அதே ஸ்டைல்.. அதே உற்சாகம் – சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் ரஜினிகாந்த்

நான் நலமுடன் இருக்க வேண்டும் என பிரார்த்தனை செய்த நல் உள்ளம் கொண்ட ரசிக பெருமக்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

நடிகர் ரஜினிகாந்திற்கு தலை சுற்றல், மயக்கம் ஏற்பட்டு கடந்த வியாழக்கிழமை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.  ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த், அவரது மருமகன் நடிகர் தனுஷ் மற்றும் மகள் ஆகியோர் மருத்துவமனைக்கு வருகை புரிந்து மருத்துவர்களிடம் அவருக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தனர். ஏற்கனவே நடிகர் ரஜினிகாந்திற்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. ஆகையால் சிறப்பு மருத்துவ குழுவினர் தொடர்ந்து ரஜினிகாந்தின் உடல் நிலையை கண்காணித்து வந்தனர்.

ரஜினியின் உடல் நிலை குறித்து மருத்துவமனையின் செயல் இயக்குனர் அரவிந்தன் செல்வராஜ் வெளியிட்ட அறிக்கையில், நடிகர் ரஜினிகாந்திற்கு தலை சுற்றல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவ வல்லுனர்களின் அறிவுறுத்தலின் அடிப்படையில், கழுத்து பகுதி வழியாக மூளை மற்றும் முகம், இதயத்திற்கு செல்லும் இரத்த ஓட்டத்தை சீரமைப்பதற்கான அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. அவரது உடல்நிலை நன்றாக உள்ளதாகவும், ஒரு சில தினங்களில் அவர் வீடு திரும்புவார் என கூறப்பட்டது.

இந்நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று  ரஜினியின் உடல்நிலை குறித்து அறிந்துக்கொள்ள காவேரி மருத்துவமனைக்கு நேரில் சென்றார். அங்கு உள்ள  மருத்துவர்கள் மற்றும் ரஜினிகாந்தின் உறவினர்களை நேரில் சந்தித்து கடந்த மூன்று நாட்களாக அவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சை முறைகள் குறித்து கேட்டு அறிந்து கொண்டார்.

இந்நிலையில் நேற்றிரவு நடிகர் ரஜினிகாந்த் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். அவர் இல்லம் திரும்பிய புகைப்படத்தை ஹூட் செயலியில் வெளியிட்டுள்ளார். மேலும், தனது புகைப்படத்துடன், ரஜினிகாந்த் தனது குரலில், அனைவருக்கும் வணக்கம், சிகிச்சை முடிந்தது. நான் நல்லா இருக்கேன். இன்று இரவுதான் வீட்டுக்கு வந்தேன். நான் நலமுடன் இருக்க வேண்டும் என பிரார்த்தனை செய்த நல் உள்ளம் கொண்ட ரசிக பெருமக்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். என் உடல் நலம் குறித்து விசாரித்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews