மீனவர்களின் மோதலுக்கு அரசாங்கமே மூலகாரணம்! ந.ஸ்ரீகாந்தா.

கடற்றொழிலாளர்கள் மத்தியில் எழுந்துள்ள கோபாவேசத்தை, திரைமறைவில் நின்றபடி, மேலும் தூண்டிவிட்டு, இரு தரப்பு மீனவர்களையும் மோதவைக்கும் அரசின் நோக்கத்தை சில தமிழ் அரசியல் சக்திகள் செயலில் காட்டத் தொடங்கியுள்ளனவா என்ற கேள்வி எழுந்துள்ளது – என்று, தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர்  சட்டத்தரணி   ந.ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்.

இலங்கைக் கடற்பரப்புக்குள் தொடர்ந்து ஊடுருவும் தமிழ்நாட்டு ஆழ்கடல் இழுவிசைப் படகுகளால்,  எமது கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றது.
இலங்கைத் தமிழ் மக்களின் அரசியல் விடுதலைப் போராட்டத்துக்கு, தமிழ்நாட்டு உறவுகள் நீண்ட காலமாக தொடர்ந்தும் ஆதரவு வழங்கி வருகின்றனர்.
இதனை வலுவிழக்கச் செய்வதற்காக,  அரசியல் தூரநோக்கத்துடன்கூடிய சிங்கள பேரினவாத சக்திகளின் சதித் திட்டத்துக்கு  உதவியாகவும், ஒத்தாசையாகவும்  சில தமிழ் அரசியல் சக்திகளால் எண்ணெய் ஊற்றப்படுகின்றதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இருதரப்பு மீனவர்களுக்குமிடையில் மோதல்கள் ஏற்படுவதன் ஊடாக, இலங்கைத் தமிழ் மக்களுக்கு தமிழ்நாட்டில் இருக்கும் ஆதரவுத் தளத்தை ஆட்டம் காணவைக்க முடியும் என்ற நம்பிக்கையுடனும்,  எதிர்பார்ப்புடனும் சிங்களப் பேரினவாதிகள் செயற்படுகின்றனர்.
தமிழ்நாட்டு மீனவர்களையும்,  எமது மீனவர்களையும் மோதவைக்க விரிக்கப்பட்டிருக்கும் சதிவலைக்குள் நம்மவர்கள் சிக்கிக்கொள்ளக் கூடாது.
இலங்கைக் கடற்பரப்புக்குள் ஊடுருவும் இந்தியப் படகுகளை மடக்கிப் பிடிப்பதையும், அவற்றில் இருப்பவர்களைக் கைது செய்து, சட்டத்துக்கு அமைவாக நீதிமன்றில் நிறுத்துவதையும் தனது கடற்படை ஊடாக செய்ய வேண்டியது இலங்கை அரசின் பொறுப்பு.

ஓவ்வொரு வருடமும் வரவு செலவுத் திட்டத்தில் கடற்படையையும் உள்ளடக்கிய பாதுகாப்புத் துறைக்கு அதிக  நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வந்துள்ளது. இந்த முறையும் செய்யப்பட உள்ளது.
இலங்கைக் கடற்படையிடம் நவீன வசதிகளுடன் கூடிய கப்பல்களும், அதிவேக ரோந்துப் படகுகளும் போதிய அளவுக்கு அதிகமாகவே உள்ளன. இருந்தும் அயல் நாட்டு மீன்பிடிப்படகுகளின் எல்லை தாண்டும் அத்துமீறல்கள் தடையின்றி தொடர்கின்றன என்றால்,  அதற்கு யார் பொறுப்பு?

எந்தக் காரணத்தால் இந்த நிலைமை நீடித்து நிற்கின்றது? இந்தக் கேள்விகளுக்குப் பதில் கூற வேண்டியது இலங்கை அரசு  மட்டுமே.
பாதிக்கப்பட்டிருக்கும் தரப்பின் சார்பில், அதிகாரத் தரப்பின் ஆதி மூலத்தோடு அழுத்திப் பேச வேண்டுமே தவிர, பூசாரிகளோடும் பூக் கட்டுவோரோடும் நம்மில் எவரும் நேரத்தை வீணடிக்கக் கூடாது. – என்றார்.

Recommended For You

About the Author: Editor Elukainews