றம்புட்டான் பழத் தோற்றத்தையுடைய ஒமிக்ரோன் திரிபின் 32 திரிபுகள்

ஒமிக்ரோன் கோவிட் திரிபின் 32 பிறழ்வுகள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவை டெல்டா மற்றும் அல்பா திரிபுகளிலுள்ள பிறழ்வுகளை விடவும் அதிகமாகும் என கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் வைரஸ் தொடர்பான நிபுணர் வைத்தியர் ஜூட் ஜயமஹா தெரிவித்துள்ளார்.

டெல்டா வைரஸ் திரிபின் 23 பிறழ்வுகளும் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் றம்புட்டான் பழத்தின் தோற்றத்தினையுடைய ஒமிக்ரோன் கோவிட் திரிபின் 32 பிறழ்வுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவை டெல்டாவினை விட பரவும் அபாயம் மிக்கதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

சமூகத்தில் பரவும் ஒமிக்ரோன் தொற்று மற்றும் தனி நபர்கள் மீதான  அதன் விளைவுகள் குறித்து உறுதியான அறிக்கையை வெளியிட போதுமான தரவு இல்லை. தொற்றின் பாதிப்பு தொடர்பில் உறுதியான தகவல்கள் கிடைக்கும் போதே உண்மையான தகவல்களை வெளியிட முடியும்.

எனினும் ஒமிக்ரோன் தொற்றுடன் தொடர்புடைய மரணங்கள் இதுவரை பதிவு செய்யப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டில் 700இற்கும் அதிகமான தொற்றாளர்கள் அடையாளம் காணப்படும் நிலையில் தொற்றாளர்கள் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்படவில்லை என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நாட்டில் கடந்த நவம்பர் மாதம் 9ஆம் திகதி முதல் தொடர்ச்சியாக 700இற்கும் அதிகமான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதேவேளை, நவம்வர் 6ஆம் திகதி முதல் 15 தொடக்கம் 30 வரையான மரணங்கள் பதிவு செய்யப்படுகின்றன.

Recommended For You

About the Author: Editor Elukainews