இலங்கை கடற்பரப்பிலிருந்து வெளியேறிய சீன உரக் கப்பல்!

சீன உரத்தை ஏற்றிய கப்பல்  இலங்கை கடற்பரப்பிலிருந்து வெளியேறியுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மேன்முறையீட்டு நீதிமன்றிற்கு அறிவித்துள்ளார்.

இலங்கையில் வணிக அனுமதிப் பத்திரத்தை பெற்றுக்கொள்ளாமையினாலேயே  சீன உரத்தை ஏற்றிய கப்பல்  இலங்கை கடற்பரப்பிலிருந்து வெளியேறியுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இலங்கை உர நிறுவனம், சீன உர நிறுவனத்திற்கு மின்னஞ்சல் ஊடாக இது குறித்து அறிவித்துள்ளதகாவும் அவர் தெரிவித்துள்ளார்.

சீன உர நிறுவனத்திற்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக சீன தூதர், கடிதமொன்றின் ஊடாக தமக்கு அறிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது..

சீனாவிலிருந்து உரம் ஏற்றிக்கொண்டு இலங்கை கடற்பரப்பிற்கு வருகைத் தந்த கப்பல் தொடர்பில், கடந்த காலங்களில் அதிகளவில் பேசப்பட்ட நிலையில், தற்போது அந்த கப்பலுக்கு என்ன நேர்ந்தது என்பது குறித்து பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்த கப்பலில் தீங்கு விளைவிக்கும் பக்டீரியாக்கள் உள்ளதாக தெரிவித்து, அந்த கப்பலில் கொண்டு வரப்பட்ட விவசாய உரத்தை இலங்கை தொடர்ச்சியாக நிராகரித்து வந்தது.

இதையடுத்து, விவசாய உரத்தை ஏற்றி வந்த கப்பல் இலங்கை கடற்பரப்பில் சுமார் 70 நாட்கள் இருந்த நிலையிலேயே, தற்போது அந்த கப்பல் இலங்கை கடற்பரப்பிலிருந்து மாயமாகியுள்ளது. இவ்வாறு மாயமான கப்பல் எங்கே சென்றது என்பது குறித்து தற்போது பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இலங்கையினால் நிராகரிக்கப்பட்ட சீன செயற்கை விவசாய உரத்தை ஏற்றிய கப்பலான ஹிப்போ ஸ்பிரிட் கப்பல், தற்போது சிங்கப்பூர் நோக்கி பயணித்து வருகிறது.

கடல்மார்க்கத்தை வெளியிடும் இணையத்தளங்களின் தரவுகளில், எதிர்வரும் 10ம் திகதி இந்த கப்பல் சிங்கப்பூரைச் சென்றடையும் என தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை கடற்பரப்பிற்குள் சுமார் 70 நாட்களாக நிலை கொண்டிருந்த இந்த கப்பல், கடந்த 4ம் திகதி சிங்கப்பூர் நோக்கி தனது பயணத்தை ஆரம்பித்துள்ளது.

மத்தியஸ்தம் செய்வது மற்றும் மாதிரிகளை வழங்கும் நோக்கில் இந்த கப்பல் சிங்கப்பூர் நோக்கி பயணிப்பதாக செயற்கை உரத்தை இலங்கைக்கு அனுப்பிய சீனாவின் சிந்தவோ சிவின் பயோடெக் நிறுவனம் தெரிவிக்கின்றது.

தமக்கு ஏற்பட்ட நட்டத்திற்காக சீனாவின் சிந்தவோ சிவின் பயோடெக் நிறுவனம், மத்தியஸ்த சபையின் ஊடாக 8 மில்லியன் டொலர் நட்டஈட்டை கோரியுள்ளது. வரையறுக்கப்பட்ட வணிக உர நிறுவனத்திடமிருந்தே இந்த நட்டஈடு கோரப்பட்டுள்ளது.

செயற்கை உரத்தை கொள்வனவு செய்யும் உடன்படிக்கையை இலங்கை அரசாங்கம் மீறியுள்ளதாக சிந்தவோ சிவின் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், உரத்தின் பெறுமதி, கப்பல் கட்டணம், மத்தியஸ்தத்திற்காக செலவிடப்படும் கட்டணம் மற்றும் வட்டி ஆகியன உள்ளடங்களாகவே இந்த நட்டஈடு கோரப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews