கொலைச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது .

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரத்தினபுரம் பகுதயில் பாழடைந்த கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட இளைஞரின் கொலைச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை கிளிநொச்சி பொலிசார் கைது செய்துள்ளனர்.
கடந்த 15.08.2021 அன்று அடையாளம் காணப்பட்ட குறித்த சடலம் தொடர்பில் கிளிநொச்சி பொலிசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
குறித்த பகுதியில் பயன்பாடற்று கிடந்த கிணற்றில் சடலம் பாய் ஒன்றினால் சுற்றப்பட்ட நிலையில் காணப்படுவது தொடர்பில் குறித்த காணியின் உரிமையாளர் காணியை பார்வையிட சென்றிருந்த சமயம் அவதானித்ததை அடுத்து பொலிசாருக்கு தகவல் வழங்கியிருந்தார்.

சம்பவத்தை அடுத்து அப்பகுதியில் கிளிநொச்சி குற்ற விசாரணை பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் கருணாரட்ணம் ஜெசிந்தன் உள்ளிட்ட பொலிஸ் குழுவினர் விசாரணை மேற்கொண்டிருந்தனர்.

குறித்த கிணற்றை அண்மித்த பகுதியில் காணப்பட்ட குற்றச்செயலுடன் தொடர்புடைய சான்றுகள் மற்றும் சாட்சியங்களை விசாரணை மேற்கொண்டதை அடுத்து உயிரிழந்த இளைஞன் கொலை செய்யப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில் குறித்த குற்றச்செயலுடன் தொடர்புடைய சந்தேக நபரை இன்று பொலிசார் கைது செய்துள்ளதாக கிளிநொச்சி பொலிசார் தெரிவிக்கின்றனர். குறித்த குற்றச்செயல் தொடர்பில் விசாரணைக்காக நியமிக்கப்பட்ட கிளிநொச்சி குற்ற விசாரணை பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் கருணாரட்ணம் ஜெசிந்தன் தலைமையிலான குழுவினர் குறித்த சந்தேக நபரை இன்று கைது செய்துள்ளனர்.
குறித்த சந்தேக நபர் இரத்தினபுரம் பகுதியை சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் எனவும், உயிரிழந்தவருக்கும், சந்தேகநபருக்கும் இடையில் ஏற்பட்ட தீடீர் முரண்பாடு காரணமாக ஆத்திரமூட்டலினால் குறித்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் குறிப்பிடுகின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளின் பின்னர் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் குறித்த சந்தேக நபருக்கு எதிராக வழக்கு விசாரணை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அண்மை நாட்களாக கிளிநொச்சி பொலிசாரின்செயற்பாடுகள் தொடர்பில் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், இவ்வாறான குற்றச்செயல்கள் தொடர்பில் பொலிசார் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளையும் மக்கள் பாராட்டி வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews