முற்றுகையிடப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர நிலையம் : சீனாவிலிருந்து ஸ்டிக்கர்கள் இறக்குமதி.

கொழும்பு – கொம்பனி வீதியில் ஐந்து நிமிடங்களுக்குள் தரகர்கள் சாரதி அனுமதிப் பத்திரங்களை வழங்கும் நிலையத்தைக் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் முற்றுகையிட்டுள்ளனர்.

குற்றப் புலனாய்வுப் பிரிவின் கணினி குற்றப்பிரிவு அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு மோசடியில் ஈடுபட்ட இரண்டு சந்தேக நபர்களுடன், 27 போலி சாரதி அனுமதிப் பத்திரங்களும் அவற்றை அச்சிடப் பயன்படுத்திய உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

அத்துடன் காலாவதியான 41 சாரதி அனுமதிப்பத்திரங்களும் இங்கு மறு பதிப்பு செய்யப்பட்டுள்ளன.

மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்த முடியாதவர்களுக்கும் வாகனம் ஓட்ட தெரியாதவர்களுக்கும் கூட ரூ.12 ஆயிரத்திற்குப் போலி சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டு வந்துள்ளது.

மோசடிக்காரர்கள் போலி சாரதி அனுமதிப்பத்திரத்தில் சிப் அச்சிடுவதற்கான பிரத்தியேக ஸ்டிக்கர்கள் கூட சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews