காட்டாட்சியை வீழ்த்த சஜித் – சம்பிக்க கரம் கோர்க்க வேண்டும்! – மனோ கோரிக்கை

“நாம் முன்னோக்கிச் சென்று, ராஜபக்சக்களின் இந்தக் காட்டாட்சியை வீழ்த்த வேண்டும் என்றால் சஜித் பிரேமதாஸவும், சம்பிக்க ரணவக்கவும் முரண்பாடுகளை மறந்து கரம் கோர்க்க வேண்டும்.”

-இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் அமைந்துள்ள ஊழல் எதிர்ப்பு குழு அங்கத்தவர்களை விசாரிக்கும் விசேட ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் இன்று சாட்சியம் அளித்து விட்டு, ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் கூறியதாவது:-

“வழமையாக அரசுகள் பதவிக்கு வரும். பின்னர் அது விழும். அதையடுத்துப் புதிய அரசு பதவிக்கு வந்து அதுவும் விழும். பின்னர் இன்னொரு அரசு ஆட்சிக்கு வரும். இதுவே வழமையாகியுள்ளது.

ஆனால், இன்று அரசு விழுவதற்கு முன் நாடு விழுந்து விட்டது. அண்டை நாடுகளிடம் கெஞ்சிக் கூத்தாடி கைமாற்று வாங்கி, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை, பெருங்கடன்களின் மீள் செலுத்தும் தொகையைச் செலுத்திக் காலத்தை ஓட்டும் நிலைமைக்கு நாடு விழுந்து விட்டது.

ஆகவே, புதிய அரசொன்றை கட்டியெழுப்ப வேண்டும் என்பதை விட, புதிய நாடொன்றை உருவாக்க வேண்டும் என்றுதான் கூறவேண்டும்.

ஆகவே, இன்று இந்த நாட்டின் அரச எதிர்ப்பு சக்திகள் அனைத்தும் கரம் கோர்க்க வேண்டும். அதற்கு முன் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸவும், 43ஆம் படையணியின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவும் கரம் கோர்க்க வேண்டும்” – என்றார்.

Recommended For You

About the Author: Editor Elukainews