வாகனேரி பிரதேச மக்கள் இன்று போராட்டம்….!

கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் வாகனேரி பகுதியில் இயங்கி வந்த உபதபால் நிலையம் 1985ம் ஆண்டு தற்காலிகமாக இடமாற்றப்பட்ட நிலையில் மீண்டும் வாகனேரி பிரதேசத்திற்கு வரவில்லை என்று கோரி வாகனேரி பிரதேச மக்கள் இன்று சனிக்கிழமை சர்வதேச அஞ்சல் தினத்தினை முன்னிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வாகனேரி பகுதியில் இயங்கி வந்த உபதபால் நிலையமானது கடந்த 1985ம் ஆண்டு காலப்பகுதியில் நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலை காரணமாக ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட காவத்தமுனை எனும் இடத்திற்கு இடமாற்றப்பட்டு இன்று வரை இயங்கி வருகின்றது.

தற்போது நாட்டில் நிலைமை சீராகி மக்கள் இப்பிரதேசத்தில் இயல்பு நிலையில் வாழ்ந்து வருகின்ற நிலையில் இடமாற்றம் செய்யப்பட்ட தபால் நிலையத்தினை மீண்டும் வாகனேரி பகுதிக்கு இயங்கச் செய்யுமாறு கோரி வாகனேரி பிரதேச மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது உதவாத அரசியல்வாதிகளிடமும் நாம் இனி ஏமாறமாட்டோம், எம்மை அலட்சியம் செய்யும் அதிகாரிகளிடம் அடிமையாய் தலைகுனியவும் மாட்டோம், தபால் நிலைய சேவையினை பெற கடந்த 30 வருடங்களுக்கு மேலாக மிகவும் சிரமப்படுகின்றோம் எங்களுக்கு நீதி வேண்டும், அதிகாரிகளே பத்து ரூபாய் முத்திரை வாங்க ஆயிரம் ரூபாய் ஆட்டோ செலவு இது நியாயமா?, 250 ரூபாய் முத்திரை பெற 20 கிலோ மீற்றர் நடை பயணம் எமது கஷ்ட நிலை புரியாதா?, வாகனேரி தபால் நிலையில் மீண்டும் இயங்க நடவடிக்கை எடுங்கள், ஏழைகளின் கோரிக்கையை நிராகரிக்காதே, எமது உரிமையை மறுக்காதே என பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாதைகளுடன் கலந்து கொண்டனர்.

குறிப்பாக ஓய்வூதியம் பெறுவோர், அரசாங்க உதவிக் கொடுப்பனவு பெறும் முதியவர்கள், விசேட தேவையுடையோர், மின்சார படட்டியல் கட்டணம் செலுத்துவோர் உட்பட தபால் நிலையத்தின் மூலம் சேவை பெறுவோர் இதனால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே எங்களுக்கு எங்கள் வாகனேரி பகுதியில் இயங்கி வந்த உபதபால் நிலைய சேவையை மீண்டும் எங்கள் பகுதிக்கு மாற்றம் செய்து தருமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

வாகனேரி பகுதியில் இயங்கி வந்த தபால் நிலைய கட்டடம் தற்போது சேதமடைந்த நிலையில் அத்திவாரத்துடன் மரங்கள் நிறைந்த இடமாக காட்சியளிப்பதைக் காணக்கூடியதாக உள்ளதுடன், ஓட்டமாவடி காவத்தமுனையில் தனியார் கட்டடத்தில் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Recommended For You

About the Author: Editor Elukainews