ரவிராஜை கெளரவப்படுத்திய புலிகள்: நிகழ்வை தவிர்த்த சாவகச்சேரி தமிழ் அரசு கட்சியினர்!

படுகொலை செய்யப்பட்ட கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் நடராஜா ரவிராஜின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று இடம்பெற்றது.

சாவகச்சேரியில் ரவிராஜின் உருவச் சிலை அமைந்துள்ள நினைவு சதுக்கத்தில் முன்னாள் நகர சபை உறுப்பினர் ஞா.கிஷோர் தலைமையில் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றன.

 

இந்நிகழ்வில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, ரவிராஜின் மனைவி சசிகலா ரவிராஜ் மற்றும் அவரது மகள் பிரவீனா ரவிராஜ் ஆகியோர் கலந்துகொண்டு மலர்மாலை அணிவித்து சுடரேற்றி அஞ்சலி நிகழ்வை ஆரம்பித்து வைத்தனர்.

இந் நினைவேந்தல் நிகழ்வில் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

இதேவேளை, ரவிராஜை மாமனிதரென விடுதலைப் புலிகள் கெளரவப்படுத்தினார்கள் என்பதால், அவரது அஞ்சலி நிகழ்வில் கலந்து கொள்ளாமலிருப்பதென இலங்கை தமிழ் அரசு கட்சியின் சாவகச்சேரி தொகுதி கிளையினர் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

 

இன்று நடந்த அஞ்சலி நிகழ்வில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா கலந்து கொண்டிருந்த போதும், சாவகச்சேரி தொகுதி கிளையை சேர்ந்த எந்த உறுப்பினரும் கலந்து கொண்டிருக்கவில்லை. சாவகச்சேரி நகரசபை, பிரதேசசபையின் எந்த உறுப்பினர்களும் கலந்து கொண்டிருக்கவில்லை.

 

தமிழ் மக்களிற்காக துணிச்சலுடன் குரல் கொடுத்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினர், சட்டத்தரணி ந.ரவிராஜின் நினைவஞ்சலியை சாவகச்சேரி தமிழரசு கட்சியினர் புறக்கணித்தது பல தரப்பினரிடமும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews