ஆசிரியர்களின் போராட்டத்திற்கு அனைவரும் ஆதரவு வழங்க வேண்டும்: இராதாகிருஸ்ணன்.

ஆசிரியர்கள் கடந்த ஒன்றரை மாதமாக தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்ற நியாயமான போராட்டத்திற்கு மலையக மக்கள் முன்னணியும் மலையக தொழிலாளர் முன்னணியும் முழுமையான ஆதரவை வழங்குகின்றன.
இந்த போராட்டமானது நியாயமானது அவர்களுடைய உரிமைசார்ந்த ஒரு போராட்டமாகவே இதனை நான் பார்க்கின்றேன் என்று நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி ராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
நான் கடந்த பல வருடங்களாக அதாவது என்னுடைய அரசியல் வாழ்வில் 75 வீதமான பகுதியை கல்விக்காகவும் மாணவர்களின் முன்னேற்றத்திற்காகவும் ஆசிரியர்களின் நலன் சார்ந்த விடயங்களுக்காகம் அர்ப்பணித்திருக்கின்றேன்.
இன்று மலையகத்தை பிரதிநிதித்துவம் செய்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் இந்த துறையை சார்ந்த அதிகமான விடயங்களை அறிந்தவன் என்ற வகையிலும் இந்த போராட்டம் நியாயமானதாகவே இருக்கின்றது.
அரசாங்கம் இந்த விடயத்தை ஒரு முக்கிய விடயமாக கருத்தில் கொண்டு அவர்களுக்கான நிரந்தரமான ஒரு தீர்வை பெற்றுக் கொடுக்க முன்வர வேண்டும். இன்று ஆசிரியர்களுக்கு ஆதரவாக பெற்றோர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதனை நான் வரவேற்கின்றேன்.
ஆனால் இந்த போராட்டத்தை வலுவிலக்க செய்வதற்காக ஒரு சில ஆளும் தரப்பு அரசியல்வாதிகள் தங்களுடைய பலத்தை காண்பித்தும் அச்சுறுத்தியும் இந்த போராட்டத்தை சீரழிப்பதற்கு முயற்சி செய்வதை செய்திகளின் மூலமாக அறிந்து கொள்ளக்கூடியதாக இருக்கின்றது.
இது முற்றிலும் தவறான கண்டிக்கத்தக்க விடயமாகும்.எந்த ஒரு ஜனநாயக போராட்டத்தையும் குழப்புவதற்கோ வலுவிலக்க செய்வதற்கோ யாருக்கும் உரிமை கிடையாது.
இது ஒரு ஜனநாயக நாடு அந்த அடிப்படையில் யாரும் தங்களுடைய உரிமைகளுக்காக போராட்ட செய்ய முடியம். அதற்கு அரசாங்கம் செவிமடுத்து உரிய தீர்வை பெற்றுக் கொடுக்க வேண்டுமே தவிர அதனை குழப்பியடித்து தொழிற்சங்கங்களின் ஒற்றுமையை சீர்குலைத்து அதில் குளிர் காய நினைப்பது முதகெலும்பில்லாத பிரச்சினைகளை சந்திக்க முடியாது சிறு பிள்ளைத்தனமான ஒரு செயற்பாடாகவே கருத வேண்டியுள்ளது.
எனவே அரசாங்கம் இந்த விடயங்களை கருத்தில் கொண்டு உடனடியாக இந்த போராட்டத்திற்கான தீர்வை பெற்றுக் கொடுக்க முன்வர வேண்டும்.
இல்லாவிட்டால் இந்த போராட்டத்திற்கு இலங்கையில் இருக்கின்ற அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்கி அவர்களுடைய நியாயமான சம்பளத்தை பெற்றுக் கொடுக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
ஆசிரியர்களின் இந்த போராட்டத்திற்கு வலு சேர்ப்பதற்காக நாங்கள் எந்த நேரத்திலும் தமிழ் முற்போக்கு கூட்டணியாக இணைந்து செயற்படுவதற்கு தயாராகவே இருக்கின்றோம்.

Recommended For You

About the Author: Editor Elukainews