நீச்சல் தடாகத்தில் நீராடிக் கொண்டிருந்த ஆறு வயது சிறுமி நீரில் மூழ்கி உயிரிழப்பு….!

வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பாசிக்குடா சுற்றுலா விடுதியின் நீச்சல் தடாகத்தில் நீராடிக் கொண்டிருந்த ஆறு வயது சிறுமி நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளதாக கல்குடா பொலிஸார் தெரிவித்தனர்.

கண்டி அலவத்கொட பகுதியைச் சேர்ந்த குடும்பத்தினர் பாசிக்குடாவிலுள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியிருந்த நிலையில் நீச்சல் தடாகத்தில் நீராடிக் கொண்டிருக்கும் போது முஹம்மட் சியாம் பாத்திமா செய்னப் எனும் ஆறு வயதுடைய சிறுமி நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளார்.

வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் திடீர் மரண விசாரணை அதிகாரி வி.ரமேஸ்ஆனந்த் விசாரணைகளை மேற்கொண்டதுடன், நீரில் மூழ்கியதால் மூச்சு திணறல் காரணமாக ஏற்பட்ட விபத்து மரணம் என்று தீர்ப்பு வழங்கி மருத்துவ விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் சடலத்தினை ஒப்படைக்குமாறு தீர்ப்பளித்தார்.

வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் குளிரூட்டி பழுதடைந்த நிலைமை காரணமாக பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்வதற்காக சிறுமியின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக கல்குடா பொலிஸார் தெரிவித்தனர்

Recommended For You

About the Author: Editor Elukainews