ஜனாதிபதியின் ஐ.நா. உரை வெற்றுப் பேச்சு! – கஜேந்திரகுமார்

“தற்போதைய அரசு ஆட்சிக்கு வந்தவுடன் பல எண்ணிக்கையிலான புலம்பெயர் தமிழ் அமைப்புகளைத் தடை செய்துவிட்டு, தற்போது உள்ளகப் பொறிமுறையில் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வதற்காக கலந்துரையாட வருமாறு புலம்பெயர் தமிழர்களுக்கு ஐ.நாவில் வைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அழைப்பு விடுப்பது வெற்றுப் பேச்சே.”

-இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை (திருத்தச்)சட்டமூலம் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேலும் பேசுகையில்,

“கடந்த 19 ஆம் திகதி நியூயோர்க் நகரில், ஐ.நா. பொதுச்செயலாளரை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ சந்தித்தபோது, உள்ளகப் பொறிமுறையில் பிரச்சினைகளை தீர்த்துக்கொள்வதற்காக கலந்துரையாட வருமாறு புலம்பெயர் தமிழர்களுக்கு அழைப்பு விடுப்பதாகக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த அரசு ஆட்சிக்கு வந்த சிறிதுகாலத்தில், பல எண்ணிக்கையிலான புலம்பெயர் அமைப்புகளை தடை செய்தது.

இவ்வாறாக தடை செய்துவிட்டு ஐ.நா.வுக்கு செல்லும்போது இவ்வாறு கூறுகின்றனர். இது முழுமையான வெற்றுப் பேச்சே.

இதேவேளை, காணாமல்போனோருக்கு மரணச் சான்றிதழை வழங்குவதற்காக நடவடிக்கையெடுப்பதாக ஜனாதிபதி கூறுகின்றார்.

அப்படியானால் அவர்களுக்கு என்ன நடந்தது என்ற பதிலை ஜனாதிபதி வழங்க வேண்டும்.

அதேபோன்று ஆட்சிக்கு வந்த பின்னர் பல தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ததாக ஜனாதிபதி கூறியுள்ளார். தண்டனைக் காலம் முடிவடையவுள்ளவர்களே அவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இவ்வாறான அறிவித்தல்கள் சர்வதேசத்துக்கு ஜனாதிபதி வழங்கும் வெற்றுப் பேச்சுகளாகவே இருக்கும்” – என்றார்.

Recommended For You

About the Author: Editor Elukainews