புறப் பிரச்சினைகளைக் கையாள்வது போல அகப் பிரச்சினையைக் கையாளக் கூடாது. சி.அ.யோதிலிங்கம்.

போரில் இறந்தோரை நினைவு கூருதல் தொடர்பாக வடக்கு-கிழக்கு
ஆயர்கள் மன்றம் விடுத்த அறிக்கை பலத்த வாதப்பிரதிவாதங்களுக்கு
உள்ளாகி தற்போது அந்த தினம் கடந்துள்ளதால் ஓய்வுநிலைக்கு வந்துள்ளது.
அவர்கள் குறித்த தினத்தில் பெரியளவிற்கு நினைவுகூரல்
நடந்ததாகவும் தெரியவில்லை. குறித்த தினத்தை ஒட்டிய வாரம் மாவீரர்
நினைவுவாரமாக இருந்தபடியாலேயே வாதப் பிரதிவாதங்கள் எழுந்திருந்தன.
இதற்கான எதிர்வினைகள் இரண்டு தளங்களிலிருந்து எழுந்தன. ஒன்று
தமிழ்த்தேசியப்பரப்பிலிருந்து எழுந்தது. மற்றையது இந்துமதவாத
சக்திகளிடமிருந்து எழுந்துள்ளது. தமிழ்த்தேசியப் பரப்பிலிருந்து
எழுந்த எதிர்வினைகளில் ஒன்று இரண்டைத்தவிர ஏனையவை நாகரீகமான
முறையில் வெளிவந்தன எனக்கூறலாம்.

அந்த எதிர் வினைகள் கத்தோலிக்க
மதத் தலைவர்களின் இதுவரை கால தேசியப்பங்களிப்பைக் குறிப்பிட்டு
ஆயர்களின் அறிக்கையை வாபஸ் பெறுமாறு கேட்டிருந்தன.

சில அறிக்கைகள் இதற்குப்பின்னால் உள்ள அரசியல் பற்றி
சந்தேகங்களையும் வெளியிட்டிருந்தன.
இந்துமதவாத சக்திகளிடமிருந்து எழுந்த எதிர்வினைகள் தமிழ்த்தேசிய
நிலை நின்று வெளிவந்தன எனக்கூற முடியாது. அதிகளவில் வசை
பாடல்களாகவே இருந்தன. இவற்றில் மறுவன்புலவு சச்சிதானந்தத்தின்
அறிக்கை கடும் வசைபாடல்களாக இருந்தது. அவருடைய நிகழ்ச்சி நிரல் வேறு
என்பதால் இதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை. இந்துமதவாதத்தை வைத்து
தமிழ்த்தேசியத்தை உடைப்பது தான் அவரது நிகழ்ச்சி நிரல். அவரை விட்டு  விடுவோம்.

ஆனால் ஆறுதிருமுருகன் பொதுவாக சர்ச்சைகளுக்குள் மாட்டுப்படாதவர்.  அரசியல் போராட்டங்கள் பற்றி பொதுவாக அவர் அக்கறைப்படுவதில்லை. போராட்டங்களில் கலந்து கொள்வதுமில்லை.
அமைதியாக பல சமூக ஆன்மீகப்பணிகளை மேற்கொண்டு வருபவர். அவர்
கண்டன அறிக்கை வெளியிட்டது தான் ஆச்சரியத்திற்கும் கவலைக்கும்
உரியதாக இருந்தது.
நினைவு கூறல்களைப் பொறுத்தவரை போரில் இறந்த பொது மக்களை
நினைவு கூருவதற்கு மே 18ம் திகதி ஒதுக்கப்பட்டுள்ளது. போராளிகள்
குறிப்பாக தமிழீழ விடுதலைப்புலிகளின் போராளிகளை நினைவு
கூருவதற்கு கார்த்திகை மாத இறுதி வாரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதிலும் மே
18ம் திகதி நினைவு கூரல் 2009 க்கு பின்னர் ஒதுக்கப்பட்டாலும்
மாவீரர் தின வாரம் நீண்டகாலமாகவே அனுஸ்டிக்கப்படுகின்றது. இந்த
நினைவு கூரல்கள் தாயகத்தில் மட்டும் இடம் பெறுவதில்லை. தமிழ் மக்கள்
வாழும் நாடுகளில் எல்லாம் அனுஸ்டிக்கப்படுகின்றது. இந்தத் தினங்களில்
குழப்பங்களை ஏற்படுத்தினால் தமிழர் வாழும் இடமெல்லாம் பாதிப்பு
வரக்கூடிய சூழலே ஏற்படும்.
வடக்கு–கிழக்கு ஆயர்கள் மன்றம் எதற்காக இவ்வாறான தீர்மானத்தை
எடுத்தார்கள் என்பது புரியவில்லை. குழப்பம் ஏற்படுத்த வேண்டும் என்ற
எண்ணம் அவர்களுக்கு அறவே இருக்க வாய்ப்பில்லை.

மாவீரர் தினத்தை  அனுஸ்டிக்க அரசாங்கம் விடப்போவதில்லை. எனவே வேறு பெயர்களில்
அனுஸ்டிப்போம் என தந்திரோபாயமாக அவர்கள் முடிவெடுத்திருக்கலாம்.
அல்லது கத்தோலிக்க மத வழக்கப்படி கார்த்திகை மாதம் முழுவதும் மரித்தோரை
நினைவுகூரும் நாட்களாக அனுஸ்டிக்கப்படுகின்றது. அதில் போரில்
இறந்தோர்களுக்கான தினமாக இதனை ஒதுக்கியிருக்கலாம். இது விடயத்தில்
சர்ச்சைகள் பெரிதாக வரும் என அவர்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

இது தொடர்பாக திருக்கோணமலை ஆயர் வெளியிட்ட அறிக்கையும்
போதுமானதாக இருக்கவில்லை. மாவீரர் தினத்தை தமிழ் மக்களின் கூட்டு துக்க
தினமாக பிரகடனப்படுத்துவதில் ஆயர்கள் ஏன் பின்னடிக்கின்றார்கள்
என்பதும் விளங்கவில்லை. மே 18ம் திகதியை முன்னிட்டு நடந்து

இனப்படுகொலை அதனை கத்தோலிக்க ஆலயங்களில் நினைவுகூர வேண்டும் என
துணிச்சலோடு அறிக்கை விடுத்த ஆயர்மன்றத்திற்கு மாவீரர் தினம்
தொடர்பாக கூட்டுத் துக்கதினமாக அனுஸ்டிக்கும்படி வேண்டுவது பெரிய
விடயமல்ல.

எதிர்வினையாற்றுபவர்கள் இரண்டு விடங்களை கவனத்தில் எடுப்பது
அவசியம். அதில் ஒன்று தேசம் என்பது மக்கள் திரளாகும் தேசியம்
என்பது மக்கள் திரளின் கூட்டுப்பிரக்ஞையாகும். மக்களைத் திரளாக்குவதற்கு
தடையாக இருக்கின்ற விடயங்களை நாம் அகற்றியே ஆக வேண்டும்.
ஆயர்மார்களது அறிக்கை விவகாரம் தமிழ் மக்களது அகப்பிரச்சினையே
ஒழிய புறப்பிரச்சினையல்ல. புறப்பிரச்சினையை கையாள்வது போல
அகப்பிரச்சினையை கையாள முடியாது. இன்னோர் வகையில் கூறுவதாயின் இது
குடும்பப்பிரச்சினை. குடும்பப் பிரச்சினைகளைச் சந்திக்கு கொண்டு வர
முடியாது. கொண்டு வரக் கூடாது. பகிரங்கத்திற்கு கொண்டு வராமல்
சம்பந்தப்பட்டவர்களுடன் பேசித்தீர்க்க வேண்டும்.

ஆயர்மார்களுடன் பேசுவது மறவன்புலவு சச்சிதானந்தத்துக்கு இயலாததாக இருக்கலாம். ஆனால்
ஆறுதிருமுருகனுக்கு இயலாத ஒன்றல்ல. மன்னாரில் இடம் பெறுகின்ற மத
முரண்பாடுகள் கூடப்பேசித்தீர்க்கலாம். நீதிமன்றங்கள் செல்வது
விரும்பத்தக்கது அல்ல. பேசித்தீர்ப்பதற்கு அவை கடினமான
விடயங்களுமல்ல. ஆறுதிருமுருகனுக்கு இது தொடர்பான ஆற்றல் வலுவாகவே
உள்ளது. ஆயர்மார்களுடனும் நல்ல உறவு உள்ளது.

தமிழ் மக்களினுடைய விடுதலைப் போராட்ட வரலாற்றில்
தனிநாயகம் அடிகளில் தொடங்கி அருட் தந்தை மேரிபஸ்திரியன்,
அருட்தந்தை ஜேம்ஸ்பத்திநாதர், அருட்தந்தை கருணாரத்தினம், அருட்தந்தை
ஜோசேப் பிரான்சீஸ், அருட்தந்தை சரத்ஜீவன், அருட்தந்தை
சந்திரபெர்ணாண்டோ, அருட்தந்தை செல்வராசா, அருட்தந்தை
ஜிம் பிறவுண். அருட் தந்தை இராயப்பு ஜோசேப் வரை பலர்
பங்காற்றியிருக்கின்றனர்.

தனிநாயகம் அடிகள் தமிழ் மொழி வளர்ச்சிக்கும் தமிழ்த்தேசிய
கருத்து நிலை வளர்ச்சிக்கும் செய்த பங்களிப்பு யாவரும் அறிந்ததே!
1974 ம் ஆண்டு தமிழாராய்ச்சி மாநாடு யாழ்ப்பாணத்தில்
நடைபெறுவதற்கும் அவரே காரணகர்த்தாவாக விளங்கினார்.
தமிழ்த்தேசியத்துக்கான கோட்பாட்டுருவாக்கத்தில் அவரது பங்கு
அளப்பரியது.

அருட்தந்தை சிங்கராஜர் ஆயுதப்போராட்ட ஆரம்பகாலத்தில்
தமிழ்த்தேசிய அரசியல் நியாயப்பாடுகளை உலகெங்கும் முன்வைக்கும்
சிவில் குரலாக விளங்கியவர். ஆயுதப் போராளிகளின் பாதுகாப்பு
அரணாகவும் விளங்கினார். ஆயுதப் போராட்ட ஆரம்ப காலங்களில்
படையினரின் கெடுபிடிகள் அதிகம். மறைவிடங்களைத் தேடுவதே அதிகமாக
இருந்த காலம் அது. இந்நெருக்கடி காலங்களில் போராளிகளுக்கு அரணாக
விளங்கினார் என்ற காரணத்திற்காகவே கைது செய்யப்பட்டு சிறையில்
அடைக்கப்பட்டார். 1983 ம் ஆண்டு வெலிக்கடை படுகொலை இடம் பெற்றபோது
வெலிக்கடையில் இருந்தவர்களில் அவரும் ஒருவர். ஜெயகுலராஜா என்ற
இன்னோர் கத்தோலிக்கர் அல்லாத கிறீஸ்தவ மதகுருவும் சிங்கராஜருடன்
சிறைவாசம் அனுபவித்தார். அன்றையகாலத்தில் மிகப்பெரிய
சிவில்குரல் அருட்தந்தை சிங்கராஜருடையதாகத்தான் இருந்தது.

அருட்தந்தை மேரிபஸ்தியன் வங்காலை கத்தோலிக்க தேவாலையத்தில்
வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார். அருட்தந்தை ஜேம்ஸ்பத்திநாதர் ஒரு
நடைமுறைச் செயற்பாட்டாளன. மனித முன்னேற்ற நடுநிலையம் ஊடாகஅவர்
செய்த பணிகள் அளப்பரியன. 1977ம் ஆண்டு இன அழிப்பில்
அகதிகளான தமிழர்களை வன்னியில் குடியேற்றி வாழ்வாதாரங்களை
உருவாக்குவதில் அதிகளவு பங்களிப்பைச் செய்தார்.
கிளிபாதர் என அழைக்கப்படுகின்ற அருட்தந்தை கருணாரத்தினம்
“வடக்கு-கிழக்கு மனித உரிமைகள் அமையம்” என்ற அமைப்பை உருவாக்கி
செயற்பட்டார். தமிழ் மக்கள் எதிர்நோக்கும் மனித உரிமை மீறல்களை
உலகறியச் செய்தார். இவரது செயற்பாட்டின் தாக்கம் காரணமாக படையினரின் கிளைமோர் குண்டுவெடிப்பின் மூலம் கொல்லப்பட்டார்.

அருட்தந்தை யோசேப் பிரான்சிஸ் சென்பற்றிக்ஸ் கல்லூரியின்
அதிபராக இருந்தவர். இடப்பெயர்வுக்கு பின்னர்
தமிழீழவிடுதலைப்புலிகளின் கல்விக்கழகத்தில் இணைந்து
கல்விப்பணியாற்றியவர். இறுதி யுத்தத்தின் பின்னர் சரணடைந்த
போராளிகளுக்கு பாதுகாப்பாக அவர்களுடன் பயணித்தவர் போராளிகளுடன்
சேர்ந்து காணாமல் போயிருந்தார்.

அருட்தந்தை சரத்ஜீவன் அகதிகள் புனர்வாழ்வுக் கழகத்துடன் இணைந்து
செயற்பட்டவர். அகதிகளாக வந்தவர்களை குடியேற்றும் பணிகளில்
ஈடுபட்டவர். இறுதி நேர யுத்தத்தின் பின்னர் அகதி முகாம் நோக்கிச்
சென்ற போது மாரடைப்பினால் மரணமாகியிருந்தார்.
அருட் தந்தை சந்திரா பெர்ணாண்டோ மட்டக்களப்பு பிரஜைகள்
குழுத்தலைவராக செயற்பட்டவர். இந்திய இராணுவம் இருந்த வேளை
துணைப்படைகளினால் கொல்லப்பட்டார்.

அருட்தந்தை செல்வராசா இவரும்
மட்டக்களப்பைச் சேர்ந்தவர்.  மனித உரிமைச் செயற்பாடுகளில் ஈடுபட்டு
வந்தவர். போர்க்காலத்தில் காணாமல் போயிருந்தார்.
அருட்தந்தை ஜீன் பிறவுண் இவர் வெள்ளைக்கார மதகுரு மனித உரிமைச்
செயற்பாட்டாளா.  அல்லைப்பிட்டியில் வைத்து படையினரால்
சுட்டுக்கொல்லப்பட்டார்.
மறைந்த மன்னார் ஆயர் இராயப்புயோசேப் ஆண்டகை
போர்க்காலத்தில் குரலற்றவர்களின் கூட்டுக்குரலாக தொழிற்பட்டவர்.
தமிழ்த் தேசிய அரசியலில் மரணிக்கும்வரை உறுதியாக நின்றவர்.
தமிழ் சிவில் சமூகத்தின் தலைவராக பணியாற்றி தமிழ்த்தேசிய
அரசியலை மக்கள் மத்தியில் கொண்டு சென்றவர். இன அழிப்பிற்கு
சர்வதேச விசாரணை வேண்டும் என்று உலகம் எங்கும் அடித்துக் கூறியவர்.
தமிழ்த் தேசிய சபையை உருவாக்குவதற்கு முன்னின்று உழைத்தவர். கத்தோலிக்க மதத் தலைவர்களது இப் பாரிய பங்களிப்பிற்கு மதிப்புக் கொடுக்க தமிழ் மக்கள் ஒருபோதும் தயங்கக் கூடாது.

இந்து மதத் தலைவர்களின் பங்களிப்பு போராட்டத்தைப் பொறுத்தவரை
பெரிதாக இருக்கவில்லை. தற்போதுதான் வேலன் சுவாமிகள் தென்கயிலை
ஆதினம் போன்றவர்கள் முன்னிலைக்கு வருகின்றனர். இந்நிலையில்
கத்தோலிக்க அருட்தந்தைமார்களை நோகடிக்கும் வகையில் நடந்துகொள்வது
தமிழத் தேசிய அரசியலுக்கு ஆரோக்கியமாக இருக்காது.
தமிழ் மக்கள் மத்தியில் அக முரண்பாடுகள் இருக்கின்றன என்பதை இக்
கட்டுரையாளர் மறுக்கவில்லை. சாதிரூபவ் மதரூபவ் பிரதேசரூபவ் பால் முரண்பாடுகள்
அக முரண்பாடுகளாக தமிழ் மக்கள் மத்தியில் உள்ளன. இந்த அக
முரண்பாடுகள் தமிழ் மக்கள் மத்தியில் இடைவெளிகளை உருவாக்கி எதிரிகள்
நுழைவதற்கு வாய்ப்புக்களைக் கொடுக்கின்றன. தமிழ் மக்களுக்கு சார்பான
சர்வதேச அபிப்பிராயத்திற்கும் தடையாக இருக்கின்றன. தமிழ் மக்கள் ஒரு
தேசமாக ஒன்றிணைவதிலும் தடங்கல்களை ஏற்படுத்துகின்றன. எனவே அக
முரண்பாடுகளை இலாவகமாகக் கையாண்டு அவற்றைக் கடப்பதற்கு தமிழ்த் தேசிய
சக்திகள் முன்வர வேண்டும். இவற்றைத் தவறாகக் கையாண்டு எதிரிகளுக்கு
சந்தர்ப்பங்களைக் கொடுக்கக் கூடாது. இந்த முரண்பாடுகளில் மத
முரண்பாட்டிலும் பால் முரண்பாட்டிலும் சமத்துவத்தைக் கொண்டு வர வேண்டும்.
சாதி முரண்பாட்டையும் பிரதேச முரண்பாட்டையும் இல்லாமல் செய்ய
வேண்டும்.

இந்த முரண்பாடுகளைத் தீர்க்கும் பொறுப்பை அரசியல் தலைமைதான்
முதலில் கையில் எடுக்க வேண்டும். ஆனால் தமிழ் மக்களது அரசியல் தலைமை
தமது வாக்கு வங்கி பலவீனமடைந்துவிடும் என்பதற்காக அக முரண்பாடுகள்
விடயத்தில் நழுவி ஓடவே பார்க்கின்றது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி
அறிக்கை விட்டதைத் தவிர்த்து இவ் விவகாரம் தொடர்பாக ஆயர்களுடன்
நேரடியாகப் பேசியிருக்கலாம்.

தற்போதுகூட காலம் கடந்துவிடவில்லை. தமிழ் அரசியல் தலைமையைச்
சேர்ந்தவர்களும். சிவில் பிரதிநிதிகளும் ஒரு குழுவாக ஆயர்களைச்
சந்தித்து இவ் விவகாரத்தை தீர்க்க முயல்வது தமிழ் அரசியலுக்கு
ஆரோக்கியமானது. அரசியல் தலைமை இதற்கு முன்வராவிட்டால் சிவில்
தலைவர்களாவது இதற்கான முயற்சிகளில் இறங்கலாம். ஏற்கெனவே சில பொது
அமைப்புக்கள் இம் முயற்சியில் இறங்கி இருப்பதாக செய்திகள் வந்துள்ளன.
அது வரவேற்கத் தக்கதே!
தென்னிலங்கையைச் சேர்ந்த சிங்கள ஆயர்கள் பெரும்
தேசியவாதத்தின் ஊது குழல்களாக மாறிய நிலையில் வடக்கு-கிழக்குத் தமிழ்
ஆயர்கள் கூட்டாக செயற்பட முன்வந்தமை தமிழ்த் தேசிய அரசியலைப்
பொறுத்தவரை மிகவும் ஆரோக்கியமான விடயமாகும். அவர்கள்
ஆரோக்கியமான சில பணிகளை ஏற்கெனவே முன்னெடுக்கத்
தொடங்கியுள்ளனர். தமிழ் மக்கள் சந்தித்துவரும் பெரும் தேசிய
ஆக்கிரமிப்பு தொடர்பாக கூட்டாக குரல் கொடுத்து வருவதுடன் போரின்
இறுதிக் காலத்தில் இடம்பெற்றது இனப்படுகொலை என
பிரகடனப்படுத்தியிருக்கின்றனர். சம்பந்தன். சுமந்திரன்
போன்றவர்களே இனப்படுகொலை எனக் கூறுவதற்கு தயங்கிநிற்கும்போது
ஆயர்கள் கூறியமை தமிழ்த் தேசிய அரசியலுக்கு உரமூட்டக் கூடியதே!
தமிழக மீனவர்களது ஆக்கிரமிப்புத் தொடர்பாகவும் கூட்டுக் குரலை
எழுப்பியுள்ளனர். இது தொடர்பாக தமிழக முதலமைச்சருடனும்ரூபவ் தமிழக
அரசியல் தலைவர்களுடனும்ரூபவ் தமிழக ஆயர்கள் மன்றத்துடனும் பேசுவதற்கான
முயற்சிகளைச் செய்து வருகின்றனர். இவையெல்லாம் மிகவும்
ஆரோக்கியமான விடயங்களாகும்.
ஆயர்மார்களது இந்தப் பணிகளுக்கு இடையூறுகள் வராமல்
பார்த்துக்கொள்வதும் எம் அனைவரதும் கடமையாகும்.

இப்போது உடனடியாக மேற்கொள்ள வேண்டிய பணி அகப்
பிரச்சினைகளை எமக்குள்ளே தீர்த்துக் கொள்வதற்கான பொறிமுறைகளை
உருவாக்குவதே!

Recommended For You

About the Author: Editor Elukainews