் தமிழ்நாட்டு மக்களும் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடாத்தியிருக்கின்றனர். இது ஆரம்பமாக இருந்தாலும் அது மேலும் பரவுவதற்கு வாய்ப்பு இருக்கின்றது. தமிழ்நாட்டில் ஈழத்தமிழர் விவகாரம் எப்போதும் நீறு பூத்த நெருப்பாக இருக்கின்றது. அது எந்த நேரமும் பற்றி எரியலாம் அது மத்திய அரசாங்கத்திற்கும் தெரியும். தமிழ்நாட்டு அரசாங்கத்திற்கும் தெரியும். தற்போது அங்கு தேர்தல் காலம். பாரதீயஜனதாக்கட்சி எவ்வாறாவது தமிழ்நாட்டில் காலூன்றுவதற்கு முயற்சித்துக்கொண்டிருக்கின்றது. இதனால் ஈழத்தமிழர் விவகாரம் மேலெழும்புவதை அக்கட்சி விரும்பப்போவதில்லை.

இதன் காரணமாக இலங்கை அரசாங்கத்திற்கு விவாகரத்தை தீர்க்கும் படி அழுத்தம் கொடுத்திருக்கலாம். அரசாங்கம் சமரச முயற்சிக்கு தற்போது வந்துள்ளது. யாழ் அரசாங்க அதிபர் ஊடாக அந்த சமரச முயற்சி மேற்கொள்ளப்படுகின்றது இது தொடர்பாக அரசாங்க அதிபர் காணிச் சொந்தக்கார்களை சந்தித்து கலந்துரையாடியிருக்கின்றார். விகாரை அமைந்துள்ள காணியை மட்டுமட்டாக வரையறுத்துவிட்டு ஏனையவற்றை கட்டம் கட்டமாக விடுவிப்பது என்ற யோசனை முன் வைக்கப்பட்டுள்ளது. காணிச் சொந்தக்காரர்கள் காணிகளை முழுமையாக விடுவிக்கும் வரை போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை எனக் கூறியிருக்கின்றனர். இக்கட்டுரை எழுதிக் கொண்டிருக்கின்ற போது 3ம் திகதி போராட்டத்திற்கான ஆயுத்தங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அரசாங்கம் சமரச முயற்சிகளை நோக்கி வந்தமைக்கு இந்தியாவின் அழுத்தமும் தொடர் போராட்டங்களின் தாக்கமும் காரணங்களாக இருக்கலாம்.

தற்போது தையிட்டி விவகாரம் காணிச் சொந்தக்காறர்களின் விவகாரமல்ல. அது தமிழ் மக்களின் தேசிய விவகாரம் என்ற வகையில் தமிழ் மக்களின் பொது விவகாரமாக மாறியுள்ளது. 2009 ஆம் ஆண்டு ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்படதைத் தொடர்ந்து சிறீPலங்கா அரசின் நிகழ்ச்சி நிரல் தான் தையிட்டி விவகாரம். தையிட்டி விகாரை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டியதும் அரசின் இராணுவம் தான். போராட்டம் நடந்து கொண்டிருந்த காலத்திலேயே மேலதிக கட்டிடங்களைக் கட்டியதும் இராணுவம் தான். தற்போது இதுவரை அதனைப் பாதுகாப்பதும் அங்கு வழிபாடு செய்வதும் இராணுவம் தான். எனவே இது முழுக்க அரசின் நிகழ்ச்சி நிரலில் ஒன்றாகும். இதன் பின்னுள்ள நோக்கம் இன அழிப்பு தவிர வேறு எதுவும் கிடையாது. இந்த விகாரையை அமைப்பதற்காக அரசாங்கம் தான் உருவாக்கிய சட்டங்களையே மீறியது. தனியார் காணிகளில் சட்ட விரோத விகாரை கட்டுவதற்கு அரசிற்கு எந்த உரிமையும் கிடையாது. ஒரு பிரதேசத்தில் ஒரு சிறிய கட்டிடம் கட்ட வேண்டுமென்றால் கூட அந்தப் பகுதி பிரதேச சபையின் எழுத்து மூல அனுமதியைப் பெற்றுக் கொள்ள வேண்டும். இந்த விகாரை தொடர்பாக எந்த அனுமதியும் பெறப்படவில்லை. இதைக் கண்டித்து சட்டவிரோத விகாரை எனப் பெயர்ப்பலகை நாட்டுவதற்கு வழிகாமம் வடக்கு பிரதேச சபை தீர்மானம் ஒன்றை எடுத்திருந்தது. அதன் அடிப்படையில் பெயர்ப் பலகையை நாட்ட முற்படுகையில் பலாலி பொலீஸ் நிலையம் அதற்கு தடை விதித்துள்ளது. இங்கு பிரதேச சபையின் அதிகாரங்களில் தலையிடுவதும்; சட்டவிரோதமாகும். அரசின் பாதுகாப்புக்கருவியாகவுள்ள இராணுவம் விகாரையைக் கட்டியமையும் சட்டவிரோதமாகும். இவ்வாறு சட்டங்களை உருவாக்கிய அரசே சட்டங்களை மீறும் போது அது சட்டப்பிரச்சினை என்பதைத் தாண்டி அரசியல் பிரச்சினையாக மாறி விடுகின்றது. தமிழ் மக்கள் சம்பந்தப்பட்ட விவகாரமென்றால் சட்டங்களையும் மீறலாம் என்பது இன்று சிறீலங்கா அரசில்; எழுதப்படாத விதியாக உள்ளது. தமிழர்களிலேயே ஒரு சிலர் இதனை நீதிமன்றங்களில் முறையிடலாமே எனக் கூறுகின்றனர். சட்டப்பிரச்சனைக்குத்தான் நீதிமன்றங்களில் தீர்வு காணலாமே ஒழிய அரசியல் பிரச்சனைக்கு நீதிமன்றம் மூலம் தீர்வு காண முடியாது. அதற்கு அரசியல் ரீதியாகத் தான் தீர்வு காண முடியும். குருந்தூர் மலை விவகாரம் இதற்கு நல்ல உதாரணமாகும். நீதிமன்றம் தீர்ப்பளித்தும் அந்தத் தீர்ப்பு நடைமுறைக்கு வரவில்லை. இறுதியில் நீதிபதி நாட்டை விட்டு தப்பியோட வேண்டிய நிலையே ஏற்பட்டது.

அமைச்சர் சந்திரசேகர் தையிட்டியில் அரசியல் செய்வதை அனுமதிக்க முடியாது எனக் கூறுகின்றார். விகாரை கட்டப்பட்டதே ஒரு அரசியல். எனவே போராட்டத்தில் எவ்வாறு அரசியல் இல்லாமல் இருக்க முடியும். இந்த ஆக்கரமிப்பு அரசியல் தான் குருந்தூர் மலையிலும் நடைபெற்றது. தையிட்டியிலும் நடைபெற்றது. திரிவைத்த குளத்திலும்; நடைபெற்றது தற்போது வவுனியா சமணங்குளத்திலும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இது ஆயுதப் போராட்ட மௌனிப்புக்குப் பின்னர் அரசின் பிரதான நிகழ்ச்சி நிரல். தமிழ் மக்கள் ஒரு தேசிய இனமாக இருப்பதை அழிப்பதே இதன் பின்னாலுள்ள நோக்கம். இதனால் எந்த அரசாங்கம் பதவிக்கு வந்தாலும் இன அழிப்பை மேற்கொள்ளும். தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மட்டும் இதற்கு ஒரு போதும் விதிவிலக்காக இருக்கப் போவதில்லை. தேசிய மக்கள் சக்தியை ஆதரிக்கும் தமிழ் இடதுசாரிக் குஞ்சுகளுக்கு இது விளங்காமல் இருப்பது கவலைகுரியது.

அமைச்சர் சந்திரசேகர் விகாரை தமது ஆட்சிக் காலத்தில் கட்டப்படவில்லை என இன்னொன்றையும் கூறுகின்றார் வவுனியா சமணங்குளம் விகாரை யாரது ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றது. திரிவைத்தகுளம் ஆக்கிரமிப்பு யாரது ஆட்சிக்காலத்தில் இடம்பெறுகின்றது இரண்டுமே அண்மைக்கால உதாரணங்கள். தவிர கடந்த கால ஆட்சியின் போது இடம்பெற்ற ஊழல்களை எல்லாம் விசாரணை செய்து தண்டனை கொடுக்கின்றார்கள.; முன்னாள் ஜனாதிபதி கூட இதற்கு விதிவிலக்காக இருக்கவில்லை. முன்னைய ஆட்சிக் காலத்தில இடம் பெற்ற விகாரை விவாகரத்தை விசாரணை செய்து தண்டனை வழங்க உங்களை எது தடுக்கின்றது. பச்சை இனவாதம் தவிர வேறு ஏதாவது இருக்கின்றது என இவர் காரணம் கூறுவாரா?

விகாரை கட்டும் போது போராட்டம் நடாத்தியிருக்கலாமே தற்போது மட்டும் ஏன் நடத்துகின்றார்கள் என தமிழ் மக்களின் சிலரே கூறப்பார்க்கின்றனர.; இந்தக் கட்டுமானம் உயர் பாதுகாப்பு வலையத்திற்குள் எவருக்கும் தெரியாமல் இடம் பெற்றுக் கொண்டிருந்தது எனினும் மக்கள் தகவல் அறிந்த காலம் தொடக்கம் போராடிக் கொண்டேயிருக்கின்றார்கள். ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இது பற்றி பல தடவை கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும்; மக்கள் போராடிக் கொண்டிருந்தார்கள். தமிழத்; தேசிய மக்கள் முன்னணி ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் போராட்டத்தை நடாத்தி இதைத் தக்க வைத்துக்கொண்டிந்தது உண்மையில் இந்தப் போராட்டத்தை அணைய விடாமல் பாதுகாத்தது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தான்;. இன்று உண்மையான அணையா விளக்கு போராட்டம் என்பது தையிட்டிப் போராட்டம் தான். முன்னர் போராடியிருக்கலாமே என்று கூறுபவர்கள் ஒரு வகையில் ஆக்கிரமிப்பு அரசாங்கத்திற்கு சேவை செய்பவர்கள் என்றே கூற வேண்டும்.

தமிழ்த் தேசியக் கட்சிகளை பொறுத்தவரை மூன்று அணியினர் இன்று களத்தில் நிற்கின்றனர். தமிழரசுக் கட்சி, தமிழ்த் தேசிய பேரவை, ஜனநாயகத் தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பு என்பனவே இந்த மூன்றுமாகும் இந்த மூன்றில் தமிழரசுக் கட்சியும், ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் இந்தப் போராட்டத்தில் பெரியளவு அக்கறை செலுத்தவில்லை. 21ஆம் திகதி போராட்டத்தில் மட்டும் வலிகாமம் வடக்கு பிரதேச சபையைச் சேர்ந்த தமிழரசுக் கட்சியினர்; பங்குபற்றியிருந்தனர.; பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனும் பங்குபற்றியிருந்தார். ஏனைய தலைவர்கள் பங்கு பற்றவில்லை. பொலிசார் தாக்குதல் நடத்தியமை பற்றி தமிழரசுக் கட்சியோ, ஜனநாயகத் தமிழத்; தேசியக் கூட்டமைப்போ எந்த கண்டனத்தையும் தெரிவிக்கவில்லை. வேலன் சுவாமிகள் ஒரு வாரகாலமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது திரும்பியும் கூட பார்க்கவில்லை. போதாதக் குறைக்கு வலிவடக்கு பிரதேச சபை வேலன் சுவாமிகள்; மருத்துவமனையில் இருந்த போதே “அலையோடு உறவாடு” என்ற பெயரில் காங்கேசன்துறையில் களியாட்டு விழாவை நடாத்தியிருந்தது. தாம் ஆதரவு தெரிவிப்பது தமிழ்த்; தேசிய மக்கள் முன்னணிக்கு சாதகமாக சென்று விடும் என இவர்கள் கருதியிருக்கலாம். தமிழ்த்; தேசியம் சம்பந்தப்பட்ட பொது விவகாரங்களில் கட்சி அரசியல் ஏற்க்கத்தக்கதல்ல இப்போக்கு மிகவும் கவலைக்குரியது. இக்கட்சிகள்; இப்போக்கிலிருந்து விடுபடுவது அவசியமானது.

தமிழ்நாட்டு மக்கள் நடாத்திய கண்டன ஆர்ப்பாட்டம் தையிட்டி விவகாரத்தை சர்வதேசமயமாக்குவதற்குரிய அறிகுறியாகும். இது தமிழ்நாட்டு மட்டத்தில் மேலும் பரவலாகும் போதும், புலம்பெயர் மக்களும் போராடங்களை நடாத்தும் போதும் இலகுவாக சர்வதேச மையமாகி விடும.; தேசிய இனப் பிரச்சினை என்பது சர்வதேசப் பிரச்சனையாக இருப்பதால் சர்வதேசத் தலையீடுகள் இல்லாமல் ஆக்கிரமிப்புக்களை நிரந்தரமாக நீக்கி விட முடியாது.

காணிச் சொந்தக்காரர்கள் தையிட்டி விவகாரத்தை தமது சொந்த விவகாரமாகக் கருதாமல் தமிழ் மக்களின் பொது விவகாரமாக கருதி அணுகுதல் வேண்டும.; அரசாங்கத்தின் சூழ்ச்சி வலைக்குள் விழுந்து போராட்டத்தை பலவீனப்படுத்த ஒரு போதும் முற்படக் கூடாது. பேச்சுவார்த்தைகளுக்கு செல்லும் போது துறைசார் நிபுணர்களின் ஆலோசனைகளைப் பெற்றுச் செல்வதே ஆரோக்கியமாக இருக்கும். பேச்சுவார்த்தைக்களம் என்பது இராஜதந்திரக்களம். சாதாரணமான அறிவுடன் அந்தக் களத்தை அணுக முடியாது.

மொத்தத்தில் தையிட்டி விவகாரம் அனைத்து ஆக்கிரமிப்புக்களுக்கான திறவுகோலாக இருக்கப் போகின்றது. தமிழ்த் தேசிய சக்திகள்; இதனைப்புரிந்து கொண்டு செயல்படுவது அவசியம்.

 

 

 

Recommended For You

About the Author: Editor Elukainews