நிருபமா ராஜபக்சவுக்கு இலஞ்ச ஊழல் ஆணைக்குழு மீண்டும் அழைப்பு?

பண்டோரா ஆவணம் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் நிருபமா ராஜபக்ச இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பண்டோரா ஆவணங்களில் வெளிப்படுத்தப்பட்டுள்ள சொத்துக்கள் தொடர்பாக வாக்குமூலமொன்றை வழங்குவதற்காக கடந்த திங்கட்கிழமை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அழைப்பு விடுத்திருந்தது.

இந்நிலையில், மருத்துவ காரணங்களுக்காக தன்னால் குறித்த தினத்தில் ஆணைக்குழுவில் முன்னிலையாக முடியாதெனவும், வேறு ஒரு தினத்தை வழங்குமாறும் அவர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் கேட்டுக்கொண்டுள்ளதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்கமைய,விரைவில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அவருக்கு மீண்டும் அழைப்பு விடுக்கப்படுமெனவும் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கருப்பு பணம் மூலம் அரசியல் தலைவர்கள், தொழில் அதிபர்கள், பிரபலங்கள் வெளிநாடுகளில் சொத்துக்களை வாங்கி குவித்த ஆவணங்களை பண்டோரா பேப்பர்ஸ் அண்மையில் வெளியிட்டிருந்தது.

இதில், இலங்கையின் முன்னாள் பிரதி அமைச்சர் நிருபமா ராஜபக்ச மற்றும் அவரின் கணவர் திருக்குமார் நடேசன் ஆகியோரின் பெயரும் இடம்பெற்றுள்ளது.

நிருபமா ராஜபக்சவின் கணவர் திருக்குமார் நடேசனுக்கு இலஞ்ச ஊழல் ஆணைக்குழு இரண்டு தடவைகள் சம்மன் அனுப்பப்பட்டு வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன. எனினும், தம்மீது சுமத்தப்பட்ட பெரும்பாலான குற்றச்சாட்டுகளை திருக்குமார் நடேசன் மறுத்திருந்தார்.

இந்த விவகாரம் தற்போது கொழும்பு அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதுடன், குறித்த விடயம் தொடர்பில் உடனடி விசாரணைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews