நாளை முழு ஊரடங்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல தடை:1 கோடி வர்த்தகம் பாதிப்பு: 1500க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நங்கூரமிட்டு கரையில் நிறுத்தம்:

ராமேஸ்வரம் ஜன 08,

நாளை முழு ஊரடங்கு அமல்படுத்தபடுவதால் ராமேஸ்வரம், மண்டபம் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் சுமார் 1500க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லாமல் கரையில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் நீண்ட கடற்கரையை கொண்ட மாவட்டம் என்பதால் இங்கு வசிக்கக்கூடிய மக்கள் பெரும்பாலானோர் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் பகுதிகளில் மட்டும் சுமார் 1500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் வடக்கு மீன் பிடி துறைமுகங்களில் இருந்து சனிக்கிழமை காலை மீன்பிடிக்க கடலுக்குள் செல்லும் மீனவர்கள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கரைக்கு திரும்புவது வழக்கம். இந்நிலையில் தமிழக அரசு கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தியுள்ளதால் மீனவர்கள் பிடித்து வரும் மீன்களை கொள்முதல் செய்ய வெளிமாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் வியாபாரிகள் ஞாயிற்றுக்கிழமை வரமாட்டார்கள்.

எனவே மீனவர்கள் பிடித்து வரும் மீன்களை சந்தைப்படுத்த முடியாமல் மீன்கள் கெட்டுபோகும் சூழ்நிலை ஏற்படும் இதனை கருத்தில் கொண்டு மீனவர்களுக்கு இன்று அரசால் வழங்கப்படும் மீன்பிடி அனுமதி சீட்டு மீன்; வளத்துறை அதிகாரிகளால் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல தடை விதிக்கபட்டுள்ளதால் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், மண்டபம் பகுதிகளில்; உள்ள சுமார் 1500க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லாமல் கரையில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் நேரடியாகவும் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மீன்பிடி சார்பு தொழிலாளர்கள் மறைமுகமாகவும் வேலை இழந்துள்ளனர்.

அரசுக்கு அதிக அந்நிய செலாவணியை ஈட்டுதரக்கூடிய மீன்பிடித்தொழில் நடைபெறாததால்; சுமார் ஒரு கோடி வரை வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

மீனவர்கள் மீன் பிடி செல்லும் நேரங்களில் தமிழக அரசு தடை விதிப்பதால் மீனவர்களின் வாழ்வாதமாரம் கடுமையாக பாதிக்கப்படுகிறது எனவே மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாத நாட்களில்; மீனவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என மீனவர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கபட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews