பொதுமக்களின் கடும் எதிர்ப்பால் சோதனையிடப்பட்ட பிரதேச செயலரின் இருப்பிடம்! மலசல கூடத்திலிருந்து 65 லீற்றர் எரிபொருள் மீட்பு.. |

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேச செயலரின் தங்கமிடத்தில் எரிபொருள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கூறி பிரதேச மக்கள் முற்றுகையிட்ட நிலையில் அங்கு நடத்தப்பட்ட சோதனையில் சுமார் 65 லீற்றர் எரிபொருள் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் நேற்றுமாலை இடம்பெற்றுள்ளது. பிரதேச செயலரின் அலுவலகம் அல்லது இருப்பிடத்தில் எரிபொருள் பதுக்கப்பட்டிருப்பதாக தகவலறிந்த பொதுமக்கள் குறிப்பாக இளைஞர்கள் முற்றுகை போராட்டம் நடத்தியிருந்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் பொதுமக்களுடன் கலந்துரையாடிய நிலையில் பொதுமக்கள் சோதனையிடவேண்டும். என விடாப்பிடியாக நின்று கொண்டனர்.

இதனால் பிரதேச செயலரை பொதுமக்கள் அழைத்த நிலையில் தாம் விடுமுறையில் இருப்பதாகவும் திங்கள் கிழமை வந்து சோதிக்கலாம். என பிரதேச செயலர் கூறியுள்ளார். எனினும் மக்கள் விடாப்பிடியாக நின்றுகொண்டனர்.

பின்னர் பிரதே செயலரின் இருப்பிடத்தை சோதனையிட்ட பொலிஸார் மலசல கூடத்திற்குள் பதுக்கிவைக்க்பட்டிருந்த 50 லீற்றர் டீசல், 10 லீற்றர் பெற்றோல் மற்றும் 5 லீற்றர் மண்ணெண்ணெய் ஆகியவற்றை மீட்டுள்ளனர்.

அவற்றை தனது சொந்த பாவனைக்காக வைத்திருப்பதாக பிரதேச செயலர் கூறியபோதும் பொலிஸார் அதனை பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews