யாழ் மாநகர சபையை கட்டியெழுப்புவதில் தமிழ் மக்களுக்கு அதிக விழிப்புணர்வு தேவை சி.அ.யோதிலிங்கம்.

யாழ்ப்பாணம் மாநகரசபை வரவுசெலவுத்திட்ட விவகாரம் பரபரப்புக்கு மத்தியில் முடிவிற்கு வந்துள்ளது. ஈழமக்கள் ஜனநாயகக்கட்சி,  சிறீலங்கா
சுதந்திரக்கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணியும், ஐக்கிய தேசியக்கட்சியின்
முஸ்லீம் உறுப்பினரும்,  வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக
வாக்களித்துள்ளனர். தமிழ்த்தேசியக்கூட்டமைப்பும்,  தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியும்,  எதிராக வாக்களித்துள்ளனர்.

24 க்கு 21 என்ற வாக்கு வீதத்தில்
வரவு செலவுத்திட்டம் வெற்றியடைந்திருக்கின்றது.
வரவு செலவுத்திட்ட விவாதத்தின் போது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின்
உறுப்பினர் சுவாதீஸ் நல்லூர் அரசடிப்பிரதேச வீதிக்கு 8 லட்சம்
ஒதுக்கித்தருமாறு கேட்டிருந்தார். மணிவண்ணன் 10 லட்சம் ஒதுக்கித்தருவதாக கூறி
ஒதுக்கியிருந்தார். உறுப்பினர் உடனடியாகவே ஒதுக்கீட்டிற்கு நன்றி
தெரிவித்திருந்தார். இதே போல தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் இன்னோர் உறுப்பினர் தர்சானந் சபாபதி வீதிக்கு நிதி ஒதுக்கித் தருமாறு கேட்டார். அதற்கு மேஜர் மணிவண்ணன் வீதி அபிவிருத்தி அதிகார சபை அவ்வீதிக்கு
காபற் போடுவது எனத் தீர்மானித்துள்ளது.  அவர்கள் அதனைச் செய்யாவிடின் 5
மில்லியன் ஒதுக்குவதாகக் கூறியிருந்தார்.

இதை விட முழு மாநகர சபைப் பிரதேசத்திற்கும் கொரோனா நிதியாக 10 லட்சம் ஒதுக்க வேண்டும் எனக் கேட்டிருந்தார். மணிவண்ணன் பதின்மூன்று லட்சத்து
ஐம்பதினாயிரம் ஒதுக்குவதாகக் குறிப்பிடடு ஒதுக்கினார். அவரும் நன்றி தெரிவித்து விட்டு அமர்ந்தார். வேறு திருத்தங்கள் எவற்றையும்
தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் உறுப்பினர்கள் எவரும் முன்வைக்கவில்லை.
கூட்டமைப்பு உறுப்பினர்களின் திருத்தங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்ட
பின்னரும் வரவு செலவுத்திட்டத்திற்கு எதிராக வாக்களித்திருந்தனர்.

வரவு செலவுத்திட்டத்திற்கு முதல் நாள் இரவு மணிவண்ணன் நேரடியாகவே
தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவையைச் சந்தித்து மாநகர சபை ஆரம்பித்த வேலைகளை சுமூகமாக முடிக்க வேண்டியிருக்கின்றது. எனவே வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவு
தருமாறு கேட்டிருந்தார். மாவை அதற்கு உங்களுடைய கருத்துக்களை ஏற்றுக்கொள்கின்றோம். வேண்டுகோளை பரிசீலிக்கின்றோம் எனக் கூறியிருந்தார்.

அதே இரவு மணிவண்ணன் தரப்பினர் சுமந்திரனையும் சந்தித்து ஆதரவு
தருமாறு கேட்டிருந்தனர். சுமந்திரன் தனக்கு ஆதரவு அளிப்பதே விருப்பம்
ஆனால் இந்த விவகாரத்தில் தீர்மானம் எடுக்கும் நிலையில் நான் இல்லை எனக் குறிப்பிட்டிருந்தார்.
சில நாட்களுக்கு முன்னர் மேயர் மணிவண்ணன் சுண்டுக்குளி மறவன்
குளம், நாயன்மார்கட்டு குளம்,மணிக்கூட்டுக்கோபுரம் என்பவற்றை புனரமைப்புச் செய்வதற்கான நிகழ்வுகளை அங்குரார்ப்பணம் செய்திருந்தார்.
மறவன்குள அங்குரார்ப்பண நிகழ்வுக்கு கூட்டமைப்பைச் சேர்ந்த பிரதி மேஜர் ஈசனையே பிரதம விருந்தினராக அழைத்திருந்தனா். அவரே அடிக்கல்லையும்
நாட்டி வைத்தார்.

நாயன் மார்கட்டு குள நிகழ்விற்கு அந்தக் குளப்பிரதேச மாநகர சபை
உறுப்பினர் மதிவதனி பிரதம விருந்தினராக அழைக்கப்ட்டார். இவர்
கூட்டமைப்பைச் சேர்ந்தவர். அடிக்கல்லையும் இவரே நாட்டினார். அந்நிகழ்வில் “மணிவண்ணன் மேஜராக எமக்கு கிடைத்தமை நாம் செய்த பாக்கியம் எனக்
கூறியிருந்தார்.

மணிக்கூட்டுக் கோபுரம் திருத்த நிகழ்வுக்கு கூட்டமைப்பைச் சேர்ந்த
அவ்வட்டாரத்தின் உறுப்பினர் கதிரவேலு நித்தியானந்தன்
பிரதமவிருந்தினராக அழைக்கப்பட்டடிருந்தார். அடிக்கல்லையும் நாட்டினார்.
அவர் நிகழ்வில் பேசும் போது “இத்தகைய முதல்வரே எங்களுக்கு தேவை” எனக்
குறிப்பிட்டார்.
இவ்வாறு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கும்
தலைவர்களுக்கும் மேயர் மணிவண்ணன் முக்கியத்துவம் கொடுத்த போதும் வரவு
செலவுத்திட்டத்திற்கு எதிராகக் கூட்டமைப்பினர் வாக்களித்தனர். இவ்வாறு எதிர்த்து வாக்களிப்பதற்கு பின்புலமாக சி.வி.கே. சிவஞ்ஞானமே இருந்தார் எனவும் கூறப்படுகிறது.

கூட்டமைப்பின் பல உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களிப்பதை விரும்பாத போதும் சிவஞானத்தின் வற்புறுத்தலினாலேயே
எதிர்த்து வாக்களித்ததாகவும் கூறப்படுகிறது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் திருத்தங்கள் எவற்றையும்
முன்வைக்கவில்லை. மணிவண்ணனுடன் உள்ள கட்சி அரசியல் முரண்பாடு காரணமாக
எதிர்த்து வாக்களிப்பதென முன்கூட்டியே அவர்கள் தீர்மானித்திருந்தனர்.
என்னதான் முரண்பாடுகள் இருந்தாலும் நாகரீகமாக முரண்பாடு இருக்கின்றது. ஆனாலும் “மாநகர சபையின் சுமூக செயற்பாட்டிற்காகவும், மக்களின் பொது விருப்புக்காகவும் வாக்களிக்கின்றோம்” எனக் கூறி ஆதரவு தெரிவித்திருந்தால் கட்சியின் மதிப்பு மேலும் உயர்ந்திருக்கும்.
இத்தனைக்கும் தமிழ்தேசிய மக்கள் முன்னணயின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன் பொலிசார் கைதுசெய்யப்பட்டதைக்
கண்டித்து முன்னணியின் மாநகரசபை உறுப்பினர் சபையில் பிரேரணை கொண்டுவந்த போது மணிவண்ணன் அதனை ஏகமனதாக நிறைவேற்றச் செய்தார்.
கட்சிகளுக்கு வெளியே இக் கட்டுரையாளர் உட்பட பாராளுமன்ற
உறுப்பினர் விக்கினேஸ்வரன்,  முன்னாள் மாகாணசபை அமைச்சர் அனந்தி சசீதரன் ஆகியோர் மிகவும் வினயமாக வரவுசெலவுத் திட்டத்திற்கு ஆதரவு கொடுக்குமாறு பகிரங்கமாக கேட்டிருந்தனர்.

நீதியரசர் விக்கினேஸ்வரன்
ஊடாக அறிக்கை மூலம் கேட்டிருந்தார். அனந்தி சசிதரன் ஊடாக அறிக்கை
மூலமும் முகநூல் காணொளி உரைமூலம் கேட்டிருந்தார்.
இக் கட்டுரையாளர் சென்றவார வீரகேசரி சமகால அரசியல் பக்கம்
மூலமாகவும், ஊடகமாநாடு மூலமாகவும், முகநூல் பக்கம் மூலமாகவும் “தேசத்தை
கட்டியெழுப்புவதில் கட்சி அரசியல் வேண்டாம். யாழ் மாநகரசபை தமிழ்
மக்களின் பொதுச் சொத்து. கட்சி முரண்பாடுகளைக் கடந்து அதனைப் பாதுகாக்க முன்வாருங்கள்” எனக் கேட்டிருந்தார். தமிழ்க் கட்சிகள் வரவுசெலவுத் திட்டத்தை
தோற்கடிப்பதனால் மாநகரசபை கலையக் கூடிய அபாயமும் அரசாங்கம் நிர்வாகத்தை பொறுப்பெடுக்க வெண்டிய சூழலும் ஏற்படும், மரபுரிமைச்
சொத்துக்களை புனரமைப்பதற்கான சமூக முதலீடுகள் இரத்துச் செய்யப்படும்.
நிர்வாகத்தைக் கொண்டு நடாத்துவதில் தடங்கல்கள் ஏற்படும். பெரும்தேசியவாத நிகழ்ச்சி நிரல் அரங்கேற்றப்படும், சர்வதேச அபிப்பிராயம் பலவீனப்படும். என்கின்ற பாதிப்புக்கள் வரும் எனச்
சுட்டிக்காட்டியிருந்தார்.

சர்வேஸ்வரா போன்ற யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர்களும்,  வேறு பல நலன் விரும்பிகளும் முகநூல் மூலம் தோற்கடிப்பதனால் ஏற்படும்
அபாயங்கள் பற்றி எச்சரித்திருந்தனர். புலம்பெயர் தரப்பிலிருந்தும்
பலர் மாநகரசபையை குழப்பவேண்டாம் எனக் கேட்டிருந்தனர். மொத்தத்தில் தமிழ் மக்களின் பொது அபிப்பிராயம் வரவுசெலவுத் திட்டத்தை தோற்கடிக்கக்கூடாது என்பதாகவே இருந்தது. பாராளுமன்ற உறுப்பினர்.
சுமந்திரன் “எதிர்த்து வாக்களித்து விட்டு எவ்வாறு மக்கள் மத்தியில்
நடமாடப்போகின்றீர்கள்” என கூட்டமைப்பின் மாநகரசபை உறுப்பினர்களைக்
கேட்டிருந்தார்.

மொத்த கள நிலவரம் மணிவண்ணனுக்கு சார்பாக இருந்த போதும் கூட்டமைப்பினரும், முன்னணியினரும் எதிர்த்து வாக்களித்து தங்கள் தலையில்
தாங்களே மண் அள்ளிப்போட்டுள்ளனர்.

இதற்கு காரணம் முழுக்க முழுக்க
தேர்தல் நலன் சார்ந்த கட்சி அரசியலே! இதன் மூலம் இக்கட்சிகளின் கொள்கைச் சாயம் வெழுக்கத் தொடங்கியுள்ளது.

கூட்டமைப்பினரும்,  முன்னணியினரும் ஆதரவாக
வாக்களித்திருந்தால் மாநகர சபைக்கு வலுவான தமிழ்த்தேசிய முகத்தை
கொடுத்திருக்கலாம். மாநகர சபை ஆற்ற வேண்டிய தமிழ்த்தேசிய
வேலைத்திட்டங்களையும் இலகுவாக நிறைவேற்றியிருக்கலாம். அரசாங்க சார்பு கட்சிகளில் தங்கியிருக்க வேண்டிய நிலை மாநகரசபைக்கு ஏற்பட்டிருக்காது.

ஐக்கிய தேசியக்கட்சியின் மூன்று உறுப்பினர்களில் முஸ்லீம்
உறுப்பினரான நிலாம் வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக
வாக்களித்திருந்தார். அவரை ஆதரவாக வாக்களிக்கக் கூடாது என முன்னாள் அமைச்சர் விஐயகலா மகேஸ்வரன் எச்சரித்த போதும் அதனை மீறி ஆதரவாக
வாக்களித்தார்.  வரவு செலவத்திட்ட வெற்றியை ஆடம்பரமாக்க மணிவண்ணன் விரும்பியிருக்கவில்லை. இருந்த போதும் வெற்றி கிடைத்தவுடன் வெளியில் பட்டாசு கொழுத்துவதற்கு ஏற்பாடு செய்தவரும் முஸ்லீம் உறுப்பினரான நிலாம் தான்.

சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் இரு உறுப்பினர்களின் ஆதரவு
கிடைக்கும் என்பது முன்னரே எதிர்பார்க்கப்பட்டது தான்.  கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் அங்கையன் இராமநாதன் பாராளுமன்றத்திலேயே
மணிவண்ணனின் செயல்திட்டங்களை பாராட்டியிருந்தார்.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஒரே உறுப்பினரான திருமதி
நர்மதா விஐயகாந் வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்திருந்தார்.
அன்றைய தினம் அவருக்கு பிரசவ தினம் எனினும் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக சபைக்கு வருகை தந்திருந்தார்.

பிரசவ வலி காரணமாக ஆசனத்தில்
இருப்பதற்கே சிரமப்பட்டார். மேயருக்கு அடுத்தபடியாக முதல்நிலையிலேயே
அவரை அழைத்து வாக்களிக்கச் செய்த பின் மருத்துவமனைக்கு அனுப்பப்ட்டார்.
அவர் யாழ் மாநகர சபையின் பின்தங்கிய பிரதேசமான திருநகரைப்
பிரதி நிதித்துவப்படுத்துபவர் மேயரிடம் அவர் திருநகர்ப் பிரதேசத்தில் உள்ள விளையாட்டு மைதான பிரச்சினையை தீர்க்குமாறு வேண்டியிருந்தார்.
மேஜர் தீர்த்துத் தருவதாக உத்தரவாதத்தை வழங்கியிருந்தார். இந்த விவகாரத்தில் மிகவும் கனவானாக நடந்து கொண்டவர் டக்ளஸ் தேவானந்தா தான். வரவு செலவுத்திட்டம் தொடர்பாக அவரது கட்சி இரண்டாக பிளவுபட்டிருந்தது. முன்னாள் மேஜர் யோகேஸ்வரி பற்குணராசா தரப்பினர்
ஆதரவாகவாக்களிக்க கூடாது என்பதிலேயே உறுதியாக நின்றனர். அவரது தரப்பிற்கு நான்கு உறுப்பினர்கள் ஆதரவாக இருந்தனர். சட்டத்தரணி றொமீடியஸ் தரப்பினர் வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக நின்றனர்.
அவரது பக்கத்தில் ஆறு உறுப்பினர்கள் நின்றனர்.. எனினும் தலைமை எடுக்கும் முடிவிற்கு இரு தரப்பும் கட்டுப்படக் கூடியவர்களாக இருந்தனர்.

வாக்களிப்பு தினம் வரை ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆதரவு
யாருக்கு கிடைக்கும் என்பதில் குழப்பம் நிலவியிருந்தது. யாழ் மாநகர சபை சுமூகமாக இயங்க வேண்டும் என்பதற்காகவும் மக்கள் அபிப்பிராயத்திற்கு
மதிப்புக் கொடுக்க வேண்டும் என்பதற்காகவும் டக்ளஸ் தேவானந்தா ஆதரிக்கும் முடிவினை எடுத்தார். இது தொடர்பாக எந்த நிபந்தனைகளையும் அவரது கட்சி விதிக்கவில்லை.  அவரது இந்தக் கனவான செயற்பாட்டினால் அவரது மதிப்பு மக்கள் மத்தியில் சற்று உயர்ந்திருக்கிறது எனலாம்.

வாக்களிப்பு முடிந்தவுடனேயே ஏற்கனவே திட்டமிட்ட மாநகர
சபையின் செயல்திட்டங்களை முன்னெடுப்பதற்கான ஒழுங்குகளை மணிவண்ணன் முடுக்கினார். நாயன்மார்கட்டு குள புனரமைப்பு வேலைகள்,  மறவன் குள
புனரமைப்பு வேலைகள், மணிக்கூட்டுக் கோபுர புனரமைப்பு வேலைகள், கோம்பையன் மயான புனரமைப்பு வேலைகள் என்பவற்றுடன் சங்கிலியன்
அரண்மனையின் முகப்ப வாசல் புனரமைப்பு வேலைகள், படையினரால் கொல்லப்ட்ட கிருசாந்திக்கு செம்மணியில் நினைவுத்தூபி கட்டும் வேலைகள்
என்பன முடுக்கி விடப்பட்டுள்ளன .

தற்போது வரவு செலவுத்திட்ட ஆரவாரம் முடிவடைந்து விட்டது.
முன்னரும் குறிப்பிட்டது போல யாழ் மாநகரசபை தமிழ் மக்களின்
மிகப்பெரிய சொத்து யாழ்ப்பாணம் தமிழ் மக்களின் கலாச்சார தலைநகராகவும் இருப்பதனால் அதன் சர்வதேச முக்கியத்துவமும் அளப்பரியது. எனவே கட்சி
அரசியலுக்கு அப்பால் மாநகர சபையை சுமூகமாக கொண்டு நடாத்துவதே இன்று உள்ள அவசியமான பணியாகும்.

தமிழ் மக்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வு இல்லாமல் இந்தப் பணியினை வினைத்திறனுடன் முன்னெடுக்க முடியாது.

Recommended For You

About the Author: Editor Elukainews