தமிழ்த்தேசத்தை கட்டியெழுப்புவதில் கட்சி அரசியல் வேண்டாம்…..!சி.அ.ஜோதிலிங்கம்.

தமிழ் பிரதேசங்களிலுள்ள உள்ளூராட்சிச் சபைகளின் வரவு செலவுத்திட்டத்தைத்
தோற்கடிப்பது என்பது தற்போது வழமையாகிவிட்டது.

தமிழ்க்கட்சிகள் தமது கட்சி
அரசியல் காழ்ப்புணர்வுகளின் கோர முகங்களை உள்ளூராட்சிச் சபைகளில் காட்ட முற்படுகின்றன. இவ்வாறு தோற்கடிக்கப்படுவதால் நிர்வாகத்தில் ஏற்படும் நெருக்கடிகளை  இவர்கள் கவனத்தில் எடுப்பதில்லை. நிதிக் கொடுக்கல் வாங்கல் உட்பட அபிவிருத்தியின் தொடர்ச்சியைப் பேணுவதில் உள்ள சங்கடங்கள் எல்லாம்
இக்கட்சிகளுக்கு தெரியாதவையல்ல.

கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் வவுனியா வடக்கு பிரதேச சபையின் வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்டது.  இப்பிரதேசசபை சிங்களத்தரப்பின் கைகளுக்கு
சென்று விடக்கூடிய அபாயம் இருப்பதும் இக்கட்சிகளுக்கு நன்றாகவே தெரியும்.
அப்பிரதேசங்களிலாவது ஒருங்கிணைந்த அரசியலைப் பின்பற்றுவதற்கு
முன்வராமை தான் மிகுந்த கவலைக்குரியது.

இத்தனைக்கும் பெருந்தேசியவாதத்திற்கு
நெருக்கடி வரும்போது சிங்களக்கட்சிகள் ஓரணியில் நிற்கின்றன. வல்வெட்டித்துறை
நகர சபையின் வரவு செலவுத்திட்டம் முன்னர் தோற்கடிக்கப்பட்டது. பிரபல தமிழ் அரசியல்வாதியான சுமந்திரனின் கரம் இதற்கு பின்னால் நின்றதாக பேசப்படுகின்றது. தனக்கு பாதிப்பென்றால் சுமந்திரன் கட்சி நலன்கள் பற்றியோ, தமிழ் மக்களின் நலன்கள் பற்றியோ அக்கறைப்படுவதில்லை என்ற காரசாரமான விமர்சனமும் அவர் தொடர்பாக உண்டு.

வரும் மார்கழி 15 ம் திகதி யாழ்ப்பாணம் மாநகர சபையின் வரவு
செலவுத்திட்டம் விவாதத்திற்கு வருகின்றது. அதன்போது அதனைத் தோற்கடித்து மேஜர்
மணிவண்ணனை பதவியில் இறக்குவதற்கான முயற்சிகள் திரைமறைவில் நடைபெறுவதாக
செய்திகள் வருகின்றன.

ஆரியகுளம் மரபுரிமைச் சொத்து திறந்து வைக்கப்பட்ட
பின்னர் மேஜர் மணிவண்ணனின் செல்வாக்கு குடாநாட்டு மக்கள் மத்தியில் அபரிதமாக வளர்ச்சியடைந்துள்ளது.

இந்த வளர்ச்சி தமது வாக்கு வங்கியை வெகுவாகச் சரித்து விடும் என்பதற்காகவே கவிழ்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட முயற்சிப்பதாகவும்
செய்திகள் வருகின்றன. இந்தக்கவிழ்ப்பு விவகாரத்தில் தமிழ்க்கட்சிகள் தமது
முரண்பாடுகளைக் கடந்து ஒருங்கிணைந்து செயற்படுவதாகவும் தகவல்கள் வருகின்றன.

யாழ்ப்பாணம் மாநகர சபையில் மூன்று தரப்புக்களே பலமாக உள்ளன.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு,  ஈழமக்கள் ஜனநாயகக்கட்சி,  தமிழ்த்தேசிய மக்கள்
முன்னணியின் மணிவண்ணன் தரப்பு என்பவையே அவையாகும்.

இவற்றில் ஏதாவது இரண்டு
தரப்புக்கள் இணைந்தால் தான் அதிகாரத்தை கைப்பற்றலாம். தற்போது மணிவண்ணன்
தரப்பு ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆதரவுடனும், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின்
ஒரு உறுப்பினரின் ஆதரவுடனும் அதிகாரத்தில் இருக்கின்றது.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் இப்படியே சென்றால் தமது ஆதரவுத்தளம் விழுந்து விடும் என்பதற்காக தோற்கடிக்க இருக்கிறார்கள்.

முன்னர் மணிவண்ணனை
அதிகாரத்திற்கு கொண்டு வந்த சுமந்திரன் தற்போது மணிவண்ணனை இறக்குவதற்கு
முயற்சிப்பதாகவும் கதைகள் அடிபடுகின்றன. இதற்கு இரண்டு காரணங்கள் கூறப்படுகின்றது. மணிவண்ணனை தனக்கு சார்பாக கையாள முடியும் என்று நம்பியே
அவர் ஆதரவு கொடுத்தார். தற்போது கையாள முடியாது என சுமந்திரன்
நினைக்கின்றார் என்பது ஒரு காரணம். இரண்டாவது காரணம் சுமந்திரனுக்கு குடாநாட்டின் மத்தியப் பிரதேசங்களில் ஆதரவு குறைந்துள்ளது.

அவர் தனது பிரதான
ஆதரவுத்தளமாக கரையோரப் பிரதேசங்களையே நம்பி இருக்கின்றார். எனவே
அப்பிரதேசத்தைச் சேர்ந்த சொலமன் சிறிலை மேஜராக்குவதன் மூலம் ஆதரவுத்தளத்தை
தக்க வைக்க முடியும் என நினைக்கிறார். இதை விட தமிழரசுக்கட்சியின் தலைமைக்கனவும் அவருக்கு இருக்கின்றது. இதன் மூலம் அக்கனவையும் சாத்தியப்படுத்த முனைகின்றார்.

எனினும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்குள்ளும் மணிவண்ணனுக்கு ஆதரவான
தரப்புக்கள் உள்ளன. அவர்கள் அவசரப்பட வேண்டாம் என ஆலோசனை கூறி
வருகின்றன.

ஈழமக்கள் ஜனநாயகக்கட்சி நிலைமைகள் இப்படியே நகர்ந்தால் தமக்குரிய ஒரு பாராளுமன்ற ஆசனமும் இல்லாமல் போகும் என அஞ்சுகின்றது.  இதனால்
கட்சியின் ஒருபிரிவினர் மணிவண்ணனை பதவியிலிருந்து அகற்ற வேண்டும்
என்பதில் தீவிரமாக உள்ளனர். முன்னாள் மேஜர் யோகேஸ்வரி பற்குணராஜா தலைமையிலான பிரிவினர் தீவிரமாக இருப்பதாகக் கூறப்படுகின்றது. மறுபக்கத்தில்
றொமீடியஸ் தலைமையிலான பிரிவினர் மணிவண்ணனுக்கு ஆதரவாக உள்ளர்.  எனினும்
தலைமையைப் பொறுத்தவரை யோகேஸ்வரி பற்குணராஜாவிற்கே அதிக செல்வாக்கு
உண்டு. ஆனால் கட்சித் தலமைமையின் தீர்மானத்தை இருதரப்பும் ஏற்றுக் கொள்ளும்
சூழலே உண்டு.

கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா இவ்வாறான விடயங்களில் அவசரத்தைக்
காட்டுவதில்லை. அவர் 14 ம் திகதி இரவே வரவு செலவுத் திட்டத்தில் என்ன நிலைப்பாட்டை
எடுக்க வேண்டும் என கூறுவார் என்றும் தகவல்கள் வந்துள்ளன.
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் கஜேந்திரகுமார் தரப்புக்கு மாநகர
சபையில் மூன்று ஆசனங்களே உண்டு. அவர்கள் முன்னாள் மேஜர் ஆர்னோல்டைத் தவிர யாரை மேஜராக நிறுத்தினாலும் ஆதரவு தருவதாக தமிழத்தேசியக் கூட்டமைப்புக்கு
உறுதியளித்துள்ளனர்.

மணிவண்ணன் தரப்பை நிர்மூலம் ஆக்கினால் தான் தமது
தரப்பின் இருப்பு பேணப்படும் என அக்கட்சி கருதுகின்றது.
அரசாங்கம் மணிவண்ணன் தொடர்ந்து பதவியிலிருப்பதை விரும்பவில்லை அதற்கு காரணங்கள் உண்டு. ஒன்று பெருந்தேசியவாத நிகழ்ச்சி நிரலை நகர்த்துவதற்கு மணிவண்ணன் தடையாக இருக்கின்றார் என்பதாகும். இது விடயத்தில் அரசாங்கத்தின் அனைத்து முயற்சிகளையும் மணிவண்ணன் இலாவகமாக தடுத்திருக்கின்றார். நாகவிகாரையின் தேரர் ஆரிய குளப்புனரமைப்பை தடுப்பதற்கும் அதனை மரபுரிமைச் சொத்தாக பிரகடனப்படுத்துவதை தடுப்பதற்கும் பல வழிகளிலும் முயன்றிருந்தார். தற்போது கூட பல நெருக்கடிகளை கொடுத்துவருகின்றனர். எனினும் மணிவண்ணனின் நகர்வுகள் இவற்றையெல்லாம் கடந்து முன்னேறுகின்றன.

ஆரியகுள புனரமைப்பின் சிறப்பான அம்சம் வரலாற்று ஆதாரங்களுடன்
அதனை மரபுரிமைச் சொத்தாக பிரகடனப்படுத்தியமை தான். அதற்கான கல்வெட்டு
தொல்லியல் துறை பேராசிரியர் புஸ்பரத்தினத்தின் வழிகாட்டலில் மூன்று மொழிகளிலும் பொறிக்கப்பட்டுள்ளது. அதில் பொறிக்கப்பட்டவாசகத்தின்
சுருக்கம் இது தான்.
“நல்லூரை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த ஆரியச் சக்கரவர்த்திகள் என்னும் தமிழ் மன்னர்கள் நகரை அழகுபடுத்துவதற்கான உருவாக்கப்பட்ட குளமே இதுவாகும்.
இதில் ஆரியச் சக்கரவர்த்திகள் தமிழ் மக்கள் தான் என்பதற்கான
ஆதாரங்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

பெருந்தேசியவாதம் வடக்கு கிழக்கில் பௌத்த அடையாளங்களை பலவந்தமாக தேடிக்
கொண்டிருக்கையில் தமிழ் மரபு சொத்துக்களை அடையாளம் காண்பதும், அதனை நிலை
நிறுத்துவதும் அவசியம் மாநகர சபை அந்தப் பணியை தொடக்க வைத்திருக்கின்றது. இரண்டாவது கொழும்பில் பெரியளவிற்கு தங்கியிராது சமூக முதலீடுகளை
மணிவண்ணன் புகுத்த முயல்வதாகும். ஆரியகுள புனரமைப்பு பணிகள் தொழில் அதிபர் தியாகேந்திரனின் நிதிப் பங்களிப்பினால் மேற்கொள்ளப்பட்டது.

தொடர்ந்து சுண்டுக்குளி மறவன் குளம், நாயன்மார்கட்டு குளம், என்பனவும் இவரின்
நிதிப்பங்களிப்பில் புனரமைக்கப்படவுள்ளன. இது அரசாங்கத்தின் மேலாதிக்கத்திற்கு எதிரானது. எனவே இன்று தமிழ்க்கட்சிகள் அரசாங்கம் என்கின்ற இரு தரப்பிற்கும் மணிவண்ணன் பொது எதிரியாக மாறியுள்ளார்.

யாழ்ப்பாண மாநகர சபை தமிழ் மக்களின் பொதுச் சொத்தாகும்.
யாழ்ப்பாணம் கலாச்சார நகராக இருப்பதனால் யாழ்ப்பாண மாநகர சபை உலகலாவிய முக்கியத்துவம் அதிகமானது. யாழ் மாநகர சபை தொடர்பான அனைத்து விடயங்களையும் உலகம் உன்னிப்பாக கவனித்து வருகின்றது. எனவே மாநகர சபையில் ஏற்படும்
குழப்பங்கள் தமிழத்தேசிய அரசியலின் சர்வதேச நகர்வுகளையும் கடுமையாக
பாதிக்கும். தவிர மாநகர சபை முன்னரும் கூறியது போல மறவன் குளம், நாயன்மார்கட்டு குளம், தொல்லியல் அடையாளங்களை புனரமைப்புச் செய்தல் என பல
செயல்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. ஆரியகுளத்தை தமிழ் மக்களின் மரபுரிமைச் சொத்தாக பெருந்தேசியவாத்திடமிருந்து பாதுகாக்க வேண்டியுள்ளது
இந்திய உதவியின் கீழ் உருவாக்கப்பட்ட கலாச்சார மண்டபத்தை கொழும்பு
கையகப்படுத்தாமல் தடுக்க வேண்டியிருக்கின்றது. நாவலர் மண்டபத்தையும் தமிழ்
மக்களின் சொத்தாக பாதுகாக்க வேண்டியுள்ளது.
இந்த செயல் திட்டங்கள் சீராக முன்னேற வேண்டுமானால் யாழ் மாநகர சபை எந்தவித குழப்பமுமின்றி சுமூகமாக இயங்க வேண்டும். இதனை சுமூகமாக இயங்க வைப்பது
தமிழ் மக்கள் அனைவரினதும் கூட்டுப் பொறுப்பாகும் இன்னோர் வகையில்
கூறுவதானால் இது தமிழ்த் தேசத்தை கட்டியெழுப்புதல் பற்றிய விவகாரம். இந்த விவகாரத்தில் கட்சி அரசியல் முன்னிலைக்கு வருவது தமிழத்தேசத்தின் நலன்களுக்கு
ஆரோக்கியமானதல்ல.
தமிழ்த்தரப்பு தங்கள் கண்களை தாங்களே குத்துவதை உடனடியாக நிறுத்துவது அவசியம்.

Recommended For You

About the Author: Editor Elukainews