சட்டவிரோத மணல் அகழ்வை தூண்டுகின்றன விஷமிகள்: டக்ளஸ் குற்றச்சாட்டு

மக்களின் பிரச்சினைகளை தீரா பிரச்சினையாக வைத்திருந்து அரசியல் இலாபம் அடையும் தரப்புக்கள், சட்டவிரோத மணல் அகழ்வினை கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு எதிரான விஷமக் கருத்துக்களை வெளியிட்டு வருவதாக குற்றஞ்சாட்டியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மக்களுக்கு நன்மையளிக்கும் விடயங்களுக்கு எதிரான பிதற்றல்களை மக்கள் புரிந்து கொள்வார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

யாழ் மாவட்ட செயலகத்தில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நேற்று (30.10.2023)  இடம்பெற்ற கலந்துரையாடலிலே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

மேலும், இவ்வாறான தரப்புக்களை ஏற்கனவே இனங்கண்டுள்ள மக்கள், எதிர்காலத்தில் தக்க பாடம் புகட்டுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

சட்டவிரோத மணல் அகழ்வினை தடுப்பதற்கான தொடர்ச்சியான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தட்டுப்பாடின்றி நியாயமான விலையில் மக்களுக்கு தேவையான மணல் கிடைப்பதை உறுதிப்படுத்தும் நோக்கில், கிராம அபிவிருத்தி சங்கங்களின் மூலம் அடையாளப்படுத்தப்பட்ட மணல் திட்டுக்களில் இருந்து மணல் அகழ்வு மற்றும் விநியோகத்தினை மேற்கொள்வது தொடர்பாக யாழ் மாவட்ட செயலகத்தில் விசேட கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில் சட்டவிரோத மணல் அகழ்வை தடுப்பதற்கு பொலீஸாருக்கு துணையாக ராணுவமும், விசேட அதிரடிப் படையினரும் களத்தில் இறங்குவார்கள் எனவும் கூறியுள்ளார்.

மேலும் கருத்து தெரிவிக்கையில்,“காலை பிரதமரோடு கலந்துரையாடி இருந்தேன். வடக்கு மாகாணத்தில் இருக்கக்கூடிய பெரும்பான்மை மக்கள் தமிழ் பேசுகின்ற மக்கள். தொழில் வாய்ப்புகளை வழங்குகின்ற போது தமிழ் மக்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.

கடந்த காலத்தில் சில தவறுகள் நடந்திருக்கின்றன. அது உடனடியாக களையப்பட வேண்டும் என்று சொல்லி இருந்தேன் இதற்கு முன்னர் அமைச்சரவையிலும் அவரோடு கலந்துரையாடி இருக்கின்றேன்.

ஒரு லட்சம் வேலை வாய்ப்பில் தென்னிலங்கையில் இருந்து நியமிக்கப்பட்டு இங்கு வருவதாக அறிந்து தான் அதனை உடனடியாக நிறுத்துமாறும், இங்கிருக்கின்றவர்களுக்கு தான் முன்னுரிமை வழங்க வேண்டும் என்று சொல்லியபோது அவர் ஏற்றுக் கொண்டிருக்கின்றார். அடுத்த அடுத்த கிழமைகளில் இவை நடைமுறைக்கு வரும் ”என தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews