ஜெனிவா விவகாரம் தொடர்பில் ரணிலின் நிலைப்பாடு

“அனைத்து நாடுகளையும் அரவணைத்துப் பயணிக்கவே விரும்புகின்றோம் எனவும் ஜெனிவா விவகாரத்தில் இதுவே எமது நிலைப்பாடு என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் சபையின் அமர்வில் இலங்கைக்கு எதிராகப் பிரேரணை நிறைவேற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரிட்டன் தலைமையில் புதிய பிரேரணை முன்வைக்கப்படவுள்ளது எனவே இது தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்று ஜனாதிபதியிடம் வினவியபோதே மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

“இலங்கை இறையாண்மை கொண்ட நாடு. எந்த நாடுகளுடனும் நாம் பகைக்கவும் விரும்பவில்லை. ஒரு நாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து நாம் நடக்கவும் விரும்பவில்லை. அனைத்து நாடுகளையும் அரவணைத்துப் பயணிக்கவே விரும்புகின்றோம். ஜெனிவா விவகாரத்தில் இதுவே எமது நிலைப்பாடு.

இலங்கைக்கு எதிராகப் புதிய பிரேரணை முன்வைக்கப்படவுள்ளமை தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் அங்கம் வகிக்கும் எந்த நாடும் இன்னமும் எமக்கு தெரியப்படுத்தவில்லை எனவும் இலங்கை மீது என்ன பிரேரணை வருகின்றது என்பதை அறிந்த பின்னர்தான் அது தொடர்பாக எமது நிலைப்பாட்டைத் தெரிவிக்க முடியும்” எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், “நாட்டின் தற்போதைய நிலைவரம், அதிலிருந்து மீண்டெழ நாம் எதிர்பார்க்கும் சர்வதேச ஒத்துழைப்புக்கள் – உதவிகள் தொடர்பில் மற்றும் இலங்கை மீதான கடந்த கால தீர்மானங்கள் தொடர்பில் ஜெனிவா அமர்வில் இலங்கை நிலைவரம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும்போது வெளிவிவகார அமைச்சர் அது தொடர்பில் தெரிவிப்பார்” எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Recommended For You

About the Author: admin