மூன்று பிரதேசங்களில் இரு பெண்கள் உட்பட மூவர் படுகொலை; மூவருக்குக் காயம்

எல்ல, வெலிவேரிய, தொடங்கொட ஆகிய பிரதேசங்களில் இரு பெண்கள் உட்பட மூவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸார்  தெரிவித்தனர்.

எல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உடுவர தோட்டம் மேற்பிரிவு பிரதேசத்தில், இரு குழுவினருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் நால்வர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேபியர் தோட்டத்தைச் சேர்ந்த 28 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கூரிய ஆயுதமொன்றினால் குறித்த நபர் தாக்கப்பட்டுள்ளார் என்று பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதேவேளை, வெலிவேரிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாதுன்கமுவ பிரதேசத்தில், பெண்ணொருவர் கத்தியால் வெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்று வெலிவேரிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேதுன்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த 74 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

பிரேதப் பரிசோதனைக்காக கம்பஹா வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.

இந்தப் படுகொலையுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில், கொலையுண்ட பெண்ணின் பேரனை பொலிஸார் கைதுசெய்துள்ளனனர்.

இதேவேளை, தொடங்கொட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கஜுதுவ பிரதேசத்தில் பெண்ணொருவர் கோடரியால் வெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

கஜுதுவ பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயது பெண்ணே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

பிரேதப் பரிசோதனைக்காக நாகொட வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.

குடும்பத் தகராரே இந்த சம்பவத்துக்குக் காரணம் என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில் பெண்ணின் கணவரை பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews