வல்வெட்டித்துறையில் குடும்பஸ்தரை கொலை செய்தவர் 03 வாரங்களின் பின்னர் திருகோணமலையில் கைது!

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில், குடும்பத்தகராறு காரணமாக, 2 பிள்ளைகளின் தந்தையை கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு தப்பித்த உறவினர் ஒருவர், 3 வாரங்களின் பின்னர், இன்று திருகோணமலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், மற்றைய நபர் தொடர்ந்து தலைமறைவாகியுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி நள்ளிரவு 12.30 மணிக்கு, இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில், 30 வயதுடைய சுப்பிரமணியம் கிருசாந்தன் என்ற, 2 பிள்ளைகளின் தந்தையே கொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தில் படுகாயடைந்த அவரை, உடனடியாக, பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதித்த போதும், அவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.
அதனையடுத்து, கொலையில் ஈடுபட்டவர்களாக, உறவினர்கள் இருவர் தலைமறைவாகிய நிலையில் தேடப்பட்டு வந்தனர். சந்தேக நபர்களில் ஒருவர், திருகோணமலை பொலிஸ் பிரிவில், தலைமறைவாகி உள்ளதாக, காங்கேசன்துறை பிராந்தியத்துக்குப் பொறுப்பான சிறப்புக் குற்றத் தடுப்புப் பிரிவினருக்கு, தகவல் கிடைத்தது.
தற்போதைய கொரோனா நிலைமை காரணமாக, அங்கு சென்று, சந்தேக நபரைக் கைது செய்ய முடியாத நிலையில், திருகோணமலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு, தகவல் வழங்கப்பட்டது.
அதன் பிரகாரம், திருகோணமலை பொலிஸார் எடுத்த நடவடிக்கை மூலம், சந்தேக நபர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
எனினும், மற்றைய நபர் தொடர்பில் தகவல் கிடைக்காத நிலையில், தேடப்பட்டு வருகின்றார்.

Recommended For You

About the Author: Editor Elukainews