தமிழ்த் தேசிய போராட்டத்தின் ஆரம்பகர்த்தா முத்துக்குமாரசுவாமி என அரசியல் ஆய்வாளரும் சட்டதரணியும் சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் இயக்குனருமான
சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார். ஈழ விடுதலை போராடடத்தின் ஆரம்ப கார்தாவான முத்து குமார சுவாமி அமெரிக்காவில் மரணமடைத்துள்ளார். அவரது நினைவாக எழுதிய கட்டுரையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதன் முழு விபரமும் வருமாறு.

தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப கர்த்தாக்களில் ஒருவரும் சர்வதேச மன்னிப்புச் சபையின் தலைமைச் செயலகத்தில் பணியாற்றியவருமான சட்டத்தரணி தம்பித்துரை முத்துகுமாரசுவாமி கடந்த 20 ம் திகதி செவ்வாய்க்கிழமை அமெரிக்காவில் காலமானார். திருநெல்வேலியைச் சேர்ந்த மாவட்ட நீதிபதி தம்பித்துரையின் மகனான இவர் பதின்ம வயதிலிருந்தே விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றார். நீண்ட காலம் சிறை வாசமும் அனுபவித்தார். பதின்ம வயதில் விடுதலைப் போராட்ட செயற்பாட்டில் பங்கேற்று இறக்கும் வரை அதற்காக கடுமையாக உழைத்தார்.
அமெரிக்காவில் நாடு கடந்த தமிமீழ அரசின் ஆலோசகராகவும் கடமையாற்றிய இவர் அமெரிக்க வெளிவிவகார அமைச்சுடன் நெருங்கிய தொடர்பிலும் இருந்தார். தமிழ்த் தேசிய அரசியலின் நியாயப்பாடுகளை, துயரங்களை வெளிவிவகார அமைச்சின் கவனத்திற்கும் சொல்வதில் இவரின் பங்கு அளப்பரியதாக இருந்தது. குமார் என பெரியவர்களினாலும் நண்பர்களினாலும் அழைக்கப்படுகின்ற முத்துக்குமாரசுவாமி தலைமைத்துவ ஆற்றலிலும் ஆங்கிலப் புலமையிலும் கைதேர்ந்தவராக இருந்தார். இறக்கும் வரை இக்கட்டுரையாளருடன் தொடர்பில் இருந்த குமாரின் இழப்பு தமிழ்த் தேசிய அரசியலைப் பொறுத்தவரை பேரிழப்பாகும்.
தமிழ் அரசியல் இலங்கையர் என்ற அடையாளத்தை பேணிய காலகட்டம், தமிழ் இன அரசியலை ஆரம்பித்த காலகட்டம், தமிழின அரசியலை தமிழ்த் தேசிய அரசியலாக வளர்த்த காலகட்டம், விடுதலைப் போராட்டத்தை நடாத்திய காலகட்டம், என நான்கு காலகட்டங்களாக வளர்ந்து வந்திருக்கின்றது. இதில் நான்காவது காலகட்டத்தில் ஆரம்ப கர்த்தாக்களில் ஒருவராக குமார் விளங்கினார்.
இக்காலகட்டம் 1968 ஆம் ஆண்டு ஆரம்பமான தமிழ் அரசியலை தலைமையேற்று நடாத்திய தமிழரசுக் கட்சி 1965 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தில் இணைந்து பங்காளியாக மாறியது. கட்சியின் சார்பில் மு.திருச்செல்வம் உள்ளூராட்சி அமைச்சராகவும் பதவியேற்றார். ஜே.ஆர்.ஜெயவர்த்தனா யாழ்ப்பாணம் வந்தபோது அவரை சப்பரத்தில் அமர்த்தி யாழ் நகரிலிருந்து காங்கேசன்துறை வரை ஊர்வலமாக அழைத்துச் சென்றனர் தமிழரசு கட்சியினர்.
இதனைப் பார்த்து சகித்துக் கொள்ளாத இளைஞர்கள் சிலர் ஒன்று சேர்ந்து கட்சி சாராத வகையில் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்க முனைந்தனர். மூன்று தீர்மானங்களை அவர்கள் முக்கியமாக நிறைவேற்றினர். ஒன்று சமஸ்டிக் கோரிக்கையை கைவிட்டு விட்டு தனிநாட்டுப் போராட்டத்தை முன்னெடுத்தல், அகிம்சைப் போராட்டத்தை கைவிட்டு விட்டு ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்தல், கட்சி சாராத வகையில் விடுதலை இயக்கமொன்றை கட்டியெழுப்புதல் என்பனவே இம் மூன்று தீர்மானங்களும் ஆகும். இதற்காக 1968 ஆம் ஆண்டு “ஈழத்தமிழர் இளைஞர் இயக்கம்” என்ற அமைப்பை உருவாக்கினர். கட்சி அரசியலுக்கு அப்பால் விடுதலைப் போராட்டத்தை நடாத்துவதற்காக முதன் முதலில் ஆரம்பிக்கப்பட்ட அரசியல் இயக்கம் இதுவேயாகும். இதன் மத்திய குழுவில் முத்துக்குமாரசுவாமியும் ஒருவராக விளங்கினார் இவரை விட இலங்கை மன்னன் மகாஉத்தமன், சிவகுமாரன், மைக்கல் தம்பிநாயகம் ஆகியோரும் மத்திய குழுவில் அங்கம் வகித்தனர்.
இந்த அமைப்பு பிரதானமாக இரண்டு போராட்டங்களை நடாத்தியது. ஒன்று சியவச சுவீப்ரிக்கற் விற்பனைக்கு எதிரான போராட்டம், இரண்டாவது தமிழ்ப் பல்கலைக்கழகம் திருகோணமலையில் உருவாக்கப்படல் வேண்டும் என வலியுறுத்திய போராட்டம். அன்றைய காலத்தில் கல்வி அமைச்சினூடாக மாணவர்கள் மத்தியில் “சியவச” என்ற பெயரில் சுவீப்ரிக்கற் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த விற்பனையின் மூலம் கிடைக்கும் பணம் பின்தங்கிய பாடசாலைகளின் அபிவிருத்திக்கு பயன்படுத்தப்படும் எனக் கூறப்பட்டது. ஈழத்தமிழர் இளைஞர் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் தமிழ் மாணவர்களின் பணத்தை சிங்களப் பகுதிகளில் செலவிட இருக்கின்றனர் எனக் கூறி இதனைக் கண்டித்து போராட்டத்தை நடாத்தினர். கொக்குவில் சந்தியிலிருந்து யாழ்ப்பாணம் முற்றவெளி வரை ஊர்வலம் இடம்பெற்றது. ஊர்வலத்தின் முடிவில் பொதுக்கூட்டமும் நடைபெற்றது. சியவச சுவீப்ரிக்கறறும் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது.
திருகோணமலையில் தமிழ்ப் பல்கலைக்கழகம் உருவாக்க வேண்டும் என வலியுறுத்தும் போராட்டம் திருநெல்வேலி சந்தியிலிருந்து யாழ் முற்றவெளி வரை இடம்பெற்றது. 1960 களின் பிற்பகுதியில் தமிழ்ப் பகுதிகளில் பல்கலைக்கழகம் ஒன்றை உருவாக்கப் போவதாக அரசாங்கம் அறிவித்தது. அப் பல்கலைக்கழகம் எத்தகைய பல்கலைக்கழகமாக இருக்க வேண்டும். எங்கே அமைக்க வேண்டும் என்பது தொடர்பில் இரண்டு விதமான கருத்துக்கள் நிலவி இருந்தன. தமிழரசுக் கட்சியை சேர்ந்தவர்கள் அப் பல்கலைக்கழகம் தமிழ் பல்கலைக்கழகமாக இருக்க வேண்டும். அது வடக்கையும், கிழக்கையும் இணைக்கின்ற மைய மாவட்டமான திருகோணமலையில் உருவாக்கப்படல் வேண்டும் என்ற கருத்தை முன்வைத்தனர். இதற்காக திருகோணமலையில் காணிகளையும் ஒழுங்கு செய்திருந்தனர். தலைமைப் பல்கலைக்கழகம் திருகோணமலையில் இருக்கின்ற அதே வேளை பல்கலைக்கழக பீடங்களை யாழ்ப்பாணத்திலும், மட்டக்களப்பிலும் உருவாக்கலாம் என்ற கருத்தையும் முன்வைத்தனர். இதன்படி மருத்துவபீடத்தை யாழ்ப்பாணத்திலும், கலைப்பீடத்தை திருகோணமலையிலும், விஞ்ஞானபீடத்தினை மட்டக்களப்பிலும் உருவாக்கலாம் என்ற ஆலோசனையை முன்வைத்தனர்.
இதற்கு மாறாக அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சியினர் இந்து பல்கலைக்கழகமாக இருக்க வேண்டும் அது யாழ்ப்பாணத்தில் அமைக்கப்படல் வேண்டும் என்ற கருத்தை முன் வைத்தனர். இது தொடர்பான வாதப்பிரதி வாதங்கள் ஊடகங்களிலும் இடம்பெற்றன. ஈழத் தமிழர் இளைஞர் இயக்கத்தினர் தமிழரசுக் கட்சியினரின் நிலைப்பாட்டையே ஆதரித்தனர். இதற்காக முன்னரே கூறியது போல திருநெல்வேலி சந்தையிலிருந்து யாழ் முற்ற வெளிவரை ஊர்வலத்தினையும் நடாத்தினர். “யாழ்ப்பாணத்திற்கு வேண்டாம் பல்கலைக்கழகம். திருமலைக்கே வேண்டும் பல்கலைக்கழகம்” என்ற கோசங்களும் எழுப்பப்பட்டன. ஊர்வலத்தின் முடிவில் பொதுக்கூட்டமும் இடம்பெற்றது. இந்த இரண்டு போராட்டங்களையும் தலைமையேற்று நடாத்துவதில் முத்துக்குமாரசுவாமி முன்னிலை வகித்தார். ஊர்வலம் முடிந்து வீடு திரும்பிய போது யாழ்ப்பாணத்துக்காக பல்கலைக்கழகம் வேண்டாம் எனக் கூறுகின்றீர்கள் என ஊரவர்கள் தங்களை ஏசியதாகவும் முத்துக்குமாரசுவாமி இக் கட்டுரையாளரிடம் தெரிவித்தார்.
1970 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் வந்தது. தேர்தல்கள் அமைப்புக்களை சிதறடிப்பது இங்கேயும் இடம் பெற்றது. ஈழத் தமிழர் இளைஞர் இயக்கத்தினர் மத்தியில் தமிழ் அரசியலை பாதுகாக்க வேண்டுமென்றால் தேர்தலில் பங்கு பற்ற வேண்டும் என்ற வாதத்தினை சிலர் முன்னெடுத்தனர். இதனால் இரண்டு வருடங்களிலேயே ஈழத் தமிழர் இளைஞர் இயக்கம் சிதைவடைந்தது. அமைப்பில் இருந்தவர்களில் பலர் தமிழரசுக் கட்சிக்கு ஆதரவாகவும் சிலர் தமிழ் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாகவும் பிரச்சாரம் செய்தனர். இந்தத் தேர்தலில் தமிழரசுக் கட்சி பின்னடைவைச் சந்தித்தது. அதன் பொதுச் செயலாளர் அ.அமிர்தலிங்கம் தனது சொந்தத் தொகுதியான வட்டுக்கோட்டைத் தொகுதியில் தோல்வியடைந்தார். இப்பின்னடவைக்கு இளைஞர்கள் கட்சியிலிருந்து விலகியிருந்தமையும் ஒரு காரணமாகும்.
தேர்தலை தொடர்ந்து பதவிக்கு வந்த சிறிமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான கூட்டு முன்னணி அரசாங்கம் உயர்கல்வியில் மொழிவாரித்தரப்படுத்தல் முறையைக் கொண்டு வந்தது. இதன்படி விஞ்ஞான பீடங்களுக்கான பல்கலைக்கழக அனுமதியில் சிங்கள மொழி மூல மாணவர்கள் குறைந்தளவு புள்ளிகளையும் தமிழ் மொழி மூல மாணவர்கள் கூடுதலான புள்ளிகளையும் எடுக்க வேண்டியிருந்தது. இதனை எதிர்த்து மாணவர்களும் இளைஞர்களும் கிளர்ந்தெழுந்தனர. 1970 ஆம் ஆண்டு கார்த்திகை இதற்காக தமிழ் மாணவர் பேரவை என்ற அமைப்பை உருவாக்கினர். இதன் மத்திய குழுவிலும் முத்துக்குமாரசுவாமி அங்கம் வகித்தார். இவருடன் உரும்பிராய் சிவகுமாரன், சத்தியசீலன் அரியரத்தினம் ஆகியோரும் அங்கம் வகித்தனர். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனும் இதனுடன் இணைந்து செயற்பட்டார். இதனை எதிர்த்து மாபெரும் ஆர்ப்பாட்ட ஊர்வலம் 1970 ம் ஆண்டு கார்த்திகை மாதம் 24ம் திகதி இடம்பெற்றது. பத்தாயிரம் வரையான மாணவர்களும், இளைஞர்களும் இப் போராட்டத்தில் கலந்து கொண்டனர். கல்வி அமைச்சர் பதியுதீன் முகமதின் கொடும்பாவி ஊர்வலமாகக் கொண்டுவரப்பட்டு முற்ற வெளியில் எரிக்கப்பட்டது. கண்டனக் கூட்டமும் இடம்பெற்றது. ஊர்வலத்திற்காக ஓலி பெருக்கியில் பிரச்சாரம் செய்த போது முத்துக்குமாரசுவாமியும், உரும்பிராய் சிவகுமாரனும் கைது செய்யப்பட்டனர். பின்னர் எச்சரிக்கை செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர்.
தமிழ் மாணவர் பேரவை ஆயுதப் போராட்ட நடவடிக்கைகளில் ஈடுபடத் தொடங்கியது. பெரிய ஆயுதங்கள் எவையும் அவர்களிடம் இருக்கவில்லை. காட்டுத் துப்பாக்கிகளும், வெடி குண்டுகளுமே அவர்களிடம் இருந்தன. கல்வியங்காடு கொண்டலடி வைரவ கோவில், திருநெல்வேலி மாயானம் என்பன இவர்களின் ஆயுத சேமிப்பு மையங்களாக இருந்தன. முத்துக்குமாரசுவாமியும். இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டார். 1972 ஆம் ஆண்டு குடியரசு தினம் அனுஸ்டிக்கப்பட்ட போது தொடர்ந்து மூன்று நாட்கள் பணிப் புறக்கணிப்பு போராட்டத்திற்கு தமிழர் கூட்டணி அழைப்பு விடுத்தது. பணிப்பகிஸ்பரிப்பு போராட்டத்தை வெற்றியாக்குவதில் தமிழ் மாணவர் பேரவையினர் முழு மூச்சாக உழைத்தனர். பணிப்பகிஸ்கரிப்பை மீறி செயற்பட்ட இலங்கைப் போக்குவரத்துச் சேவை பேருந்துகளுக்கு பெற்றோல் குண்டுகள் வீசப்பட்டன. இந்த வன்முறைகள் காரணமாக முத்துக்குமாரசுவாமி உட்பட பல இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். மாவை சேனாதிராஜாவும், முத்துக்குமாரசுவாமியும் ஒரே கைவிலங்கில் பிணைக்கப்பட்டு விமான மூலம் கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டனர். நான்காம் மாடியில் விசாரிக்கப்பட்டு சித்திரவதைகளுக்கும் உள்ளாக்கப்பட்டனர். தொடர்ந்து தமிழ் மாணவர் பேரவையைச் சேர்ந்த 42 இளைஞர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தமிழ் மாணவர் பேரவை பலவீனமடையத் தொடங்கியது.
கைது செய்யப்பட்ட இளைஞர்களை விடுதலை செய்வதற்காகவும் விடுதலைப் போராட்டத்தை தொடர்ந்து நடத்துவதற்காகவும் 1973 ஆம் ஆண்டு ஜனவரி 28ம் திகதி தமிழ் இளைஞர் பேரவை உருவாக்கப்பட்டது. முத்துக்குமாரசுவாமி சிறையிலில் இருந்ததினால் தமிழ் இளைஞர் பேரவையின் உருவாக்கத்தில் பங்குபெற முடியவில்லை. சிறையில் இருந்தபடியே தமிழ் இளைஞர் பேரவை முழு ஒத்துழைப்பையும் வழங்கினார். தமிழ் இளைஞர் பேரவையின் மத்திய குழுவில் புஸ்பராஜா வரதராஜப்பெருமாள், தவராசா, பிரான்சிஸ் என்போர் அங்கம் வகித்தனர். சிறையிலுள்ள இளைஞர்களை விடுவிப்பதற்காக தமிழ் இளைஞர் பேரவை 50 நாள் உண்ணாவிரதப் போராட்டத்தை வடக்கு, கிழக்கு, மலையகம் எங்கும் நடாத்தியது. தலவாக்கலையில் உண்ணாவிரதப் போராட்டம் நடாத்திய போது தமிழ் இளைஞர் பேரவையைச் சேர்ந்த சி.புஸ்பராஜா பொலீசாரினால் மிகவும் மோசமாகத் தாக்கப்பட்டார்.
1974 ஆம் ஆண்டு தமிழாராய்ச்சி மாநாடு நடத்தப்பட்ட போது அதனை முன்னின்று நடத்துவதில் முத்துக்குமார சுவாமியும், சிவகுமாரனும் கடுமையாக உழைத்தனர். இறுதி நாளன்று 7 பேர் கொலை செய்யப்பட்டதால் சிவகுமாரன் தொடர்ந்து வந்த காலங்களில் ஆயுத நடவடிக்கைகளில் ஈடுபட்டார். இதன் காரணமாக அவர் மரணமடைய வேண்டியும் ஏற்பட்டது. சிவகுமாரனின் மரணம் முத்துக்குமாரசுவாமியை கடுமையாகப் பாதித்தது. இருவரும் இரட்டைக் குதிரைகள் போன்றே செயற்பட்டிருந்தனர். சிவகுமாரனின்; சிலை அமைப்பும் இவரது முயற்சியினாலேயே மேற்கொள்ளப்பட்டது. முதலாவது சிலையினை முத்துக்குமாரசுவாமியே திறந்து வைத்தார்.
தமிழ் இளைஞர் பேரவையை தமிழர் கூட்டணி கையகப்படுத்த முனைந்ததால் அதில் முக்கிய தொழிற்பட்ட இளைஞர்கள் அதிலிருந்து வெளியேறி 1975 ஆம் ஆண்டு யூலை 14ம் திகதி தமிழீழ விடுதலை இயக்கத்தை உருவாக்கினர் (தற்போதைய ரெலோ அல்ல). அதன் மத்திய குழுவில் முத்துக்குமாரசுவாமியும் அங்கம் வகித்தார். அவரை விட சி.புஸ்பராஜா, அ.வரதராஜப்பெருமாள், தங்கமகேந்திரன், சந்திரமோகன் ஆகியோரும் மத்திய குழுவில் அங்கம் வகித்தனர். தமிழீழ விடுதலை இயக்கம் தொடங்கி சிறிது காலத்திலேயே அல்பிரட் துரையப்பாவின் கொலை பிரபாகரன், கிருபாகரன் கலாவதி ஆகியோரால் நடாத்தப்பட்டது. பழையபடி முன்னணியில் நின்று செயற்பட்ட தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். தமிழீழ விடுதலை இயக்கத்தின் மத்திய குழுவில் இருந்த முத்துக்குமாரசுவாமி, அ.வரதராஜப்பெருமாள் சி.புஸ்பராஜா என்போர் கைது செய்யப்பட தங்கமகேந்திரனும், சந்திரமோகன் ஆகியோர் மட்டுமே எஞ்சியிருந்தனர். இவர்கள் ஏனையோரையும் இணைத்து ஆயுத இயக்கத்தை கட்டி எழுப்புவதற்காக புலோலி கிராமிய வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டனர். இதனால் எஞ்சியிருந்தவர்களும் கைது செய்யப்பட தமிழீழ விடுதலை இயக்கம் பலவீனமடைந்தது.
முத்துக்குமாரசுவாமி விடுதலை செய்யப்பட்டவுடன் குட்டிமணி, தங்கத்துரை ஆகியோர் முத்துக்குமார சுவாமியை சந்தித்து தமிழீழ விடுதலை இயக்கம் என்ற பெயரை தாங்கள் பயன்படுத்த அனுமதி தருமாறு வேண்டினர். அதற்கு இணங்க அனுமதி கொடுக்கப்பட்டது. இதன்பின்னர் தமிழீழ விடுதலை இயக்கத்துடனேயே அவர் பயணித்தார். 1977 ஆம் ஆண்டு இனக் கலவரம் இடம் பெற்ற போது இவர் கொழும்பு சட்டக் கல்லூரியில் கல்வி கற்றுக் கொண்டிருந்தார். கொழும்பு இந்துக்கல்லூரி அகதிகள் முகாமை பொறுப்பேற்று நடாத்தினார். அகதிகள் லங்காராணி கப்பலில் யாழ்ப்பாணம் அனுப்பப்பட்ட போது அவர்களை பொறுப்பேற்று யாழ்ப்பாணம் அழைத்து வந்தவரும் இவர் தான். அருளர் எழுதிய லங்காராணி நாவலில் குமார் என்ற பாத்திரம் இவர்தான்.
குட்டிமணி தங்கத்துரை ஆகியோர் மணல்காட்டில் கைது செய்யப்பட்ட பின்னர் முத்துக்குமாரசுவாமி அமெரிக்காவுக்கு தப்பி ஓடினார். அங்கு சர்வதேசக் சட்டத்தில் முதுமானி பட்டத்தை பெற்றதோடு சர்வதேச மன்னிப்புச் சபையின் தலைமைச் செயலகத்திலும் சட்டவாளராகப் பணியாற்றினார். அந்தப் பணி காரணமாக பல்வேறு நாடுகளுக்கும் தேர்தல் கண்காணிப்பாளராகவும், போர் நிறுத்த கண்காணிப்பாளராகவும், சென்றிருக்கின்றார். அமெரிக்காவில் வசித்த போதே நாடு கடந்த தமிழீழ அரசின் ஆலோசகராகவும் செயற்பட்டார். இன அழிப்புக்கான பொறுப்புக் கூறலை வலியுறுத்தி ஜெனிவாவிற்கும் பல தடவை சென்றிருந்தார். இந்தப் பணிகளை மேற்கொண்டிருந்த போதே கடந்த 20ஆம் திகதி மரணமானார்.
இவ்வாறு தனது வாழ்நாள் முழுவதும் தமிழ்த் தேசிய விடுதலைக்காக செயற்பட்ட முத்துக்குமார சுவாமியின் நாமம் தமிழ்த் தேசிய அரசியல் இருக்கும் வரை நிலைத்திருக்கும்.