இன ஒடுக்குமுறைக்கு வயது 100 சி.அ.யோதிலிங்கம்…!

இன ஒடுக்குமுறைக்கு வயது 100
சி.அ.யோதிலிங்கம்

தமிழர்கள் முதலாவது கட்டத்தில் இலங்கையர் என்ற
அடையாள அரசியலையும், இரண டாவது கட்டத்தில் தமிழர்களுக்கு சமவாய்ப்பைக் கோருகின்ற இன அடையாள
அரசியலையும், மூன்றாவது கட்டத்தில் தமிழர் தாயகத்தை
வரையறுத்து அதற்கு அதிகாரத்தைக் கோருகின்ற சமஸ்டி அரசியலையும், நான்காவது கட்டத்தில் இலங்கை அதிகாரக் கட்டமைப்பிலிருந்து விலகுகின்ற தனிநாட்டு அரசியலையும்
முன்னெடுத்தனர். தற்போது ஐந்தாவது கட்டத்தில் சுயநிர்ணயமுடைய சமஸ்டி அரசியலை முன்னெடுக்கின்றனர்.
இலங்கைத்தமிழ் மக்களின் அரசியல் வரலாறு நீண்டது.
1833 ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட கோல்புறூக் அரசியல் சீர்திருத்தத்துடன் இலங்கையின் நவீன வரலாறு
ஆரம்பமாகியது. இத்தனை தோற்றத்துடன் தமிழ் மக்களின் நவீன
அரசியல் வரலாறும் ஆரம்பித்து விட்டது எனலாம். தமிழ் மக்களினுடைய அரசியல் வரலாற்றை அதன் பரிணாம
வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு ஐந்து காலகட்டங்களாக பிரிக்கலாம்.
1833 – 1921 வரையான காலகட்டம், 1921 – 1949 வரையான காலகட்டம், 1949 – 1968 வரையான காலகட்டம், 1968– 2009 வரையான காலகட்டம். 2009 க்கு பின்னரான காலகட்டம் என்பவையே அவையாகும். 2021 ம் ஆண்டு
ஆகஸ்ட் 15 ம் திகதியுடன் இன ஒடுக்கு முறை ஆரம்பிக்கப்பட்டு 100 வது வருடமாகினறது.

1921 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ம் திகதி சேர்.பொன்.அருணாசலம் தமிழர்
மாகஜனசபையை உருவாக்கி இன அரசியலை ஆரம்பித்து வைத்தார். எனவே இவ் நூற்றாண்டில் தமிழர் அரசியலை மீள்வாசிப்பு செய்து ஒழுங்குபடுத்த வேண்டியது
அவசியமாகின்றது.
1833 – 1921 வரையான முதலாவது காலகட்டத்தில் தமிழ்
மக்கள் இன அடையாள அரசியலை நகர்த்தியிருக்கவில்லை.
அவர்கள் அரசியல் தளத்தில் இலங்கையர் என்ற அடையாளத்தையே பேணினர். இதனால் அக்காலகட்டத்தில்
தமிழ் மக்களின் தலைவர்களாக இருந்தவர்கள் தமிழ் மக்களுக்கு மட்டும் தலைவர்களாக இருக்கவில்லை. முழு
இலங்கைத்தீவுக்கும் தலைவர்களாக விளங்கினர். சேர். முத்துக்குமாரசுவாமி, சேர்.பொன்இராமநாதன்,
சேர்.பொனஅருணாசலம் என்போர் இதில் முக்கியமானவர்களாவர். இக்காலகட்ட தமிழ் அரசியலை
நகர்த்திய முக்கிய தலைவர்கள் இவர்கள் தான்.இவர்களில் அருணாசலத்தின் முக்கியத்துவம் அதி உயர்ந்தது. அவரே இலங்கையில் சமூகமாற்ற அரசியலின்
தந்தையாகவும், இலங்கை தேசிய இயக்க அரசியலின் தந்தையாகவும், தமிழ் இன அரசியலின் தந்தையாகவும்
விளங்கினார்.

ஏ.ஈ.குணசிங்கா போன்ற
தொழிற்சங்கத்தலைவர்கள் இவரைப் பின்பற்றியே அரசியலுக்கு வந்தனர்.
1919 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 11 ம் திகதி இலங்கையின் முதலாவது தேசிய இயக்கமான இலங்கைத்தேசிய காங்கிரஸ் உருவாக்கப்பட்டது. இதன் முதலாவது தலைவராக அருணாசலம் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டார்.
இலங்கைத்தேசிய காங்கிரசை உருவாக்குவதற்காக பல்வேறு
அமைப்புகளுடனும் பேச்சுவார்த்தை நடாத்தப்பட்டது. இதன்
அடிப்படையில் தமிழர்களின் முக்கிய அமைப்பாக இருந்த யாழ்ப்பாணச் சங்கத்துடனும் பேச்சுவார்த்தை நடாத்தப்பட்டது. யாழ்ப்பாணச்சங்கம் தமிழ் மக்களின் அரசியல்
அபிலாசைகளை முன்னெடுப்பதற்காக 1905 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 06 ம் திகதி யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி
மண்டபத்தில் உருவாக்கப்பட்டது. கும்பகோணம் கல்லூரியின்
முன்னாள் ஆசிரியர் ஜேம்ஸ்ஹென்மன் முதலாவது தலைவராக விளங்கினார். சட்டத்தரணிகளான ஹோமர் வன்னியசிங்கமும், காசிப்பிள்ளையும் உப தலைவர்களாக விளங்கினர்.
சிங்களத்தலைவர்களுடனான பேச்சுவார்த்தையின் போது
யாழ்ப்பாணம் சங்கம் வடக்கு கிழக்கில் தமிழ் மக்களுக்கு போதுமான பிரதிநிதிததுவமும்  மேல்மாகாணத்தில ; ஒரு பிரதிநிதித்துவமும் தரப்பட வேண்டும் என்ற கோரிக்கையை
முன்வைத்தது. சிங்களத் தலைவர்கள் அதனை ஏற்றுக் கொண்டனர். இலங்கைத்தேசிய சங்கத்தின் சார்பில்
ஜேம்ஸ்ப்பீரிசும், இலங்கை அரசியல் சீர்திருத்தக்கழகத்தின்
சார்பில் ஈ.ஜே.சமரவிக்கிரமவும், அதற்கான உறுதி மொழியை
எழுத்தில் வழங்கினர். அருணாசலம் நடுவராகச் செயல்பட்டு
இந்த உறுதி மொழிக்கு உத்தரவாதம் வழங்கினார். இதன்  பின்னரே யாழ்ப்பாணச்சங்கம் இலங்கைத் தேசிய காங்கிரசில் இணைவதற்கு இணங்கியது. அருணாசலம் இது பற்றி “சிலோன் ஒப்சேவர்” பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில் பின்வருமாறு கூறினார் “தமது நிலை பாதுகாக்கப்படும் வரை இலங்கைத்தேசிய
காங்கிரசில் சேருவதற்கு ஆரம்பத்தில் தமிழர்கள் மறுத்தனா்.
சிங்களத்தலைவர்களான ஜேம்ஸ்ப்பீரிஸ், ஈ.ஜே.சமரவிக்கிரம இருவரினாலும் தமிழர்களுக்கு சிங்களப்
பெரும்பான்மையினரால் நீதியானதும், தாராளதுமான ஏற்பாடுகள் வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்ட பின்னர்
எனது சொந்தச் செல்வாக்கினாலேயே தமிழர்கள் இதில் சேர்வதற்கு இணங்கினர். 1918 டிசம்பரில்
யாழ்ப்பாணச்சங்கத்திற்கு எழுத்தில் உறுதி மொழி வழங்கப்பட்டது. நானே இந்த உறுதி மொழிக்கு உத்தரவாதம்
அளித்தேன், அக்காலகட்டத்தில் சட்ட நிரூபண சபையின்
தமிழ்ப்பிரதிநிதியாக இருந்த ஏ.சபாபதிக்கு அனுப்பப்பட்ட
கடிதத்திலும் இவ் உறுதி மொழி வழங்கப்பட்டது. அந்தக்
கடிதத்தில் பின்வருமாறு கூறப்பட்டிருந்தது. “எங்களது உறுதி
மொழியின்படி உங்களுக்கு வடமாகாணத்தில் மூன்று
ஆசனங்களும், கிழக்கு மாகாணத்தில் இரு ஆசனங்களும்
விரும்பினால்  இவற்றைக் கூட்டலாம், மேல் மாகாணத்தில் பிரதேச தொகுதி அடிப்படையில் ஒரு ஆசனம் ஒதுக்கப்படவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.
சிங்களத்தலைவர்கள் இனவாரிப் பிரதிநிதித்துவததை நீக்கி பிரதேசவாரிப் பிரதிநிதித்துவத்தை அறிமுகப் படுத்துவதிலும், சுயாட்சி அதிகாரங்களைப்பெறுவதிலுமேயே அதிக அக்கறை காட்டினர்.
தமிழர்கள் அதற்கு இடைஞ்சலாக இருக்கக் கூடாது என்பற்காகவே தமிழர்களை சமாளிக்க முற்பட்டனர்.
அருணாசலத்தின் தமையனாரான சேர் பொன் இராமநாதன்
பிரதேசவாரிப்பிரதிநிதிதத்துவத்தை எதிர்த்தார்.  அருணாசலத்திடம் நேரடியாகவே “அருணி ஆபத்தான
செயற்பாட்டில் இறங்குகின்றாய்” எனக் கண்டித்தார் ஆனால் அருணாச்சலத்திற்கு சிங்களத் தலைவர்கிடம் அளவு கடந்த
நம்பிக்கை இருந்தது. 1920 ம் ஆண்டு தேசாதிபதியாக இருந்த “மானிங்கினால்” மானிங் அரசியல் சிர்திருத்தம் அறிமுகப்படுத்தப்பட்டது. அது இனவாரிப் பிரதிநிதிதத்துவ முறையையும், பிரதேசவாரிப் பிரதிநிதிதத்துவ முறையையும் இணைந்த கலப்புபிரதிநிதிதத்துவ முறையை அறிமுகம் செய்தது.
பிரதேசவாரிப்பிரதிநிதிதத்துவ முறையின் கீழ் 11 பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டது. ஒவ்வொரு மாகாணத்திற்கும்
ஒவ்வொரு பிரதிநிதித்துவம் வழங்கப்பட்ட அதே வேளை மேல் மாகாணம் சனத்தொகை கூடிய மாகாணமாக இருந்தமையினால் மூன்று பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டது.
மேல் மாகாணத்தில் மூன்று பிரதிநிதித்துவத்தில் ஒரு
பிரதிநிதித்துவத்தை முன்னர் உறுதி மொழி வழங்கியதற்கு
இணங்க தமிழர்களுக்கு வழங்கப்பட வேண்டும். என்ற கோரிக்கை தமிழர்களினால் முன் வைக்கப்பட்டது.
சிங்களத்தலைவர்கள் தமிழர்களின் கோரிக்கையை நிராகரித்தனா் இலங்கைத்தேசிய காங்கிரஸ் உருவாகுவதற்கு முன்னர் அளித்த உறுதி மொழிக்கு இலங்கைத்தேசிய
காங்கிரஸ் பொறுப்பல்ல என கைவிரித்தனர். அருணாசலம்
பலத்த ஏமாற்றமடைந்தார். ஏ.ஈ.குணசிங்காவின் முயற்சிகளினால் சிலர் அருணாச்சலத்தை சமாதானம் செய்து ஒரு பிரதிநிதித்துவம் தருவதாகக் கூறினர். அருணாசலமும்
அதனை நம்பி வேட்மனுத்தாக்கல் செய்யச் சென்றார். அங்கு
இலங்கைத்தேசிய காங்கிரஸ் சார்பில் ஒரு சிங்களவர் ஏற்கனவே வேட்புமனுத்தாக்கல் செய்திருந்தார். அருணாசலத்திற்கு கோபம் தலைக்கேறிவிட்டது. பிரமாணம் பிரமாணமாகவே இருக்க வேண்டும்
சிங்களத்தலைவர்கள் அதனை மீறிவிட்டனர். இனிமேல்
இவர்களுடன் இணைந்து தமிழர்கள் அரசியல் செய்ய முடியாது. தனி வழி அரசியலே ஒரே வழி எனக் கூறி
இலங்கைத்தேசிய காங்கிரசிலிருங்து வெளியேறினார். இலங்கைத்தேசிய காங்கிரசின் அடிப்படை உறுப்பினர்
பதவியிலிருந்தும் விலகினார். கோபத்தின் உச்ச நிலையில்
“தமிழீழமே தமிழர்களுக்கு ஒரேயொரு தீர்வு”எனக்கூறியதாகவும் தகவல். ஈழவேந்தன் இத்தகவலை தனது
நூலில் கூறியிருக்கிறார். கட்டுரையாளரினால் இத்தகவலை
உறுதிப்படுத்தமுடியவில்லை.
இலங்கைத்தேசிய காங்கிரசிலிருந்து வெளியேறிய அருணாசலம் 1921 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ம் திகதி
யாழ்ப்பாணத்தில் “தமிழர்மகாஜனசபையை” உருவாக்கினார்.  இதற்கான கூட்டம் 1921 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ம்
திகதி யாழ்ப்பாணம் “றிட்ஜ்வே” மண்டபத்தில் இடம் பெற்றது.
மாலை 4.30 மணிக்கு கூட்டம் ஆரம்பமானது. மக்கள் கூட்டம்
அதிகமாக இருந்ததினால் திறந்த வெளிக்கு கூடடம் மாற்றப்பட்டது. இலங்கையின் அனைத்து
மாவட்டங்களிலிருந்தும் தமிழ்ப்பிரதிநிதிகள் கூட்டத்தில் கலந்து
கொண்டனர். கூட்டத்திற்கு அருணாசலமும்,  அம்பலவாணர்
கனகசபையும் வந்த போது மக்கள் உற்சாக மிகுதியினால்
எழுந்த கோஷம் எழுப்பி கரகோஷம் செய்தனர்.
கூட்டத்திற்கு தலைமை வகிக்கவென அம்பலவாணர் கனகசபை ஏக மனதாக தெரிவு செய்யப்பட்டார்.
வை.துரைசுவாமி முதலாவது தீர்மானத்தை பின்வருமாறு
முன்மொழிந்தார். “தமிழர்களின் அரசியல் ,சமூக, கல்வி,
பொருளாதார பொது நலனை மேம்படுத்துவதற்கு தமிழர்
மகாஜன சபை என அழைக்கப்படும் ஒரு அமைப்பு இலங்கையின் எல்லாப்பாகங்ளிலும் அதன் கிளைகளுடன் உருவாக்கப்படல் வேண்டும் என இலங்கையின் பல்வேறு
பாகங்களிலும் இருந்த வந்து கலந்து கொண்ட தமிழர்களின்
இந்தப் பொதுக்கூட்டம் தீர்மானிக்கின்றது”

தீர்மானம் கூடியிருந்த மக்களினால் ஏக மனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. கூட்டத்தில் தமிழர்மகாஜன சபையின்
தலைவராக சேர்.பொன்.அருணாசலம் ஏக மனதாக தெரிவு
செய்யப்பட்டார். இக்கூட்டத்தையிட்டு ‘உதயதாரகை” பத்திரிகை தனது
ஆசிரியர் தலையங்கத்தில் பின்வருமாறு குறிப்பிட்டது.
“இலங்கையின்  ஒவ்வொரு இன ரீதியான சங்கமும் நாட்டின்
சுயாட்சியினால் தனது இனத்திற்கு கிடைக்க வேண்டிய. நலன்களை அடைவதற்காக உழைக்கின்றது. எமது
தமிழர்மாகாஜன சபையினது நோக்கமும் இதுவேயாகும்” தமிழர் மாகாஜனசபையின் தோற்றத்துடன்  தமிழ் இன அரசியலும் ஆரம்பித்தது விட்டது எனலாம். இன ஒடுக்கு
முறையை முதன் முதலில் அடையாளம் காட்டியது தமிழா் மாகாஜனசபை தான். முன்னரே கூறியது போல இன
ஒடுக்குமுறை ஆரம்பிக்கப்பட்டு கடந்த 15 ம் திகதியுடன் 100
வருடங்கள் ஆகின்றது.
தமிழர் மாகாஜனசபை இலங்கை
ஒற்றையாட்சிக்கட்டமைப்பை ஏற்றுக் கொண்டு அதற்குள் தமிழர்களுக்கு சமவாய்ப்புக்களைக் கோருகின்ற
அரசியலையே முன்னெடுத்தது. அருணாசலம் இதனை
ஆரம்பித்தாலும் 1924 ஆம் ஆண்டு மரணமடைந்ததினால் இக்கால கட்டத்தை முன் நகர்த்தியவர்
ஜீ.ஜீ.பொன்னம்பலமேயாவார். அவரது 50:50 கோரிக்கை இந்த
வகையிலேயே முன்னெடுக்கப்பட்டது.
தமிழ் மக்கள் 1921 ம் ஆண்டை இன ஒடுக்கு முறையின்  100 வது வருடமாக நினைவு கூரப்பட வேண்டும். 1921 ஆகஸ்ட் 15 ஆம் திகதியிலிருந்து ஒரு வருடத்தினை இன ஒடுக்கு
முறையின் நூற்றாண்டாக நினைவு கூர்ந்து ஒடுக்கு முறையிலிருந்து விடுபடுவதற்கான பல்பக்க உரையாடல்களை ஆரம்பிக்க வேண்டும். இதன் மூலம் நூறு ஆண்டுகள்
சென்றாலும் தமிழ் மக்கள் தங்கள் விடுதலையில் உறுதியாக நிற்கின்றனர் என்பதை உலகிற்கு காட்ட வேண்டும்.

Recommended For You

About the Author: Editor Elukainews