இனிவரும் காலங்களில் பொலிசார் தாக்கினால் திருப்பி தாக்குவோம் – வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் த.தே கூட்டமைப்பு தொடர்பிலும் கண்டனம்

இனிவரும் காலங்களில் பொலிசார் தாக்கினால் திருப்பி தாக்குவோம் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தெரிவித்துள்ளதுடன், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தொடர்பிலும் கண்டனம் வெளியிட்டுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிட் அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர். இதன் போது மேலும் தெரிவிக்கையில்,

வவுனியாவிற்கு ஜனாதிபதி விஜயம் மேற்கொண்ட பொழுது நாங்கள் நீதி கேட்டு அவ்விடத்தில் கூடினோம். இதன்போது பொலிசாரும் பாதுகாப்பு தரப்பினரும் கூடி எமது போராட்டத்தை தடுத்ததுடன், எம்மை தாக்கினர்.

நாம் தாக்குதலிற்குள்ளாகி இன்றும் சிகிச்சை பெற்று வருகிறோம். அன்றைய தினம் அவர்கள் நுள்ளியும் துன்புறுத்தி உள்ளனர். முட்கம்பிக்குள் அடைக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டோம்.

பொலிசார் இவ்வாறு நடந்துகொண்டமையால் எமது நீதிக்கான போராட்டம் நெருக்கடிக்குள்ளானது. நம்மை நாகரீகமற்ற வார்த்தைகளால் பேசினர். பணத்துக்காகவும், பிரபல்யத்துக்காகவும் அலைவதாக பொலிசார் பேசினர். நாங்கள் அவை எவற்றக்கும் அலையவில்லை.

எமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை கண்டறியும் நீதிக்காகவே போராடுகிறோம். இலங்கை அரசின் மீது எமக்கு நம்பிக்கை இல்லை. சர்வதேசம் எமக்கு நீதியை பெற்றுத்தர வேண்டும் என்றே போராடுகிறோம்.

தொடர்ச்சியாக எம்மை தாக்கும் பொலிசாரிற்கு ஒரு விடயத்தை சொல்லி வைக்கின்றோம். நீங்கள் எம்மை தாக்கினால், நாங்களும் திரும்ப தாக்க வேண்டிய நிலை ஏற்படும். நாங்கள் உங்கள் மீது கைவைத்தால் எம்மை கைது செய்வீர்கள் என்பதும் எமக்கு தெரியும்.

தொடர்ச்சியாக எம்மை தாக்குகின்றீர்கள். ஒரு கட்டத்தில் நாங்கள் பொறுமை இழந்து திரும்ப தாக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவோம் என்பதை அனைவரும் விளங்க்கொள்ள வேண்டும்.

அன்றைய சம்பவம் இடம்பெற்ற பொழுது தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரும் அந்த நிகழ்வில் இருந்தனர். செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்ட வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களும், MA சுமந்திரன் பலர் இருந்தனர்.

ஆனால், இந்த சம்பவம் தொடர்பில் கண்டுகொள்ளவில்லை என்பதுடன், கண்டிக்கவும் இல்லை. இவ்வாறானவர்களை நாங்கள் தெரிவு செய்து பாராளுமன்றத்துக்கு அனுப்பியமை தொடர்பில் வேதனை அடைகிறோம். எதிர்வரும் காலங்களில் மக்கள் விழிப்புடன் நடந்துகொள்ள வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews