வீடு உடைத்து தங்கச் சங்கிலி திருட்டு இரண்டு மணித்தியாலத்திற்குள் பருத்தித்துறை பொலிசாரால் கைது நகைகளும் மீட்பு…!

வீடு உடைத்து ஐந்தரைப் பவுண் தங்கச் சங்கிலியை  திருடிய நபர் ஒருவர் இரண்டு மணித்தியாலத்திற்குள்  பருத்தித் துறை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் திருடப்பட்ட தங்க நகையும் மீட்கப்பட்டுள்ளது.
நேற்று புதன்கிழமை (07)  பருத்தித் துறை இரண்டாம் குறுக்குத் தெரு பகுதி சேர்ந்த பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்று தேவை நிமித்தம் காலையில்  வெளியில் சென்றதை சாதகமாக பயன்படுத்தி பட்ட பகல் நேரம் வீடு உடைக்கப்பட்டு அங்கிருந்த பொருட்களை அனைத்தும் சல்லடை போடப்பட்டு 5  1/2 பவுண் நிறையுடைய இரட்டைப்பட்டு தங்கச் சங்கிலி மற்றும் கையடக்கத் தொலைபேசி என்பன திருடிச் செல்லப்பட்டிருந்தது.
 இச்சம்பவம் தொடர்பில் நண்பகல் 12.00 மணியளவில் பருத்திதுறை பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டைத் தொடர்ந்து இரண்டு மணித்தியாலத்துக்குள் மூன்றாம் குறுக்கு தெரு பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன் அவரிடம் இருந்து திருடப்பட்ட தங்கச் சங்கிலியும் மீட்கப்பட்டுள்ளதாக பருத்தித்துறை பொலிசார்  தெரிவித்தனர்.
திருடப்பட்ட கையடக்கத் தொலைபேசியை திருடன் உடனேயே விற்பனை செய்துள்ளார். இதன் மூலமாக பருத்தித்துறை பொலிஸ் குற்றத்தடுப்புப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து விலைந்து செயற்பட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் சந்தேகநபரை இரண்டு மணித்தியாலங்களுக்குள் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் திருடப்பட்ட தங்கநகையை மண்ணில் புதைத்து வைத்திருந்த நிலையில், பருத்தித்துறை பொலிஸ் குற்றத்தடுப்புப் பிரிவினரால் மீட்க்கப்பட்டுள்ளது.
சந்தேகநபரையும், மீட்கப்பட்ட தங்க நகையினையும் பருத்தித்துறை பொலிஸார் இன்று பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews