சாந்தனின் உடலை இலங்கைக்கு அனுப்புமாறு உயர்நீதிமன்றம் உத்தரவு…!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி 33 வருடங்கள் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட ஈழத்தமிழர் சாந்தன், பல போராட்டங்களின் பின்னர் தாயகம் திரும்ப இருந்த நிலையில் உடல் நலக்குறைவால் நேற்றையதினம்(28) காலை உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் சாந்தனின் உடலை விமானம் மூலம் இலங்கைக்கு அனுப்புவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள IAS, IPS அதிகாரிகளை நியமித்து தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு தமிழ்நாட்டு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சாந்தன் தொடர்ந்த வழக்கு,  இன்று நீதிமன்றில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது,   சாந்தனை இலங்கைக்கு அனுப்ப அனுமதி வழங்கியது எப்போது என்று மத்திய அரசிடம் நீதிபதிகள் வினா எழுப்பினர்.

மத்திய அரசு தரப்பில், கடந்த ஜனவரி  22ஆம் திகதியே அவருக்கு இலங்கை செல்ல அனுமதி அளிக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது.

“மத்திய அரசு ஜனவரி 22ம் திகதியே அனுமதி அளித்த பிறகும் சாந்தனை ஏன் இலங்கைக்கு அனுப்பவில்லை என்று நீதிபதிகள் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த தமிழக அரசு வழக்கறிஞர், “ஜனவரி 24ம் திகதி முதலே சாந்தன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததால் இலங்கை அனுப்ப முடியவில்லை” என்று விளக்கம் அளித்தார்.

தமிழக அரசின் விளக்கத்துக்கு பின் தீர்ப்பளித்த நீதிபதிகள், “சாந்தனின் உடலை இலங்கை கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்குமாறும் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளை நியமித்து தேவையான நடவடிக்கைளை மேற்கொள்ள வேண்டும்.

இலங்கை தூதரக அனுமதி, இறப்புச் சான்று உள்ளிட்டவற்றை பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்றியது குறித்து மார்ச் 4 இல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews