தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை பல தரப்பாக சந்திக்கும் பிரித்தானிய உயர்ஸ்தானிகர்.

இலங்கைக்காக பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஸாரா ஹல்ட்டன் அம்மையார் உடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இன்றைய தினம் சந்திப்பு ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.

கொழும்பில் அமைந்துள்ள உயர்ஸ்தானிகரின் உத்தியோகப்பூர்வ வாசஸ்தலத்தில் குறித்த சந்திப்பு இன்று காலை எட்டரை மணிக்கு இடம்பெற்றுள்ளது .

இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் செல்வம் அடைக்கலநாதன், வினோ நோகராதலிங்கம், ரெலோவின் ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன் மற்றும் சட்டத்தரணி தயாபரன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

வடக்கு, கிழக்குப் பகுதிகளில் மக்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் ஐ.நா பிரேரணை சம்பந்தமாகவும் முக்கியமாகக் கலந்துரையாடப்பட்டன.

பிரித்தானியாவின் தலைமையிலே ஐநா மனித உரிமைப் பேரவையில் கொண்டுவரப்பட்ட 46/1 பிரேரணையின் முக்கியத்துவம் அதில் உள்ளடக்கப்பட்ட விடயங்கள், அவற்றில் காணப்படுகின்ற முன்னேற்றங்கள், அதன் அடிப்படையில் செயற்படுத்தப்பட வேண்டிய விடயங்கள் என்பனவற்றில் கவனம் செலுத்தப்பட்டது.

கால வரையறையோடு கொண்டுவரப்பட்ட இந்த பிரேரணையில் பிரேரிக்கப்பட்ட விடயங்களை நிறைவேற்ற 18 மாதங்களே உள்ளன.

அதில் அரசாங்கம் நிறைவேற்ற வேண்டிய விடயங்கள் ஒருபுறம் இருக்கத் தமிழ் தரப்பினரால் நிறைவேற்றப்பட வேண்டிய விடயங்களிலும் அக்கறை செலுத்துவது பற்றி கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.

இதன் பிரகாரம் தமிழ் மக்கள் முகம் கொடுத்திருக்க முக்கிய பிரச்சினையான காணி அபகரிப்பு இன குடிப்பரம்பல் சிதைப்பு என்பவற்றைத் தற்காலிகமாகத் தடுத்து நிறுத்தும் முயற்சியாக ஐநா பிரேரணையில் பரிந்துரைக்கப்பட்ட 13வது திருத்தச் சட்டத்தை முற்று முழுதாக நிறைவேற்றுவது, மாகாணசபை தேர்தல்கள் சம்பந்தமாகவும் கலந்துரையாடப்பட்டது.

தமிழர்கள் ஒருமித்த நிலைப்பாட்டில் சம்பந்தப்பட்ட தரப்புகளை வலியுறுத்துவது, அதன் முக்கியத்துவம், அதற்காக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள், அவற்றின் முன்னேற்றம், ஆதரவு தரப்புக்கள், எதிர்கால நகர்வுகள் என்பன பற்றியும் விளக்கம் அளிக்கப்பட்டது.

நாடு எதிர்கொண்டிருக்கும் பொருளாதாரச் சிக்கல்கள், தமிழ் மக்களும் நாட்டு மக்களும் முகம் கொடுக்கும் அவலங்கள், கோவிட் நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகளின் தற்போதைய நிலை எனப் பிற விடயங்களும் கலந்துரையாடப்பட்டன.

கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது. இதேவேளை கடந்த வாரம் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹில்டனை கொழும்பில் வைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ சுமந்திரன் மற்றும் சாணக்கியன் ஆகியோர் சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.

இதன்போது, வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் எதிர் நோக்கும் பல பிரச்சனைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை பல தரப்பாக பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சந்தித்து கலந்துரையாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Gallery

Recommended For You

About the Author: Editor Elukainews