ஒரே நாடு ஒரே சட்டம் அதே தேரர் ? நிலாந்தன்.

“ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியின் தலைவராக ஞானசார தேரரை ஜனாதிபதி நியமித்தமை என்பது என்னைப் பொறுத்தவரை பொருத்தமானதே. அது அபகீர்த்திக்குரிய ஒரு மாணவனை வகுப்பின் மாணவத் தலைவராக நியமித்தமை போன்றது” இவ்வாறு ருவிற்றரில் பதிவிட்டுள்ளார் நிமால் பெரேரா என்பவர்.
ஒரே நாடு ஒரே சட்டம் என்பது ஒரு புதிய கோஷம் அல்ல. கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது கோத்தாபய ராஜபக்ச அதை முன்வைத்தார். ஈஸ்டர் குண்டு வெடிப்புக்குப்பின் இந்த கோஷத்துக்கு அழுத்தமான காரணங்கள் இருந்தன. இப்பொழுது அதற்கு ஒரு செயலணியை ஜனாதிபதி உருவாக்கி இருக்கிறார். 13 அங்கத்தவர்களை கொண்ட அந்த செயலணிக்கு சர்ச்சைக்குரிய ஞானசார தேரர் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

இச்செயலணியில் தமிழ் மக்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை. பெண்களுக்கும் பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை. அதே சமயம் நான்கு முஸ்லிம்கள் அதில் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். தமிழ் மக்கள் மத்தியில் இருந்தும் ஆட்களை நியமிக்க வேண்டும் என்று அரசாங்கத்தோடு பங்காளிகளாக இருக்கும் தமிழ் அமைச்சர்கள் இருவர் கேட்டதாக ஒரு தகவல்.

ஆனால் இக்கட்டுரை எழுதப்படும் இந்நாள் வரையிலும் அவ்வாறு யாரும் நியமிக்கப்பட்டதாக தெரியவில்லை. இது போல ஒரு செயலணி கிழக்கில் தொல்லியல் விவகாரங்களுக்காக நியமிக்கப்பட்ட பொழுது அதிலும் தமிழ் மக்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை. ஒரு தமிழ் மருத்துவ நிபுணர் அதில் தன்னார்வமாக இணைந்து செயற்படத் தயார் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் விண்ணப்பம் செய்திருந்தார்.

ஆனால் அவரோ அல்லது வேறு எந்த தமிழரோ இன்றுவரையிலும் அச்செயலணிக்கு நியமிக்கப்படவில்லை. இப்படிப்பட்ட செயலணிக்கு தமிழ் மக்கள் நியமிக்கப்படாமல் விடுவதே நல்லது. அதற்குள் போய் இருந்து கொண்டு எதையும் செய்ய முடியாது. தமிழ் மக்கள் இல்லாத செயலணி குறைந்தபட்சம் அரசாங்கத்தை அம்பலப்படுத்தவாவது உதவும்.

ஒரே நாடு ஒரே சட்டம் எனப்படுவது ஒரே நாடு ஒரே தேசம் என்ற 2009 இற்குப் பின்னரான கோஷத்தின் தொடர்ச்சிதான்.ஒரே நாடு ஒரே தேசம் எனப்படுவது இது சிங்கள பௌத்த தேசம் என்பதை அழுத்திக் கூறுகிறது.

இங்கே தமிழர்களுக்கு தேசம் கிடையாது என்று கூறுகிறது. அதேபோல ஒரே நாடு ஒரே சட்டம் எனப்படுவது இங்கு சிங்கள பௌத்த சட்டம் மட்டும்தான் இருக்கும் என்பதனை உணர்த்துகிறது.இதில் தமிழ் மக்களின் தேசவழமைச் சட்டத்துக்கோ அல்லது முஸ்லிம்களின் மத நம்பிக்கைகளுடன் சம்பந்தப்பட்ட சட்டங்களுக்கோ இடம் இல்லை என்பதனை உணர்த்துகிறது.

இப்படி ஒரு செயலணியை நியமித்ததன் மூலம், அதற்கு சர்ச்சைக்குரிய ஒரு தேரரை தலைவராக நியமித்ததன் மூலம் ஜனாதிபதி தமிழ் மக்களுக்கும் முஸ்லீம் மக்களுக்கும் தெளிவான ஒரு செய்தியை வழங்குகிறார்.

அது என்னவெனில் பல்லினத் தன்மை மிக்க ஒரு தீவை கட்டியெழுப்புவதற்கு அவர் தயாரில்லை என்பதுதான். ஓரினத் தன்மைமிக்க ஒரு மதத்திற்குரிய அல்லது ஒரு மதத்தின் ஒரு இனத்தின் மேலாண்மையை ஏற்றுக் கொள்கின்ற ஒரு தீவைத்தான் அவர் உருவாக்கப் போகிறார்.

இத்தீவில் உள்ள ஏனைய இனங்கள் மதங்களை சட்டத்தின் முன் சமமாக கருதி பல்லினத் தன்மை மிக்க பல்சமய பண்பு மிக்க இருமொழி பண்புடைய ஒரு நாட்டைக் கட்டியெழுப்ப அவர் எந்த அளவுக்கு தயாராக இருக்கிறார் என்பதனை இச்செயலணி உணர்த்துகிறது.

அது மட்டும் அல்ல அவர் இந்த ஆண்டின் இறுதிக்குள் ஒரு புதிய யாப்பை கொண்டு வரப் போவதாக கூறியிருக்கிறார்.அப்புதிய யாப்பில் சிங்களவர்கள் அல்லாத ஏனைய சிறிய மக்கள் கூட்டங்கள் தொடர்பில் எப்படிப்பட்ட ஒரு நிலைப்பாட்டை அவர் எடுக்கப் போகிறார் என்பதையும் இது முன்கூட்டியே உணர்த்துகின்றதா? அதாவது இனப்பிரச்சினைக்கு எப்படிப்பட்ட ஒரு தீர்வை அவர் தர முயல்வார் என்பதனை இச்செயலணி கட்டியம் கூறுகிறதா?

இச்செயலணிக்கு ஞானசார தேரரை தலைவராக நியமித்தமை என்பது உள்நோக்கமுடையது.அவர் நீதிமன்றத்தால் குற்றம் காணப்பட்டவர். தண்டிக்கப்பட்டவர்.ஜனாதிபதி அவருக்கு மன்னிப்பு வழங்கினார். இலங்கைத்தீவின் நீதிபரிபாலனக் கட்டமைப்பால் தண்டிக்கப்பட்ட ஒருவருக்கு நிறைவேற்று அதிகாரத்தின் மூலம் மன்னிப்பு வழங்கப்பட்டது.

அதாவது நீதி பரிபாலன கட்டமைப்பை விடவும் நிறைவேற்று அதிகாரம் உயர்வானது என்பதை உணர்த்தும் ஒரு மன்னிப்பு அது. அவ்வாறு மன்னிக்கப்பட்ட ஒருவரை, குறிப்பாக சிங்கள மக்களுக்கும் முஸ்லீம் மக்களுக்கும் இடையே வெறுப்பைத் தூண்டும் வேலைகளைச் செய்தவர் என்று குற்றம் சாட்டப்படும் ஒருவரை, சட்டம் சம்பந்தப்பட்ட ஒரு செயலணிக்குத் தலைவராக நியமித்திருப்பது என்பது எதைக் காட்டுகிறது ?

இச்செயலணியானது இலங்கைதீவில் நடப்பிலுள்ள சட்ட ஏற்பாடுகள் குறித்து மீளாய்வு செய்வதோடு பரிந்துரைகளையும் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி என்றால் அதற்கு சட்டத்துறை சார்ந்த ஒருவரைத்தான் நியமித்திருக்க வேண்டும். மாறாக சட்டத்தால் தண்டிக்கப்பட்டு நிறைவேற்று அதிகாரத்தால் விடுவிக்கப்பட்ட ஒருவரை நியமித்திருப்பதன்மூலம் ஜனாதிபதி ஒரே நாடு ஒரே சட்டம் என்ற அந்த கோஷத்தை எந்த அடிப்படையில் நடைமுறைப்படுத்த போகிறார்?

உலகம் முழுவதும் ஏற்றுக் கொள்ளப்படும் அனைத்துலக சட்ட நியமங்களின்படி இலங்கைத்தீவின் சட்டக் கட்டமைப்பை கட்டி எழுப்புவது என்பது உன்னதமான ஒரு இலக்காக தோன்றும். ஆனால் ஒரு சிறிய நாட்டில் வாழும் எல்லா இன,மத மக்களின் மதம் சார்ந்த பண்பாடு சார்ந்த நம்பிக்கைகளை பிரதிபலிக்கும் உள்ளூர் சட்டங்களின் பல்வகைமையை ஏற்றுக்கொள்வது என்பது பல்லினத் தன்மை மிக்க பல்மதத் தன்மை மிக்க ஒரு தீவைக் கட்டியெழுப்புவதற்கு அத்தியாவசியமான ஒரு முன்நிபந்தனை ஆகும். இந்த அடிப்படையில் பார்த்தால் ஒரே நாடு ஒரே சட்டம் எனப்படுவது இனப் பல்வகைமை மதப்பல்வகைமை மொழிப்பல்வகைமை போன்றவற்றுக்கு எதிரான ஒற்றைப்படை தன்மையான ஒரு நாட்டை கட்டியெழுப்பும் நோக்கிலானதா என்ற கேள்வியை எழுப்புகிறது.

நடந்து முடிந்த ஜெனீவா கூட்டத்தொடரில் அரசாங்கம் இலங்கைப் பாணியிலான ஒரு பொறுப்புக்கூறலுக்கு தயார் என்ற செய்தியை உலக சமூகத்துக்கு வழங்கியது.அப்படியென்றால் இலங்கைப் பாணியிலான நல்லிணக்கம் அல்லது பொறுப்புக்கூறல் என்பவையெல்லாம் ஒரே நாடு ஒரே சட்டம் என்ற அடிச்சட்டத்தின் மீது கட்டியெழுப்பப்படும் விவகாரங்களா?

கடந்த சில மாதங்களாக மேற்கு நாடுகளையும் ஐநாவையும் இந்தியாவையும் அனுசரித்துப் போகும் ஒரு வெளியுறவு அணுகுமுறை மாற்றத்தை அரசாங்கம் கடைபிடித்து வருகிறது. இந்த அணுகுமுறை மாற்றமானது வைரஸ் தாக்கத்தால் சரிந்து போயிருக்கும் பொருளாதாரத்தை நிமிர்த்தும் நோக்கிலானது. ஆனால் நாட்டுக்கு வெளியே இருக்கும் சக்திகளோடு ஏதோ ஒரு விகிதமளவுக்கு சுதாகரித்த இந்த அரசாங்கம் குறிப்பாக, புலம்பெயர்ந்த தமிழ் மக்களை நோக்கி அழைப்பு விடுக்கும் இந்த அரசாங்கம்,நாட்டுக்கு உள்ளே இருக்கும் சக்திகளோடு எந்தவிதமான ஒரு சுதாகரிப்புக்கும் தயாரில்லை என்ற செய்தியை இந்த ஒரே நாடு ஒரே சட்டத்துக்கான செயலணி வெளிப்படுத்துகிறதா?

குறிப்பாக இந்த செயலணியை ஜனாதிபதி நியமித்த காலகட்டம் எது என்று பார்க்க வேண்டும்.வைரஸ் தொற்றின் விளைவாக நாடு பொருளாதார ரீதியாக திணறிக் கொண்டிருக்கிறது. தடுப்பூசிகளை வேகமாகச் செலுத்துவதன் மூலமும் சமூகமுடக்கத்தின் மூலமும் வைரஸ் தொற்று வேகத்தை குறிப்பிடத்தக்க அளவிற்கு அரசாங்கம் கட்டுப்படுத்தியிருக்கிறது. எனினும் வைரஸ் தொற்று வேகத்தோடு,இறப்பு விகித அதிகரிப்போடு ,சேர்ந்து உயர்ந்த விலைகள் இன்னமும் வழமைக்குத் திரும்பவில்லை. அரசாங்கத்தின் இறக்குமதி கொள்கை காரணமாக உளுந்தின் விலை உயர்ந்த பொழுது வடையின் விலையும் உயர்ந்தது. ஆனால் உளுந்தின் விலை இப்போது ஓரளவுக்கு வழமைக்கு வந்துவிட்டது. ஆனால் வடையின் விலை இறங்கவில்லை. அப்படித்தான் பாலும் சீனியும் கிடைக்காத ஒரு காலத்தில் தேநீரின் விலை உயர்ந்தது. அது இன்று வரை இறங்கவில்லை.அத்தியாவசிய பொருட்களின் விலையை அரசாங்கத்தால் கட்டுப்படுத்த முடியவில்லை. அத்தியாவசியப் பொருட்களுக்கான விலைக் கட்டுப்பாட்டை அரசாங்கம் நீக்கி விட்டது. அதனால் வியாபாரிகள் தம் விருப்பப்படி விலைகளைத் தீர்மானிக்கிறார்கள். கீழ் மத்தியதர வர்க்கத்தை சேர்ந்த ஒரு சிறிய குடும்பம் அதன் வருமானத்துக்கு ஏற்றாற்போல பொருட்களை வாங்க முடியாமல் திண்டாடுகிறது. கிட்டத்தட்ட 20 மாதங்களுக்கு முன்பு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை அள்ளி வழங்கிய சிங்கள மக்கள் இப்பொழுது அரசாங்கத்தின் மீது விரக்தியும் கோபமும் கொண்டிருக்கிறார்கள்.

இறக்குமதி நிறுத்தப்பட்டதால் மேலும் பொருட்களின் விலைகள் உயரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிமெந்தின் நிலைமையும் அப்படித்தான். கட்டுமான தேவைகளுக்கான சீமெந்து தொடர்ந்து கிடைக்குமா என்பது சந்தேகமாக இருக்கிறது.

இதுதவிர, தொழிற்சங்கங்கள் தொடர்ச்சியாகப் போராடிக் கொண்டிருக்கின்றன. ஆசிரியர்களும் அதிபர்களும் சம்பள உயர்வை கேட்கிறார்கள். விவசாயிகள் உர வினியோகத்தை கேட்கிறார்கள். மருத்துவ தாதிமார் சம்பள உயர்வை கேட்கிறார்கள். கெரவலப்பிட்டிய,யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்கியதை எதிர்த்து மின்சாரசபை ஊழியர்களின் தொழிற்சங்கம் நாட்டை இருட்டாக்கப்போவதாக அச்சுறுத்துகிறது. இப்படியாக அரசாங்கம் பலமுனைகளில் எதிர்ப்பைச் சமாளிக்க வேண்டியிருக்கிறது. இந்த எதிர்ப்புக்களையெல்லாம் திசை திருப்புவதற்காகவே அல்லது அரசாங்கம் இப்படி ஒரு செயலணியை உருவாக்கியதா ?

மிகக் குறிப்பாக ஜனாதிபதி இந்த வாரம் ஸ்கொட்லாந்து போகிறார். பருவநிலை மாறுபாடு தொடர்பான மாநாட்டில் அவர் பங்குபற்றவிருக்கிறார். அவருக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை செய்வதற்காக புலம்பெயர்ந்த தமிழர்கள் தயாராகி வருகிறார்கள். அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு முயல்வதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.இப்படிப்பட்டதொரு பின்னணியில் இப்படி ஒரு செயலணியின் ஜனாதிபதி ஏன் நியமித்தார்?

ஒருவிதத்தில் அது புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு ஜனாதிபதியின் பாணியிலான ஒரு பதில் என்றும் எடுத்துக் கொள்ளலாம். அதே சமயம் அவருடைய ஸ்கொட்லாந்து விஜயத்தை முன்னிட்டு எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு தயாராகிவரும் தமிழர்கள் இப்படி ஒரு செயலணியை அவர் உருவாக்கியதால் மேலும் ஆத்திரம் அடைவார்கள். அதனால் எதிர்ப்பின் பருமன் அதிகரிக்கும். எவ்வளவுக்கு எவ்வளவு புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் ஜனாதிபதிக்கு எதிர்ப்பு காட்டுகிறார்களோ அவ்வளவுக்கு அவ்வளவு தென்னிலங்கையில் சிங்கள மக்கள் ஜனாதிபதியை ஆதரிப்பார்கள். இது இலங்கைத் தீவின் இன முரண்பாட்டின் தர்க்கங்களில் ஒன்று. அதாவது தமிழர்களால் அதிகம் எதிர்க்கப்படும் ஒரு தலைவர் சிங்கள மக்களால் அதிகம் நேசிக்கப்படுவார். எனவே தனது ஐரோப்பிய விஜயத்தின் போது புலம்பெயர்ந்த தமிழர்களின் எதிர்ப்பு அதிகமாக இருப்பதால் ஜனாதிபதிக்கு உள்நாட்டில் அனுகூலமான விளைவுகளே ஏற்படும். அது சிங்கள மக்களின் அதிருப்தியை திசை திருப்ப உதவும். இது ஒரு நெருக்கடியை இன்னொரு நெருக்கடியின் மூலம் வலுவிழக்கச் செய்யும் அல்லது முக்கியத்துவம் இழக்கச் செய்யும் ஓர் உத்தியாகும். இப்படிப்பார்த்தால் ஞானசார தேரரின் செயலணியானது உடனடிக்கு அரசாங்கத்தை நெருக்கடிகளில் இருந்து விடுவிக்க உதவக்கூடும். அதாவது ஆட்சிக்கு ஏற்பட்டிருக்கும் எல்லா நெருக்கடிகளையும் இன முரண்பாடுகளைத் தூண்டிவிடுவதன் மூலம் கடந்து விடுவது.

 

Recommended For You

About the Author: admin