நாட்டில் பொருட்களின் விலைகள் மேலும் அதிகரிக்கலாம்: எஸ்.பி திசாநாயக்க.

நாடு இன்று முகம் கொடுத்துள்ள நிலையில் பொருட்கள் விலைகள் மேலும் அதிகரிக்கலாம்.மக்கள் இதனை உணர்ந்து செயற்பட வேண்டும் என நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி குழுத்தலைவரும், நாடாளுமன்று உறுப்பினருமான எஸ்.பி திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

நீர்பாசன துறை அமைச்சின் சுமார் 19 லட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் பூண்டுலோயா எரோல் கீழ்பிரிவு தோட்டத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள குடிநீர் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி குழுத்தலைவரும்,நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.பி திசாநாயக்க தலைமையில் நேற்று (31) நடைபெற்றது

அதில் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

நாடு இன்று பெரும் கஸ்டத்திற்கு மத்தியில் தான் ஓடிக்கொண்டிருக்கின்றது.நாட்டுக்கு கிடைத்த வருமானங்கள் கொரோனா தொற்று பரவல் காரணமாக இல்லாதுபோயுள்ளது.நாங்கள் நாட்டினை மாதக்கணக்கில் மூடி வைத்து தான் இந்த அளவு கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளோம்.ஒரு நாளைக்கு நாட்டை மூடினால் 450 கோடி ரூபா நட்டம் ஏற்படுகின்றது.

இந்நிலையில்,நாங்கள் மாதக்கணக்கில் நாட்டினை மூடி வைத்திருந்தோம்.இன்று எமக்கு கிடைக்க கூடிய மிகப்பெரிய வருமானமாகிய சுற்றுலாதத்துறை பாரிய அளவில் வீழ்ச்சிக்கண்டுள்ளது.அதனுடன் தொடர்புடைய சுமார் 29 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதே நேரம் இன்னுமொரு வருமானமாக இருந்து வெளிநாட்டில் உள்ளவர்கள் அனுப்பிய அந்நியச்செலவாணி இன்று இல்லாது போயுள்ளது . இதனால் அந்த வருமானமும் எமக்கு கிடைப்பதில்லை.இதனை தவிர ஆடைத்தொழில் மூலம் கிடைக்கப்பெற்ற வருமானமும் இன்று கப்பல் போக்குவரத்து நடைபெறாததன் காரணமாக அந்த வருமானத்தினையும் இழந்துள்ளோம்.

ஆகவே நாம் பாரிய ஒரு நெருக்கடியான நிலையினையே சந்தித்துள்ளோம்.கப்பல் கட்டணங்களும் பல மடங்காக அதிகரித்துள்ளன. ஆகவே பொருட்களின் விலைகளும்,அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் இன்னும் சில நாட்களில் மேலும் அதிகரிக்கலாம்.

வரலாற்றில் நாம் இவ்வாறான ஒரு நெருக்கடிக்கு 1971,1972 காலப்பகுதிகளில் சந்தித்திருக்கிறோம்.அப்போது அரசி இரண்டு கிலோவுக்கு அதிகமாக கொண்டு சென்றாலும் பொலிஸார் கைது செய்யும் ஒரு காலம் காணப்பட்டது.கிழமை நாட்களில் அனுமதித்த தினத்தினை தவிர யார் வீட்டிலாவது சோறு சமைத்தால் பொலிஸார் கைது செய்தனர்.இவ்வாறான நிலையிலும் மக்களின் அபிவிருத்தி பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

எதிர்வரும் வரவு செலவு திட்டத்திலும் அபிவிருத்திக்காகவும் குடிநீர் பெற்றுக்கொடுப்பதற்காக பாரிய அளவில் நிதி ஒதுக்கீடு செய்துள்ளன. ஆகவே இந்த நிலையினை மக்கள் உணர்ந்து செயப்பட வேண்டும் என அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews