ஆசிரியர்களுக்கு ஆதரவாகத் தொழிலாளர்களும் போராட வேண்டும்! – மனோ அழைப்பு

எதிர்வரும் 9ஆம் திகதி அதிபர், ஆசிரியர் தொழிற்சங்க ஒன்றியம் நடத்தும் தேசிய எதிர்ப்பு தின ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவாக தமது சம்பளம், விலைவாசி பிரச்சினைகளையும், ஆசிரியர்களின் பிரச்சினைகளையும் முன்வைத்து, தோட்டத்தொழிலாளர்கள் மலைகளில், தமது வேலைதளங்களில் இருந்தவாறு பகலுணவு வேளையில் ஆர்பாட்டம் செய்ய வேண்டும் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. கோரியுள்ளார்.

தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், பிரதி தலைவர் பழனி திகாம்பரம், ஜ.ம.மு. இரத்தினபுரி அமைப்பாளர் மற்றும் கூட்டணியின் ஆசிரியர் விவகார பொறுப்பாளர் சந்திரகுமார் ஆகியோரை, இலங்கை அதிபர், ஆசிரியர் தொழிற்சங்க ஒன்றியப் பிரதிநிதிகளான வண. யல்வெல பஞ்சாசாகர தேரர், ஜோசப் ஸ்டாலின், மஹிந்த ஜயசிங்க ஆகியோர் உள்ளிட்ட குழுவினர் இன்று சந்தித்து உரையாடினார்கள்.

அதன்போது இலங்கை அதிபர், ஆசிரியர் தொழிற்சங்க ஒன்றியம் எதிர்வரும் 9ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடத்தவிருக்கும் அடையாள தேசிய எதிர்ப்பு தினத்துக்கு, தமிழ் முற்போக்குக் கூட்டணியின் ஆதரவைக் கோரினர்.

இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட தமிழ் முற்போக்குக் கூட்டணி, ஆசிரியர்களின் எதிர்வரும் நவம்பர் 9ஆம் திகதி செவ்வாய்க்கிழமை தேசிய எதிர்ப்பு தின ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவாக தமது சம்பளம், விலைவாசி பிரச்சினைகளையும், ஆசிரியர்களின் பிரச்சினைகளையும் முன்வைத்து, தோட்டத்தொழிலாளர்கள் மலைகளில், தமது வேலைத்தளங்களில் இருந்தவாறு பகலுணவு வேளையில் ஆர்பாட்டம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை விடுப்பதாக கூட்டணி தலைவர் மனோ கணேசன், பிரதித் தலைவர் பழனி திகாம்பரம் ஆகியோர் தெரிவித்தனர்.

அதேவேளை, அதிபர், ஆசிரியர் தொழிற்சங்க ஒன்றியம் பிரதிநிதிகளுக்கு, இன்று தோட்டத் தொழிலாளர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கூட்டணி தலைவர் மனோ கணேசன், பிரதி தலைவர் பழனி திகாம்பரம் ஆகியோர் விரிவாக எடுத்துக் கூறினர். எதிர்காலத்தில் தோட்டத் தொழிலாளர் பிரச்சினைகளையும் பொது தேசிய தொழிற்சங்க வேலைத்திட்டத்தில் இணைத்துக்கொள்ள இது ஒரு ஆரம்பமாக அமைய வேண்டும் எனவும் இரு தரப்பினரும் இணங்கினர்.

Recommended For You

About the Author: Editor Elukainews