தமிழ்த்தரப்பு கற்றுக் கொள்ள வேண்டியது எதிரிகளை நண்பர்களாக்கும் கலையையே!

(சி.அ.யோதிலிங்கம்)

தமிழ் நாட்டிலுள்ள தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர்களின் முயற்சியினால் கடந்த 1ம் திகதி இரண்டாவது வட்டுக்கோட்டைத் தீர்மானம் என்ற தலைப்பில் ஒரு இணையவழி மாநாடு இடம் பெற்றது. உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் இம் மாநாட்டுக்குத் தலைமை தாங்கினார். சென்னை பல்கலைக்கழக அரசறிவியல் துறைப்பேராசிரியர் இராமு மணிவண்ணன் இணைப்பாளராகக் கடமையாற்றினார்.  இலங்கையைச் சேர்ந்தவர்களும் இம் மாநாட்டில் உரையாற்றியிருந்தனர். பிற்பகல் 3 மணி தொடக்கம் இரவு 8 மணி வரை மாநாடு இடம் பெற்றது

இலங்கையிலுள்ள தமிழ்த்தேசியக் கட்சிகள் மூன்றிற்கும் அழைப்புக்கள் விடுக்கப்பட்ட போதும் மூன்று தமிழ்த்தேசியக் கட்சிகளினதும் தலைமை மட்டத்தில் எவரும் கலந்து கொள்ளவில்லை. விக்கினேஸ்வரன் மட்டும் எழுத்தில் தனது கருத்துக்களை அனுப்பியதாகவும் அது மாநாட்டில் வாசிக்கப்பட்டதாகவும் செய்திகள் வந்துள்ளன. தமிழரசுக்கட்சி கலந்து கொள்ளாமைக்கு முதலாவது வட்டுக்கோட்டைத்தீர்மானம் சட்ட ரீதியாகத்தடை செய்யப்பட்டுள்ளது என்பதைக் காரணமாகக் கூறியிருந்தது. தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை இம்மாநாடு கொச்சைப்படுத்த முயல்வதால் கலந்து கொள்ள விரும்பவில்லை எனக்கூறியிருந்தது. இது பலத்த வாதப்பிரதிவாதங்களுக்கு உள்ளாகி மாநாட்டுக்கு தலைமை வகித்த காசி ஆனந்தன் இது பற்றி நீண்ட விளக்கத்தையும் கொடுத்திருந்தார்.

முக்கிய இலங்கைத்தமிழ் அரசியல் தலைவர்கள் எவரும் கலந்து கொள்ளாத நிலையில் அரசியல்வாதிகள் என்ற வகையில் சிவாஜிலிங்கமும், அனந்தியும் மட்டுமே கலந்து கொண்டிருந்தனர். பாரதீயஜனதாக்கட்சியின் சட்ட மன்ற உறுப்பினர் வானதி சிறீனிவாசன் கலந்து கொள்வதாக உறுதியளித்த போதும் பயண நெருக்கடி காரணமாக கலந்து கொள்ளவில்லை எனக்கூறப்படுகிறது.

இம்மாநாடு இந்திய மத்திய அரசின் ஆதரவு இல்லாமல் நடைபெற்றிருக்கும் எனக்கூற முடியாது இம்மாநாட்டை ஊக்குவித்ததன் மூலம் இந்திய அரசு இலங்கைக்கு ஒரு செய்தியைச் சொல்ல விரும்புவது போலத் தெரிகின்றது. அந்தச் செய்தி இந்தியாவோடு ஒரு இணக்கத்திற்கு வரவில்லை என்றால் வட்டுக்கோட்டை வரை செல்ல வேண்டி நேரிடலாம் என்பதாக இருக்கலாம். வேறு சிலர் இலங்கை-இந்திய ஒப்பந்தம் போல இன்னோர் ஒப்பந்தத்தை நிறைவேற்ற இந்தியா முயல்கின்றது என அபிப்பிராயப்படுகின்றனர்.

பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும் மாநாடு சிறப்பாக நடந்துள்ளதாகவே செய்திகள் வந்துள்ளன. தமிழ் நாட்டுச் செயற்பாட்டாளர்களின் உரைகள் வலுவாகவும் கனதியாகவும் இருந்தன எனவும் கூறப்படுகிறது. அங்கு நிகழ்த்தப்பட்ட உரைகளில் சாராம்சம் தற்போது இலங்கையில் இந்தியாவுக்கு இருப்பு இல்லை அது இந்தியாவின் தேசிய பாதுகாப்பையும் ஈழத்தமிழர்களின் பாதுகாப்பையும்; கேள்விக்குட்படுத்தும். எனவே இந்தியா இலங்கைத் தீவில் தன்னுடைய இருப்பை உருவாக்கி பேணிப்பாதுகாக்க வேண்டுமென்றால் தமிழ் மக்களின் விவகாரத்தில் இந்தியா வலுவான தலையீட்டை மேற்கொள்ள வேண்டும.; இந்தத் தலையீடு ஒரு தனிநாடாக இருக்க வேண்டும் அல்லது வலுவான சுயாட்சியாக இருக்க வேண்டும்.

இம் மாநாட்டில் இராண்டாவது வட்டுக்கோட்டைத் தீர்மானமும் வெளியிடப்பட்டது. அந்தத் தீர்மானம் பெரிய கனதியாக இருந்தது எனக் கூறிவிட முடியாது அதில் சிங்கள குடியேற்றங்கள் தமிழர் தாயகத்தில் இடம்பெறுகின்றன. அதை இந்தியா தடுக்க வேண்டும். சுயநிர்ணய உரிமையுடன் கூடிய ஒரு அரசியல் தீர்வு தமிழ் மக்களுக்கு வழங்கப்படல் வேண்டும். இவற்றை மேற்கொள்வதற்கு இந்தியா வலுவான தலையீட்டை மேற்கொள்ள வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

இத்தகைய மாநாட்டை முன்னெடுக்கும் போது ஏற்பாட்டாளர்கள் மிக முக்கியமான விடயங்களைக் கருத்தில் எடுத்திருக்க வேண்டும். தமிழ் மக்களின் கடந்த கால அரசியல் வரலாற்று தொடர்ச்சியை கவனத்தில் கொண்டிருக்க வேண்டும். 1968ம் ஆண்டு கட்சி அரசியலுக்கு அப்பால் ஈழத் தமிழர் இளைஞர் இயக்கம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இதுவே தனிநாட்டுக் கோரிக்கையை செயற்பாட்டுத்தளத்தில் முன்னெடுக்க முனைந்த முதலாவது அரசியல் இயக்கமாகும். தொடர்ந்து 1970 இல் உருவாக்கப்பட்ட தமிழ் மாணவர் பேரவை, 1973 இல் உருவாக்கப்பட்ட தமிழ் இளைஞர் பேரவை, 1975 இல் உருவாக்கப்பட்ட தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (தற்போதைய ரெலொ அல்ல) என்பன தனி நாட்டுக்கான அரசியலை முன்னெடுத்தன.

இன்னோர் பக்கத்தில் தமிழ் மாணவர் பேரவையும் சிவகுமாரன் குழுவும் ஆயுதப்போராட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டன. 1974 இல் புதிய தமிழ்ப்புலிகள் எனும் ஆயுத இயக்கம் தோற்றம் பெற்றது. தொடர்ந்து 80 களின் ஆரம்பத்திலிருந்து தமிழ்ஈழ மக்கள் விடுதலைக்கழகம் (Pடுழுவு), தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (வுநுடுழு) ஈழப்புரட்சி அமைப்பு (நுசுழுளு) , ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (நுPசுடுகு) என ஆயுதம் தாங்கிய விடுதலை இயக்கங்கள் தோன்றின.

1972 இல் உருவான முதலாவது குடியரசு யாப்பு அரசியல் யாப்பு ரீதியாகவே தமிழ் மக்களை அரச அதிகாரக் கட்டமைப்பிலிருந்து தூக்கி வீசியதால் தமிழ்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து தமிழர் விடுதலைக் கூட்டணியை (வுருடுகு) உருவாக்கின. தமிழர் விடுதலைக் கூட்டணி ஆரம்பத்தில் தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைக்கவில்லை. ஆனால் தமிழ் அரசியல் சூழல்; தனிநாட்டுக் கோரிக்கைக்கு முழுமையான ஆதரவு வழங்கியதால் அதனை ஏற்க வேண்டிய நிர்பந்தம் கூட்டணிக்கு ஏற்பட்டது. 1976 ஆம் ஆண்டு வட்டுக்கோட்டையில்; இடம் பெற்ற தமிழர் விடுதலைக் கூட்டணியின் முதலாவது மாநாட்டில் தனிநாட்டுத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ் மக்கள் மீதான ஒடுக்கு முறையின் உச்சத்தில் அதிலிருந்து மீள்வதற்கான தற்காப்பு செயற்பாடாகவே தனிநாட்டுத் தீர்மானம் நிறைவேற்றப்ட்டது. 1977 ஆம் ஆண்டு தேர்தலில் தமிழ் மக்கள் அதற்கான அங்கீகாரத்தையும் வழங்கினர். வடக்கு-கிழக்கில் உள்ள தமிழ்த் தேர்தல் தொகுதிகளில் கல்குடா தேர்தல் தொகுதியைத் தவிர ஏனைய அனைத்திலும் தமிழர் விடுதலைக் கூட்டணி வெற்றி பெற்றது. தனிநாட்டுக்கு ஆதரவான ஏனைய தரப்புகளையும் சேர்த்தால் 62 வீத வாக்குகள் ஆதரவாக் கிடைத்தது.

தனிநாட்டுத் தீர்மானத்தை தமிழர் விடுதலைக் கூட்டணி நிறைவேற்றினாலும் ஒரு போதும் அதற்கு விசுவாசமாக இருக்கவில்லை. ஒரு சில வருடங்களிலேயே அதனைக் கைவிட்டு 1981 இல் மாவட்ட அபிவிருத்தி சபையை ஏற்றுக் கொண்டது. இதனால் ஆயுத இயக்கங்கள் தமிழர் விடுதலைக் கூட்டணியைக் கைவிட்டுவிட்டு தாம் போராட்டத்தை முன்னெடுத்தனர் 1987 க்குப் பின்னர் ஏனைய விடுதலை இயக்கங்கள் இந்தியாவின் அச்சுறுத்தலுக்குப் பணிந்து போக தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் மட்டும் 2009 வரை இப்போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றனர்.

முன்னரே கூறியது போல 1976 ஆண்டு வட்டுக்கோட்டைத்தீர்மானம்  ஒடுக்கு முறையின் உச்சத்தில் தமிழ் மக்கள் இலங்கை அரச அதிகாரக் கட்டமைப்பிற்கு வெளியில் செல்ல வேண்டும் என்ற அடிப்படையில் எடுக்கப்பட்ட தீர்மானமாகும். வட்டுக்கோட்டை தீர்மானம் 2 என வருகின்ற போது அது முதலாவது தீர்மானத்தை விட உயர்ந்ததாக இருக்க வேண்டும். அதனை விடத் தாழ்ந்ததாக இருக்குமாயின் முதலாவது தீர்மானத்தை அது கொச்சைப்படுத்துவதாகிவிடும.;

2 வது வட்டுக்கோட்டைத் தீர்மானம் மிகவும் பலவீனமான தீர்மானமாக இருக்கிறது. இதை 2 வது என்று சொல்வது கூட பொருத்தமானது அல்ல. ஏற்கனவே புலம் பெயர் மக்களினால் 2 வது வட்டுக்கோட்டைத் தீர்மானம் என ஒரு பொது வாக்கெடுப்பாக மேற்கொள்ளப்பட்டது. எனவே இதனை 3 வது வட்டுக்கோட்டைத் தீர்மானம் என்றே கூற வேண்டும்.

2009 ஆம் ஆண்டு ஆயுதப் போராட்டம் அழிக்கப்பட்ட பின்னர் அரசியல் சூழல் மாறிவிட்டது. தனிநாட்டுப் போராட்டத்தை தொடர்ந்து நடத்தக்கூடிய சூழல் இருக்கவில்லை. இலங்கை அரசியல் யாப்பின் 6 வது திருத்தச் சட்டம் அதற்குப் பெரிய தடையாக இருந்தது. அதனை மீறி இலங்கையில் உள்ள தமிழ் அரசியல் சக்திகளினால் செயற்பட முடியாது. இந்த இக்கட்டான நிலையை தமிழக செயற்பாட்டாளர்கள் புரிந்திருக்க வேண்டும். வட்டுக்கோட்டை என்ற பெயரைப் பயன்படுத்தாது வேறு பெயரைப் பயன்படுத்தியிருக்கலாம் தவிர இவ்வாறான முக்கிய முடிவுகளை எடுக்கின்றபோது தாயகத்தில் உள்ளவர்களுடனும் புலம் பெயர் தரப்பினருடனும் வலுவான கலந்துரையாடலை மேற்கொண்டு அனைவரும் இணைந்த ஒரு முயற்சியாக முன்னெடுத்திருக்கலாம்.

இந்த மாநாட்டை ஏற்பாடு செய்தவர்களுக்கு ஓர் வரலாறு இருக்கிறது. தமிழ் மக்களின் போராட்டத்தில் காத்திரமான பங்களிப்பை அவர்கள் ஆற்றியிருந்தனர். குறிப்பாக மாநாட்டுக்குத் தலைமை வகித்த காசி ஆனந்தனின் பங்களிப்பும் இணைப்பாளராகக் கடமையாற்றிய இராமு மணிவண்ணனின் பங்களிப்பும் வார்த்தைகளில் கூறக்கூடியவை அல்ல. இதில் உரையாற்றியவர்களின் பங்களிப்பையும் குறைத்து மதித்துவிட முடியாது. எனவே அவர்களை நோகடிக்கும் விதத்தில் விமர்சனங்களை முன்வைப்பது தமிழ் அரசியலுக்கு ஆரோக்கியமானதல்ல.

இன்று இந்தியாவிற்கு ஓர் தேவை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழ் மக்களுக்கு இந்தியா தேவை என்பதைவிட இந்தியாவிற்கு தமிழ் மக்களின் தேவை உயர்வாக உள்ளது. இந்த யதார்த்த நிலையை எப்படி அணுகுவது என்பது தொடர்பில் தமிழ்த் தரப்பிடம் முறையான திட்டங்கள் இருத்தல் வேண்டும். குறிப்பாக இந்தியாவின் நலன்களுக்கும் தமிழ் மக்களின் நலன்களுக்குமிடையே பொதுப் புள்ளியைக் கண்டுபிடித்து அதனைப் பலப்படுத்தும் மார்க்கங்கள் பற்றி யோசிப்பதே பொருத்தமானதாக இருக்கும். இவற்றை மேற்கொள்வதற்கு தமிழ் மக்களுக்கென ஓர் வெளிநாட்டுக் கொள்கையும் ஓர் இராஜதந்திர லொபியும் அவசியம்.

இம் மாநாட்டை ஜெயலலிதா காலத்தில் தமிழக சட்டசபை நிறைவேற்றிய தீர்மானங்களின் அடிப்படையில்  முன்னெடுத்திருக்கலாம். தமிழக சட்டசபை அரசியல் தீர்வுக்கு பொது வாக்கெடுப்பு நடாத்துதல் வேண்டும், இன அழிப்பிற்கு சர்வதேச விசாரணை வேண்டும். என்கின்ற தீர்மானங்களை நிறைவேற்றியிருந்தது.

இன்று தமிழ் மக்கள் அரசியல் தீர்வு என்கின்ற அடிப்படைப் பிரச்சினை, இன அழிப்புக்கு சர்வதேச நீதி கோரும் பிரச்சினை, அரசியற் கைதிகள் விடுதலை, காணிப்பறிப்பு காணாமல் போனோர் விவகாரம் போன்ற இயல்பு நிலையைக் கொண்டுவருதல் பிரச்சினை, போரினால் பாதிக்கப்பட்டவர்களின் நலன்களைப் பேணுகின்ற அன்றாடப் பிரச்சினை என ஐந்து வகையான பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்றனர். இவற்றிற்கு தீர்வு காணக்கூடிய வகையில் தெளிவான கோரிக்கைகளை முன்வைத்திருக்கலாம்.

எது எப்படி இருந்த போதும் தமிழக செயற்பாட்டாளர்கள் இலங்கைக்கு வெளியே ஒரு முயற்சியை எடுத்திருக்கிறார்கள். அவற்றில் தவறுகள் இருந்தாலும் அவற்றைச் சுட்டிக்காட்டி திருத்துவதற்கு முயற்சிக்க வேண்டுமே தவிர கடுமையாக விமர்சனங்களை முன்வைத்து அவர்களை நோகடிக்கக் கூடாது.

தமிழ் அரசியல் கற்றுக்கொள்ள வேண்டியது எதிரிகளை நண்பர்களாக்கும் கலையையே தவிர நண்பர்களை எதிரிகளாக்கும் கலையை அல்ல.

Recommended For You

About the Author: Editor Elukainews