கைதிகளை சந்தித்த கஜேந்திரன் எம்பி….!

அநுராதபுரம் சிறைச்சாலையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளைத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் நேரில் சென்று பார்வையிட்டார்.

சிறைச்சாலையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்களின் வேண்டுகோளுக்கிணங்க சிறைச்சாலைக்கு அவர் நேற்று (20) சென்றார்.

கடந்த 12 ஆம் திகதி இராஜாங்க அமைச்சர் லொஹான் ரக்வத்த அநுராதபுரம் சிறைச்சாலைக்குச் சென்று அங்குள்ள தமிழ் அரசியல் கைதிகளை அழைத்து அவர்களுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்த சம்பவத்தை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது ருவிட்டர் பதிவினூடாக வெளிக்கொணர்ந்ததை அடுத்து பல்வேறு தரப்புக்களிலுமிருந்தும் அரசு மீதான அழுத்தத்தைத் தொடர்ந்து சிறைச்சாலை இராஜாங்க அமைச்சர் லொஹான் ரக்வத்த தனது அமைச்சுப் பதவியை இராஜிநாமா செய்திருந்தார்.

இந்நிலையில், குறித்த சம்பவத்தை அடுத்து தங்களுடைய உறவுகளின் பாதுகாப்பு குறித்து அச்சமைடைந்துள்ள அரசியல் கைதிகளின் உறவுகள் அவர்களைச் சென்று பார்வையிடுமாறு கேட்டுக்கொண்டதன் பிரகாரம் இரண்டாவது முறையாகவும் அவர்களைத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் நேற்று சென்று பார்வையிட்டனர்.

இதற்கு முன்னதாகவும் அநுராதபுரம் சிறைச்சாலைக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர், செயலாளர் மற்றும் சட்டத்தரணிகள் ஆகியோர் கடந்த 16ஆம் திகதி சென்று தமிழ் அரசியல் கைதிகளுடன் பேசியிருந்தார்.

இந்நிலையில், சந்திப்பின் பின் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன்,

“குறித்த அச்சுறுத்தல் சம்பவத்தைத் தொடர்ந்து தமிழ் அரசியல் கைதிகள் மிகவும் உளரீதியாகப் பாதிக்கப்பட்டடுள்ளனர். இவ்வாறான சம்பவத்தில் ஈடுபட்ட இராஜாங்க அமைச்சர் பதவி விலகுவது மட்டுமல்லாமல் உரிய விசாரணைகளை மேற்கொண்டு அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

அத்துடன் அரசியல் கைதிகளுடைய வழக்குகள் இழுபறிகளின்றி விசாரணைகளுக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்பதோடு விசாரணைக்காலம் வரை அவர்கள் தமது சொந்த பிரதேசங்களுக்கு அருகாமையிலுள்ள சிறைச்சாலைக்கு மாற்றப்பட வேண்டும்” – என்றார்

Recommended For You

About the Author: Editor Elukainews