ஈழ தமிழ் இளையோர்கள் எவருக்கும் சளைத்தவர்கள் அல்லர்! – வேலன் சுவாமிகள் தெரிவிப்பு

எந்த துறையை எடுத்து கொண்டாலும் ஈழ தமிழ் இளையோர்கள் எவருக்கும் சளைத்தவர்களே அல்லர் என யாழ்ப்பாணம் சிவகுரு ஆதீன முதல்வர் தவத்திரு வேலன் சுவாமிகள் தெரிவித்தார்.

அரியாலை வெட்டுக்குளம் ஸ்ரீ புவனேஸ்வரி ஆலயத்தின் கும்பாபிசேக வைபவமும், அதனோடு இணைந்த விழாக்களும் கடந்த ஒரு வார காலமாக இடம்பெற்று வருகின்றன.

புலம்பெயர் தேசங்களில் வாழ்கின்ற அம்பிகை அடியார்கள் இத்தி மரத்தாள் புத்திரர்கள் திருப்பணி சபை என்கிற பெயரில் சுவிற்சலாந்தை தலைமையாக கொண்டு செயற்பட்டு இவ்வேலை திட்டங்களை முன்னெடுத்த வண்ணம் உள்ளனர்.

இவர்களின் வழிகாட்டல், அறிவூட்டல், நிதி பங்களிப்பு ஆகியவற்றில் இத்திமரத்தாயே என்கிற இசை இறுவெட்டு அரியாலை வெட்டுக்குளம் மண்ணின் மைந்தர்களின் பாடல் வரிகளில் தென்னிந்திய இசை கலைஞர்களின் இசையில் வெளிவந்துள்ளது.

மண்ணின் மைந்தர்களான எம்.வி.கே. குமணா, கா.கனகராசா, த.தர்மேந்திரா, எஸ்.என். விஜிகாந்தன், கி.விதுஷிகா ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர்.

தென்னிந்தியாவை சேர்ந்த ஏ.சி. தினகரன் இசை அமைக்க தென்னிந்திய பாடகர்களான மதுபாலகிருஷ்ணன், சுர்முகி, சத்தியபிரகாஷ், மாலதி, வேல்முருகன், அனுராதா ஸ்ரீ ராம், மகாலிங்கம், உன்னிக்கிருஷ்ணன், வாணி ஜெயராம், சத்தியபிரகாஷ் ஆகியோர் பாடியுள்ளார்கள்.

இசை இறுவெட்டு வெளியீட்டு விழா இத்தி மரத்தாள் புத்திரர்கள் திருப்பணி சபையின் தாயக இணைப்பாளர் எம்.வி.கே.குமணா தலைமையில் இடம்பெற்றது.

இதில் மதுரகவி காரை எம்.பி. அருளானந்தன் கலந்து கொண்டு இறுவெட்டு மீதான ஆய்வுரையை மேற்கொண்டார்.

இதில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட வேலன் சுவாமிகள் தெரிவிக்கையில்,

கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது ஆன்றோர் வாக்கு. வாழ்க்கையில் இறைவனை இணைத்து கொள்கின்றபோதுதான் ஒவ்வொருவரினதும் வாழ்க்கை முழுமை பெறுகின்றது. எமது வதிவிடம் உள்ள ஊர்களில் ஆலயங்கள் இருத்தல் அவசியம்.

அங்கு நாம் வழிபாடுகள் மேற்கொள்வது இன்றியமையாதது. தெய்வத்தின் மீது முழு நம்பிக்கை வைத்து வழிபடுகிறபோது துன்பங்கள் நீங்குகின்றன என்பது எமது பெரியோர் எமக்கு காட்டி தந்த வாழ்க்கை முறை ஆகும். கும்பாபிசேக வைபவங்கள் காலத்தின் தேவை ஆகும்.

ஆலயங்களில் எழுந்தருளுகின்ற இறைவனை நம் மனங்களிலும் எழுந்தருள செய்வதற்கு இசை பேருதவியாக உள்ளது. அரியாலை மண் கலை பாரியம் நிறைந்தது.

இம்மண்ணின் மைந்தர்கள் மகத்தான கலைஞர்கள். அந்த வகையில் இந்த இசை இறுவெட்டு பெருமகிழ்ச்சி தருகின்றது.

ஒரு இனத்தை அழிக்க வேண்டும் என்றால் அந்த இனத்தின் கலை, கலாசார, பாரம்பரிய விழுமியங்களை அழித்தல் வேண்டும்.

அதுதான் வரலாற்றில் இடம்பெற்ற வண்ணம் உள்ளது. தமிழனின் கலை, கலாசாரம், பண்பாடு ஆகியன வாழ்கின்றபோதுதான் தமிழன் தமிழனாக வாழ முடியும்.

நான் இந்த இடத்தில் மிக முக்கியமான விடயம் ஒன்றையும் சொல்ல வேண்டி உள்ளது. தென்னிந்தியாவை உயர்வாக எண்ணுகின்ற போக்கு நம்மவர்களுக்கு இருக்கின்றது.

ஆனால், எந்த துறையை எடுத்து கொண்டாலும் அந்த துறையில் நமது இளையோர்களுக்கு ஏனையோரை விடவும் அளப்பரிய ஆற்றல் இருக்கின்றது.

இதற்கு இம்மண்ணின் மைந்தர்களால் இறுவெட்டுக்காக எழுதப்பட்ட பாடல்கள் அற்புதமான சான்றுகளாக உள்ளன.

மண், உரிமை, இனம் ஆகியவற்றுக்காக அளப்பரிய தியாகங்களை செய்தவர்கள் உலக வரலாற்றிலேயே நமது இளையோர்கள்தான் என்பது எனது ஆணித்தரமான கருத்து நிலைப்பாடாகும்.

எமது இளையோர்களுக்கு சரியான வழிகாட்டலும், அன்பும் வழங்கப்பட வேண்டும். சிறு வயதில் இருந்தே அறம், ஒழுக்கம் ஆகியன போதிக்கப்பட வேண்டும்.

ஆலயங்களில் வெள்ளிக்கிழமைகளில் கூட்டு பிரார்த்தனையும், ஞாயிற்றுக்கிழமைகளில் அற நெறி வகுப்பு, தியானம், யோகாசனம் ஆகியனவும் கற்பித்து கொடுக்கப்பட வேண்டும்.

பிள்ளைகளுக்கு படிப்புகளை திணிப்பதை விடுத்து விளையாட்டு, கலை உள்ளிட்ட இதர செயற்பாடுகளிலும் ஆர்வத்தை ஏற்படுத்துதல் வேண்டும். அப்போதுதான் ஆளுமை மிக்க தலைவர்களை எம் மத்தியில் எதிர்காலத்தில் உருவாக்க முடியும்.- என்றார்.

Recommended For You

About the Author: Editor Elukainews