தமிழக முதல்வரின் இலங்கை தொடர்பான தீர்மானங்கள் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளன- இராதா எம்.பி…!

இலங்கையின் புலம்பெயர் தமிழர்கள் தொடர்பாக தமிழ்நாடு அரசாங்கம் எடுத்துவருகின்ற நடவடிக்கைகள் தொடர்பாகவும் முகாம்களிலும் அதற்கு வெளியிலும் இருக்கின்ற தமிழர்கள் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் மிகுந்த அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றார். இந்தச் செயற்பாடுகள் காரணமாக ஒரு புதிய நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்று, மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். இதனை நடைமுறைப்படுத்தி அகதிகள் என்ற அந்தஸ்தை நீக்கி அவர்களையும் இந்தியர்களாக அல்லது இலங்கையில் கௌரவமாக வாழக்கூடிய ஒரு சூழ்நிலையை முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசாங்கம் மேற்கொண்டு வருவதை பாராட்டுகின்றேன் என்றும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையில்,

எங்களுடைய தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கூறியிருப்பது போல தமிழ்நாடு அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம்.

நாங்கள் இலங்கையில் ஓர் அமைப்பாக அதாவது தமிழ் முற்போக்குக் கூட்டணியாக செயற்பட்டு வருவதன் காரணமாக, கடந்த காலங்களில் பல விடயங்களை மக்களுக்காக சாதித்திருக்கின்றோம்.

அந்தவகையில் தமிழ் முற்போக்குக் கூட்டணியாக நாங்கள் தமிழ்நாடு அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவது என்பது மிகவும் இலகுவான காரியமாகும். நாடாளுமன்றத்தில் ஐந்து உறுப்பினர்கள் அங்கத்துவம் வகிக்கின்றோம். மேலும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் எங்களுடன் இணைந்து செயற்படுவதில் எந்தவிதமான சிக்கலும் இருக்காது.

எனவே பல்வேறு காரணங்களால் இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்துள்ள வடக்கு, கிழக்கு மக்கள், மலையக மக்கள் கடந்த காலங்களில் தமிழ்நாட்டில் முகாம்களில் பல சிரமங்களை அனுபவித்து வருகின்றார்கள்.

அவர்கள் அகதிகளாக சென்ற நாடுகளிலும் சரியான உதவிகள் கிடைக்கவில்லை. இலங்கைக்கு திரும்பி வருவதிலும் பல பொருளாதார சிக்கல்கள். இவ்வாறான பல்வேறு சிரமங்களை சந்தித்திருந்த வேளையில், தி.மு.க வின் தேர்தல் வெற்றி, அதற்கு பின்னரான தமிழ்நாடு அரசாங்கத்தின் செயற்பாடுகள் என்பன பல புதிய நம்பிக்கைகளை இவர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

முதலமைச்சர் ஸ்டாலின் முதன்முறையாக தனது அரசாங்கத்தின் வெளிநாட்டு வாழ் தமிழர்களுக்காக ஓர் அமைச்சை ஏற்படுத்தயுள்ளமை பாராட்டுக்குறிய விடயமாகும். இந்த அமைச்சின் மூலமாக பல பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன.

எனவே இந்த அனைத்து முன்னெடுப்புகளையும் செய்கின்ற தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உட்பட அவருடைய அரசாங்கத்துக்கு, இலங்கை தமிழ் மக்களின் சார்பாக நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவிக்கின்ற அதேவேளை தொடர்ந்தும் இந்தச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews