வட்டுக்கோட்டையில் செய்தியாளரை தகாத வார்த்தைகளால் திட்டிய தமிழ் பொலிசார்!

இந்தச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையம் முன்பாக இடம்பெற்றது.

வட்டுக்கோட்டை தெற்கு முதலி கோயில் பகுதியில் இரண்டு குழுக்களுக்கு இடையில் நேற்றைய தினம் இரவு மோதல் இடம்பெற்றது. அது தொடர்பில் செய்தி சேகரிப்புக்காக பொலிஸ் நிலையம் சென்ற போதே பொலிஸார் அவ்வாறு நடந்து கொண்டுள்ளனர்.
அது குறித்து தெரியவருவதாவது,
வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் வட்டுத் தெற்கைச் சேர்ந்த ரஜீவன் என்ற பொதுமகனான இளைஞன் எப்போதும் தங்கியிருப்பார்.
அவர் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்களுடன் தொடர்பைப் பேணி வருவது தொடர்பில் யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் பொலிஸ் பேச்சாளரிடம் யாழில் இருந்து இயங்கும் இணைய ஊடகம்  கடந்த வாரம் கேள்வி எழுப்பியிருந்தது.
இந்த நிலையில் இன்று இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் ரஜீவன் என்ற இளைஞனின் வழிநடத்தலில் வட்டுக்கோட்டை பொலிஸார் நடந்துகொள்வதாக குறித்த இணைய ஊடகம் அறிந்து , அதனடிப்படையில் பொலிஸ் நிலையத்துக்கு அவ்வூடகத்தின்  செய்தியாளர் சென்றிருந்தார்.
அங்கு சென்ற  செய்தியாளரை அனுமதிக்க மறுத்த உப பொலிஸ் பரிசோதகர் அலோசியஸ் மற்றும் பொலிஸ் கொஸ்தாபல் மயூரன் இருவரும் தகாத வார்த்தைகளினால் கேள்வி எழுப்பியதுடன் பொலிஸ் நிலையத்துக்குள் வந்து பாருங்கள் என மிரட்டல் விடுத்தனர்.
அவர்கள் இருவரும் மதுபோதையில் இருந்ததை அவதானித்த செய்தியாளர், பொலிஸ் ஊடகப் பேச்சாளருக்கு தொடர்பை ஏற்படுத்தி தகவலைத் தெரிவித்தார்.
இந்த அநாகரிக சம்பவம் தொடர்பில் விசாரிக்க 10 நிமிடங்கள் தமக்கு வழங்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்திருந்தார்.
எனினும் அவர் பின்னர் பதிலளிக்கவில்லை.
முற்றுமுழுதாக ஒரு தரப்பினருக்கு ஆதாரவாக வட்டுக்கோட்டை பொலிஸார் செயற்படுவது  செய்தியாளர் அறிந்திருந்த நிலையில் பொலிஸ் நிலையத்திலிருந்து வெளியேறியிருந்தார்.
யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் விடுப்பில் சென்றுள்ள நிலையில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் விடுப்பில் செல்வுள்ள நிலையில் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இந்த ஊடக அடக்குமுறையை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews