இரண்டாவது வட்டுக்கோட்டைத் தீர்மானம் இன்றைய சூழலுக்கு பொருத்தமானதா?

 

(சி.அ.யோதிலிங்கம்)
இரண்டாம் வட்டுக்கோட்டைத் தீர்மானம் என்ற தலைப்பில் ஒரு இணையவழி மாநாடு தமிழ் நாட்டுச் செயற்பாட்டாளர்களின் முயற்சியினால் கடந்த முதலாம் திகதி இடம்பெற்றது. இம் மாநாட்டுக்கு காசிஆனந்தன் தலைமை தாங்கியிருந்தார். சென்னை பல்கலைக் கழக பேராசிரியர் இராமு மணிவண்ணன் இணைப்பாளராகக் கடமையாற்றினார். இலங்கையைச் சேர்ந்தவர்களும் தமிழ் நாட்டைச் சேர்ந்த பலரும் உரையாற்றியிருந்தனர். மூன்று மணி தொடக்கம் இரவு எட்டு மணி வரை மாநாடு நடைபெற்றதாக அறிய முடிகின்றது.
இலங்கையைப் பொறுத்த வரையில் தமிழ்த்தேசியக் கட்சிகள் அனைத்திற்கும் அழைப்புக்கள் விடுத்தபோதும் மூன்று தமிழ் தேசியக் கட்சிகளின் தலைமை மட்டத்தில் எவரும் கலந்து கொள்ளவில்லை. விக்கினேஸ்வரன் மட்டும் எழுத்தில் தனது கருத்துக்களை அனுப்பியதாகவும் அது மாநாட்டில் வாசிக்கப்பட்டதாகவும் செய்திகள் வந்துள்ளன. அரசியல் வாதிகள் என்றவகையில் சிவாஜிலிங்கமும் அனந்தியும் மட்டுமே கலந்துகொண்டிருந்தனர். சிவில் சமூகத்தின் சார்பில் வேலன் சுவாமிகளும் கலந்துகொண்டிருந்தார். தமிழ் நாட்டில் இருந்து வைகோ, திருமாவளவன், கௌதமன் ஆகியோரும் சமுதாயக் கட்சியைச் சேர்ந்த கேரள செயற்பாட்டாளர் ஒருவரும் சமதா கட்சியைச் சேர்ந்த ஒருவரும் என முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டார்கள்.
அம்மாநாடு மிகச் சிறப்பாக நடைபெற்றதாக அறிந்து கொள்ள முடிகின்றது. இம் மாநாட்டில் கலந்து கொண்ட தமிழ் நாட்டினுடைய செயற்பாட்டாளர்கள் வலுவாக உரையாற்றியிருந்தார்கள். அங்கு நிகழ்த்தப்பட்ட உரையின் சாராம்சம் இந்தியாவின் இருப்பு தற்போது இலங்கையில் இல்லை. அதைத் தொடர்ந்து தக்கவைக்க வேண்டும் என்றால் தமிழ் மக்களுடைய விடயத்தில் இந்தியா தலையிட வேண்டும். ஒன்றில் அது தனிநாடாக இருக்க வேண்டும். இல்லாவிடில் வலுவான சுயாட்சியாக இருக்க வேண்டும் என்பதாக இருந்தது. இவை தான் வலுவான பாதுகாப்பை இந்தியாவிற்கு கொடுக்கும் என்றும் கூறப்பட்டது.
இம்மாநாட்டில் இரண்டாவது வட்டுக்கோட்டை தீர்மானமும் வெளியிடப்பட்டது. அந்த தீர்மானம் பெரிய கனதியாக இருந்ததென கூறி விட முடியாது. அதில் சிங்களக் குடியேற்றங்கள் தமிழ் தாயகத்தில் இடம் பெறுகின்றன அதைத் தடுக்க வேண்டும.; சுயநிர்னய உரிமையுடன் கூடிய ஒரு அரசியல் தீர்வு தமிழ் மக்களுக்கு வழங்கப்படல் வேண்டும். இவற்றைச் செய்வதற்காக இந்தியா தலையிட வேண்டும் என்பன முக்கியமான விடயங்களாக இருந்தன.
இத்தகைய மாநாட்டினை முன்னெடுக்கும் போது செயற்பாட்டாளர்கள்; சில முக்கியமான விடயங்களைக் கருத்தில் கொள்ளவேண்டும். இங்கு தமிழ் மக்களின் கடந்த காலத்து அரசியல் வரலாற்றுத் தொடர்ச்சியை கவனத்தில் கொள்ள வேண்டும். தமிழ் மக்களின் அரசியல் வரலாறு ஐந்து பெரிய காலகட்டத்திற்கூடாக வளர்ந்து வந்திருக்கிறது. முதலாவது 1833-1920 வரையான காலகட்டம். இரண்டாவது 1920-1949 வரையான காலகட்டம் . மூன்றாவது 1949-1968 வரையான காலகட்டம். நான்காவது 1968- 2009 வரையான காலகட்டம். ஐந்தாவது 2009 ற்குப் பின்னரான காலகட்டம்.
முதலாவது காலகட்டத்தில் தமிழ் மக்கள் இன அரசியலைத் முன்னெடுக்கவில்லை. அரசியல் தளத்தில் இலங்கையர் என்ற அடையாளத்தையும் பண்பாட்டுத் தளத்தில் தமிழர்கள் என்ற அடையாளத்தையுமே முன்னெடுத்தனர்;. இதனால் தமிழ் மக்களின் தலைவர்களாக கருதப்பட்டவர்கள் தமிழர்களுக்கு மட்டும் தலைவர்களாக இருக்காமல் முழு இலங்கைக்கும் தலைவர்களாக இருந்தனர். சேர் முத்துக் குமாரசுவாமி, சேர் பொன் இராமநாதன்;, சேர் பொன் அருணாசலம் போன்றோர் இதில் முக்கியமானவர்களாவர். அதில் சேர் பொன் அருணாசலத்தின் பங்களிப்பு அளப்பரியது. அவர்தான் இலங்கையில் ஒரு சமூக மாற்ற அரசியலினுடைய ஆரம்ப கர்த்தாவாக இருந்தவர். சமூகமாற்ற அரசியலின் தந்தை என்றும் அவரைச் சொல்லிக்கொள்ளலாம். அவர்தான் இலங்கை தேசிய இயக்கத்தினுடைய தந்தையாகவும் விளங்கினார். இலங்கைத் தேசிய காங்கிரஸ் உருவாக்கப்பட்டபோது அதன் முதலாவது தலைவராகவும் தெரிவுசெய்யப்பட்டார்;. தமிழின அரசியலின் ஆரம்ப கர்த்தாவாகவும் விளங்கினார். 1920ம் ஆண்டு சிங்கள அரசியற் தலைவர்கள் கொடுத்த வாக்குறுதியில் இருந்து விலகியதால் இலங்கை தமிழர் மாகாஜன சபை என்ற அமைப்பை ஆரம்பித்துச் செயற்பட்டார். உண்மையில் இன அரசியல் ஆரம்பிக்கப்பட்டு ஒரு நூற்றாண்டு ஆகின்றது. இது முதலாவது கட்டம்.
இரண்டாவது கட்டம் 1920-1949 வரையான காலகட்டமாகும். இந்தக் கால கட்டத்தில் இன அரசியல் ஆரம்பிக்கப்பட்டு விட்டது. அருணாசலம் இன அரசியலை ஆரம்பித்தாலும் கூட அதை வளர்த்தவர் ஜீ.ஜீ. பொன்னம்பலம் ஆவாh.; அருணாசலம் 1924ம் ஆண்டு இறந்து விட்டார். ஜீ.ஜீ. பொன்னம்பலம் ஒற்றையாட்சிக் கட்டமைப்பை ஏற்றுக்கொண்டு அதற்குள்; சம வாய்ப்பினைக் கோரும் அரசியலைக் கொண்டு வந்தார். இதனால்தான் அவர் ஐம்பதுக்கு ஐம்பது கோரிக்கையை முன்வைத்தார.; 1931ம் ஆண்டு டொனமூர் அரசியல் யாப்பு சீர்திருத்தம் முன்வைக்கப்பட்டிருந்தது. இது அரைவாசிப் பொறுப்பாட்சி முறையினை அறிமுகப்படுத்தியது. அந்த அரைவாசிப் பொறுப்பாட்சி முறை தமிழ் மக்களை அரச அதிகாரக் கட்டமைப்பிலிருந்து வெளியில் தள்ளி விட்டிருந்தது.
1947ம் ஆண்டு சோல்பரி அரசியல் யாப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. அவ் யாப்பின் மூலம் முழு அதிகாரமும் இலங்கையர்களின் கைகளுக்கு மாற்றப்பட்டது. ஒற்றையாட்சி நிர்வாகக் கட்டமைப்புக்கு பெரும்பான்மை தேர்தல் முறைக்குள்ளாக கையளிக்கப்பட்டமையினால் அது இயல்பாகவே பெரும்பான்மை சமூகத்திடம் அரசியல் அதிகாரத்தை வழங்கியது. தமிழ் மக்கள் அரச அதிகாரக் கட்டமைப்பிலிருந்து முழுமையாக தூக்கி வீசப்பட்டனர். இந்த நிலையில் தான் தந்தை செல்வா 1949ம் ஆண்டு அகில இலங்கை தமிழரசுக் கட்சியை உருவாக்கினார். இதன் தோற்றத்துடன் தமிழர் அரசியலின் மூன்றாவது கட்டம் ஆரம்பமாகியது.
இம் மூன்றாவது கட்டத்தில் தந்தை செல்வா மூன்று நகர்வுகளை முன்னெடுத்தார். ஒன்று இவ்வளவு காலம் இருந்த தமிழ் இன அரசியலை அவர் தமிழத்; தேசிய அரசியலாக வளர்த்தெடுத்தார். தமிழர்களுடைய தாயகத்தை வரையறுத்து அதற்கு அதிகாரத்தைக் கோருகின்ற சமஸ்ரி கோரிக்கையை முன்வைத்தார். வடக்கு-கிழக்கு என தமிழர் தாயகத்தை வரையறுத்தார். இரண்டாவது கொழும்பும் யாழ்ப்பாணமும் என்றிருந்த தமிழரசியலை வடக்கு கிழக்கு என்று வளர்த்தெடுத்தார். மூன்றாவது இவ்வளவு காலமும் பாராளுமன்றத்திலும் சட்ட சபையிலும் பேசுவதுதான் தான் தமிழர் அரசியலாக இருந்தது. அதனை மாற்றி மக்களை இணைத்த போராட்டங்களை முன்னெடுத்தார். 1956ம் ஆண்டு சத்தியாக்கிரகப் போராட்டம், 1956ம் ஆண்டு திருமலை யாத்திரை 1957, 1958 சிறிஎதிர்ப்புப் போராட்டங்கள், 1960ம் ஆண்டு வட கிழக்கு கச்சேரிகளுக்கு முன்னால் நடந்த சத்தியாக்கிரகப் போராட்டங்கள் என்பவை இங்கு முக்கியமானவை. இப்போராட்டங்களே பண்டா செல்வா ஒப்பந்தம்(1957), டட்லி -செல்வா ஒப்பந்தம்(1965) என்பவற்றிற்கு காரணங்களாக அமைந்தன.
1960ம் ஆண்டு சத்தியாக் கிரகப் போராட்டத்திற்குப் பிறகு இந்தத் தேர்தல் அரசியற் கட்சிகளுக்கு ஊடாக மக்களினுடைய அரசியல் அபிலாசைகளை வென்றெடுப்பது சாத்தியமில்லை. அதுவும் இலங்கையினுடைய அரசியற் கட்டமைப்பிற்குள் சாத்தியமில்லை என்ற உணர்வு இளைஞர்கள் மத்தியில் வளரத் தொடங்கியது. அதிலும் தமிழரசுக் கட்சியின் கொள்ளளவு இவ்வளவும் தான.; இதற்கு மேல் செயற்பட மாட்டார்கள் என்ற உணர்வும் வந்து விட்டது. 1965ம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து கூட்டரசாங்கத்தில் தமிழரசுக் கட்சி அமைச்சுப் பதவியை ஏற்றபோது அந்த அதிருப்தி மேலும் பெருகத் தொடங்கியது. இதனால் 1968ம் ஆண்டு முதன் முதலாக் கட்சி அரசியலுக்கு அப்பால் ஈழத் தமிழர் இளைஞர் இயக்கம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. அது தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைத்து செயற்படத் தொடங்கியது. இதனுடன் நான்காவது காலகட்டம் ஆரம்பமாகியது.
1968 – 2009 வரையான காலகட்டமே நான்காவது காலகட்டமாகும். இதுவும் மூன்று உப கால கட்டங்களாக வளர்ந்து சென்றது. அதில் ஒன்று 1968 – 1983 வரை இது இலங்கை மட்டத்துக்குள்ளும,; 1983-1991 வரை அதாவது ராஜிவ் காந்தியின் மரணம் வரை பிராந்திய மட்டத்திற்குள்ளும் 1991-2009 வரை அது பிராந்திய மட்டத்தையும் தாண்டி சர்வதேச மட்டம் வரை பேசப்படும் ஒன்றாக மாறியதோடு இலங்கை அரசு, பிராந்திய அரசு, சர்வதேச வல்லரசுகள் தமிழ் தரப்புக்கு எதிரியாக மாறியிருந்த சூழலும் உருவாகியது. இங்கு மூன்று தரப்பும் இணைந்து தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தை அழித்தது என்பது வரலாறு.
1976ம் ஆண்டு வட்டுக்கோட்டை தீர்மானம் முன்வைக்கப்பட்டிருந்தது. அது உண்மையில் அன்றைக்கு இருந்த தமிழரின் மிதவாதக் கட்சியான இருந்த தமிழர் விடுதலைக் கூட்டணியினால் அதன் முதலாவது மாநாட்டில் முன் வைக்கப்பட்டது. அன்று இருந்த அரசியற் சூழல் அதைக் கொண்டு வரும்படி ஆகி விட்டது. வட்டுக்கோட்டைத் தீர்மானம் தனிநாட்டுக் கோரிக்கைக்கான ஒரு தீர்மானமாக இருந்தது. அத் தீர்மானத்தை நடைமுறையில் செயற்படுத்த முனைந்தவைதான் ஆயுத இயக்கங்கள். 2009 வரை அதனுடைய உச்ச போராட்டம் இடம்பெற்றதைக் காணலாம்.
1976ம் ஆண்டு வட்டுக்கோட்டைத் தீர்மானமானது ஒடுக்கு முறையினுடைய உச்சத்தில் தமிழ் மக்கள் இலங்கை அரச அதிகாரக் கட்டமைப்புக்கு வெளியில் செல்ல வேண்டும் என்ற அடிப்படையில்எடுக்கப்பட்ட தீர்மானம். வட்டுக்கோட்டைத் தீர்மானம் இரண்டு என வரும்போது முதலாவது தீர்மானத்தை விட உயர்ந்த தீர்மானமாக இருக்க வேண்டும். அதனை விடத் தாழ்ந்தாக இருந்தூல் முதலாவது தீர்மானத்தைக் கொச்சப்படுத்துவதாகி விடும். ஆனால் இரண்டாவது வட்டுக் கோட்டைத் தீர்மானம் மிகவும் பலவீனமான தீர்மானமாகத்தான் இருக்கிறது. உண்மையில் இரண்டாவது வட்டுக் கோட்டைத் தீர்மானம் ஒரு பொது வாக்கெடுப்பாக புலம்பெயர் மக்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்டது. எனவே இதனை மூன்றாவது வட்டுக்கோட்டைத் தீர்மானம் என்றே கூறவேண்டும்.
2009 ஆயதப் போராட்டம் அழிக்கப்பட்ட பின் அரசியல் சூழல் மாறிவிட்டது. இதனால் தனிநாட்டுப் போராட்டத்தை தொடர்ந்து நடத்தக் கூடிய சூழல் இருக்கவில்லை. பிரதானமாக இலங்கை அரசியல் யாப்பின் 6வது திருத்தச் சட்டம் தனிநாட்டுக் கோரிக்கைக்கு எதிரானது. 6வது திருத்தச் சட்டத்திற்கு முரணாகக் செயற்பட முடியாத நிலைமை உள்ளது. இதனால் வட்டுக்கோட்டை என்ற பெயரைப் பயன்படுத்தாது வேறு பெயரைப் பயன்படுத்தியிருக்கலாம.; இவ்வாறான செயற்பாடுகளை தனித்த முடிவுடன் செய்யாது பலருடன் கலந்து ஆலோசித்திருக்க வேண்டும். கலந்து பேசி செய்யாததன் காரணத்தினால் இது பூரணமான செயற்பாடு எனக் கூற முடியாது.
இதில் ஈடுபட்டவர்களுக்கு ஒரு வரலாறு இருக்கிறது. தமிழ் மக்களின்; போராட்டத்தில் வரலாற்றுப் பங்களிப்பு அவர்களுக்கு இருக்கிறது. அவர்களது பங்களிப்பைக் குறைத்து மதிப்பிட முடியாது. இதில் உரையாற்றிய அனைவருமே போராட்டத்தில் முக்கிய பங்கை ஆற்றியிருக்கிறார்கள். அதனால் அவர்கள் நோகடிக்கும் விதத்தில் விமர்சனங்களை வைப்பது பொருத்தமானதல்ல.
இன்று இந்தியாவிற்கு ஒரு தேவை வந்துள்ளது. தமிழ் மக்களிற்கு இந்தியா தேவை என்பதை விட இந்தியாவிற்கு தமிழ் மக்கள் தேவையாக உள்ளது. இந்தியாவிற்கு இப்படி ஒரு தேவை வருகின்ற போது தமிழ் மக்கள் தங்களுடைய நிலையிலிருந்து எப்படிக் கையாள்வது என்பது தொடர்பான உபாயங்களைத் தொகுத்துச் செயற்பட வேண்டும்.இந்தியாவின் நலன்களுக்கும் தமிழ் மக்களின் நலன்களுக்குமிடையே பொதுப் புள்ளியைக் கண்டுபிடித்து அதனைப் பலப்படுத்த வேண்டும். நிலாந்தன் கூறியது போல நாங்கள் எவரையும் காதலிக்கவும் வேண்டாம.; பகைக்கவும் வேண்டாம். அவர்களை எவ்வாறு கையாள்வது என்பது பற்றி சரியானவகையில் சிந்தித்துச் செயற்பட வேண்டும். துரதிஸ்டவசமாக அதற்கான முயற்சிகள் பெரிதாக இடம்பெறவில்லை. குறிப்பாக அவ்வாறான செயற்பாட்டை செய்வதாயின் தமிழ் மக்களுக்கென வெளிநாட்டுக் கொள்கை ஒன்றுவேண்டும். மற்றையது தமிழ் மக்களுக்கென்று இராஜதந்திர லொபி ஒன்று தேவை. இராஜதந்திரசெயற்பாடு வேண்டும். தந்திரோபாயத் திட்டங்கள் வேண்டும். இவை இல்லாமல் இவற்றை முன்னெடுக்கக் முடியாது.
எனவேதான் நடைபெற்ற இணையவழி மாநாட்டிற்கு இரண்டாவது வட்டுக்கோட்டைத் தீர்மானம் எனப் பெயர் வைக்காமல் வேறு ஏதாவது பெயரில் ஜெயலலிதா காலத்தில் தமிழக சட்டசபை நிறைவேற்றிய தீர்மானங்களின் தொடர்ச்சியை முன்னெடுத்திருக்கலாம். தமிழக சட்டசபை அரசியல் தீர்விற்கு பொது வாக்கெடுப்பு நடாத்துதல் வேண்டும். இன அழிப்பிற்கு சர்வதேச விசாரணை வேண்டும் என்கின்ற தீர்மானங்களை நிறைவேற்றியிருந்தது.
இன்று தமிழ் மக்கள் அரசியல் தீர்வு என்கின்ற அடிப்படைப் பிரச்சினை, இன அழிப்புக்கு சர்வதேச நீதிகோரும் பிரச்சினை, ஆக்கிரமிப்பு பிரச்சினை, அரசியல் கைதிகள் காணிப்பறிப்பு போன்ற இயல்பு நிலையைக் கொண்டுவருதல் பிரச்சினை, போரினால் பாதிக்கப்பட்டவர்களின் நலன்களைப் பேணுதல் என்கின்ற அன்றாடப்பிரச்சினை என ஐந்து வகையான பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்றனர். இவற்றிற்கு தீர்வு காணக்கூடிய வகையில் தெளிவான கோரிக்கைகளை முன்வைத்திருக்கலாம்.
எது எப்படி இருந்த போதும் தமிழகச் செயற்பாட்டாளர்கள் இலங்கைக்கு வெளியே ஒரு முயற்சியை எடுத்திருக்கிறார்கள். அவற்றில் தவறுகள் இருந்தாலும் அவற்றைச் சுட்டிக் காட்டி அவற்றைத் திருத்துவதற்கு முயற்சிக்க வேண்டுமே தவிர கடுமையான விமர்சனங்களை முன்வைத்து அவர்களை நோகடிக்கக் கூடாது.
தாமாக முன்வந்து செயற்படும் செயற்பாட்டாளர்களை ஒதுக்குவது தமிழ் அரசியலுக்கு ஆரோக்கிமானதல்ல.

 

 

 

 

Recommended For You

About the Author: Editor Elukainews