வலிந்து காணாமலாக்கப்பட்டோர் என்ற பெயரில் செயற்படும்  ஒட்டுக்குழுச் செயற்பாடுகளை அனுமதிக்கவேண்டாம்…../ திருமதி கருணாவதி பத்தமநாதன்

வலிந்து காணாமலாக்கப்பட்டோர் என்ற பெயரில் செயற்படும்  ஒட்டுக்குழுச் செயற்பாடுகளை அனுமதிக்கவேண்டாம் என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் சங்க பணிப்பாளர் திருமதி கருணாவதி பத்தமநாதன் தெரிவித்துள்ளார்.
அவர் இன்று ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள வலசெய்திக் குறிப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது
ஒரு நாடு ஒரு சட்டம்’ என்று சிங்கள பௌத்த இனவாதியான ஞானசார தேரரின் தலைமையில் இயங்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நியமித்துள்ள ஒரே நாடு ஒரே சட்டம் எனும் ஆணைக்குழு கடந்த நவம்பர் 21 ஆம் திகதியன்று யாழ்ப்பாணம் வருகை தந்திருந்தபோது வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கம் என்ற பெயரில் இயங்கும் குழு சார்பாக ஐந்து பெண் உறுப்பினர்கள் அந்தக் கூட்டத்தில் பங்கேற்குமாறு குறித்த சங்கத்தின் இயக்குநர்களான லீலாதேவி ஆனந்தநடராசா உள்ளிட்டோரால் பணிக்கப்பட்டுள்ளார்கள் எனவும்
அந்தக் கூட்டத்தில் பங்கேற்றதன் மூலம் இலங்கை அரசு முன்னெடுக்கும் உள்ளகப் பொறிமுறைகளில் பாதிக்கப்பட்ட தரப்புகளும் பங்கேற்றுள்ளன என்று இலங்கை அரசு கணக்குக் காட்டுவதற்கும்,  சர்வதேச நீதிக்கான முன்னெடுப்புகளை மறுப்பதற்குமான ஆதாரப்புகைப்படங்களாகவும்,  அந்தக்கூட்டத்தில் ஐவரின் பங்கேற்பு ஞானசார தேரரின் ஆணைக்குழுவால் பயன்படுத்தப்படுகிறது எனவும்,
இவ்வாறான கூட்டங்களில் பங்கேற்குமாறு தூண்டிவிட்ட சங்கத்தை வழிநடத்தும் புலம்பெயர் மற்றும் தாயக இயக்குநர்கள் மற்றும் சில அரச ஊடகவியலாளர்கள் இந்தப் பலிக்கடாச் செயற்பாட்டுக்குப் பொறுப்பாகிறார்கள் என்றும்,
ஏற்கனவே, இதுபோன்ற உள்ளகப் பொறிமுறைக்கு நம்பகத்தன்மையைக் கொடுக்க முயலும் சதி நடவடிக்கைகளுக்கு குறித்த சங்கத்தினர் பலிக்கடா ஆக்கப்பட்ட வரலாறு தெரிந்தும், மீண்டும் மீண்டும் அதே நடவடிக்கைகள் தொடருவதால், இந்தப் போக்கின் ஆபத்தைப் பொதுவெளிக்குக் கொண்டுவரவேண்டிய தேவை எமது அமைப்புக்கு ஏற்பட்டிருக்கிறது என்றும்,
அதேவேளை, மனித உரிமை விவகாரங்களுக்கான ஜனாதிபதி ஆலோசனைக் குழுவிற்குக் காலம் தாழ்த்தி நியமிக்கப்பட்ட தமிழ் உறுப்பினரான அரச ஆதரவு முன்னாள் யாழ் நகராதிபதி யோகேஸ்வரி பற்குணராசா, தற்போது இந்த ‘ஒரு நாடு ஒரு சட்டம்’ எனும் ஆணைக்குழுவிலும் காலந்தாழ்த்தி நியமிக்கப்பட்ட தமிழ் உறுப்பினர்களில் ஒருவராக இருக்கிறார். இது சர்வதேச மனித உரிமை விவகாரங்களை உள்ளகப் பொறிமுறைகள் மூலம் நீர்த்துப்போகச் செய்யும் வேலைத் திட்டத்தின் ஓர் அங்கமே இந்த நியமனம் என்பதை எடுத்துக்காட்டுகிறது என்றும்,
எமது உறவுகள் வலிந்து காணாமலாக்கப்பட்டதை இலங்கை அரசு திட்டமிட்டு முன்னெடுத்துவரும் இன அழிப்பு வேலைத் திட்டத்தின் ஓர் அங்கமாகத் தமிழ்த் தேசியச் சக்திகள் அணுகிவரும் சூழலில், அதை மறுதலித்து, கண்துடைப்பு நிதி நிவாரணத்தின் ஊடாகக் கையாள இலங்கை அரசு முயல்கிறது என்றும்,
 இதற்குப் பாதிக்கப்பட்ட தரப்புகளை ஒத்துப்போகச் செய்யும் வகையிலான அரசியலை வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கம் என்ற பெயரில் இயங்கும் இந்த குழு அரசியலைத் தழுவியுள்ளதா என்ற கேள்வி இங்கு எழுந்துள்ளது. இந்த இரட்டை முகவர் செயற்பாடுகளுக்குள் காணாமலாக்கப்பட்ட உறவுகள் பலியாகாது சரியான பாதையில் சரியான அமைப்பின் கீழ் பயணிக்கத் தயாராக வேண்டும் என்று அந்த அமைப்பின் பணிப்பாளர் கருணாவதி பத்தமநாதன் மேலும்  குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews