நீதிபதி ஸ்ரீநிதி நந்தசேகரன் கௌரவிப்பு.

அம்பாறை கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீநிதி நந்தசேகரன் தனது 20 வருட கால நீதிச் சேவையிலிருந்து ஓய்வு பெறுவதையிட்டு, அவரைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் சாய்ந்தமருது லீ மெரிடியன் மண்டபத்தில் நேற்று மாலை நடைபெற்றது.

கொரோனா தொற்று காரணமாக உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் வலுக்கட்டாயமாக எரிக்கப்பட்டபோது அம்பாறை மாவட்டத்தில் பலரின் ஜனாஸாக்கள் குறித்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொண்டதுடன் அவற்றை எரிக்காமல் வைத்திருக்குமாறு கட்டளையிட்டிருந்த நீதிபதி ஸ்ரீநிதி நந்தசேகரனின் துணிச்சலான தீர்ப்புகள் குறித்து சட்டத்தரணிகள் பலரும் தமதுரையின்போது சுட்டிக்காட்டி, பாராட்டுத் தெரிவித்திருந்தனர்.

கல்முனை சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி ஐ.எல்.எம்.ரமீஸ் தலைமையில் இடம்பெற்ற இவ் நிகழ்வில் நீதிபதி ஸ்ரீநிதி நந்தசேகரனுக்கு சங்கத்தின் சார்பில் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் கல்முனை மாநகர மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் விசேட நினைவுச் சின்னம் வழங்கி கௌரவித்து, வாழ்த்துரை நிகழ்த்தினார்.

அத்துடன் சிரேஷ்ட சட்டத்தரணி றைசுல் ஹாதி, நீதிபதி ஸ்ரீநிதி நந்தசேகரன் தம்பதியினரை பொன்னாடை போர்த்தி, வாழ்த்துரை நிகழ்த்தினார். பெண் சட்டத்தரணிகள் சார்பிலும் நீதிபதிக்கு விசேட நினைவுச் சின்னம் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கல்முனை, சம்மாந்துறை, அக்கரைப்பற்று மற்றும் பொத்துவில் நீதிமன்றங்களில் பணியாற்றும் நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகள் பலரும் பங்கேற்றிருந்தனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews