கரும்புள்ளியான் குடி நீர் திட்டம் தொடர்பில் அறிக்கை சமர்பிக்குமாறு தனது செயலாளருக்கு ஜனாதிபதி பணிப்பு.

முல்லைத்தீவு மாந்தை கிழக்கு கரும்புள்ளியான் குடிநீர் திட்டத்திற்கு உலக
வங்கியினால் ஒதுக்கப்பட்ட ஆயிரம் மில்லியன் ரூபா நிதி திருப்பபட்ட விடயம்
தொடர்பில் தனக்கு அறிக்கை சமர்பிக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர்
ஈ.எம்.எஸ்.பீ. ஏக்கநாயக்கவுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாக வன்னி
மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்

கரும்புள்ளியான் குடிநீர் திட்டத்திற்கு உலக வங்கியினால் ஒதுக்கப்பட்ட
நிதி அதிகாரிகளால் தென்பகுதிக்கு மாற்றப்பட்டு கரும்புள்ளியான் குடிநீர்
திட்டம் கைவிடப்பட்டுள்ளதாக பொது மக்களால் எனது கவனத்திற் கொண்டு
வரப்பட்டது. எனவே இது தொடர்பில் வரவு செலவு திட்டத்திற்கு முன்
இடம்பெற்ற நிதி ஆலோசனை குழு கூட்டத்தில் 15.11.2022 அன்று  நான்
அமைச்சர்கள் மற்றும்  உயரதிகாரிகளின் கவனத்திற் கொண்டு சென்றேன். இதனை தொடர்ந்து 16.11.2022 அன்று  பாராளுமன்றத்தில் ஒத்தி வைப்பு வேளை பிரேரணை கொண்டு சென்றேன். இதில் என்னோடு இணைந்து பாராளுமன்ற உறுப்பினர்களான சிறிதரன் மற்றும் றிசாட் பதியூதீன் ஆகியோர் விடயத்தை பேசியிருந்தார்கள்

இதனை தொடர்ந்து கரும்புள்ளியான் விடயம் பற்றி பேசுவதற்கு தேசிய நீர்
வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் தலைவர் உள்ளிட்ட உயரதிகாரிகள்
கலந்துகொண்ட கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குறித்த கூட்டத்தில்
அதிகாரிகள் கருத்து தெரிவித்த போது கரும்புள்ளியான் குடிநீர்
திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 15 மில்லியன் ரூபாவை திறைசேரிக்கு
மாற்றப்பட்டதாகவும், மற்றும் குறித்த திட்டத்தை நடைமுறைப்படுத்த காலம்
போதாது என்பதோடு கொவிட்19 காரணமாகவும்  திட்டத்தை நடைமுறைப்படுத்த
முடியவில்லை எனத் தெரிவித்தனர்.

நாட்டில் கரும்புள்ளியான் கிராமத்தில் மட்டும்தானா கொவிட் தாக்கம்
ஏற்பட்டது எனக் கேள்வி எழுப்பிய நான் ! எனது கடுமையான ஆட்சேபனையை
தெரிவித்துவிட்டு கூட்டத்திலிருந்து இடைநடுவில் வெளியேறினேன். இதனை
தொடர்ந்து ஜனாதிபதி ரனில் விக்கிரமசிங்க வவுனியா வந்த போது அவரது
கவனதிற்கு  கொண்டு சென்ற போதே அவர் தனது செயலாளருக்கு விடயத்தை ஆராய்ந்து அறிக்கை சமர்பிக்குமாறு பணிப்புரை விடுத்துள்ளார் எனத் தெரிவித்தார் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன்

Recommended For You

About the Author: Editor Elukainews