தமிழ்த் தேசத்தின் இருப்பை பாதுகாப்பதில் தமிழக மீனவர்களுக்கும் பொறுப்புண்டு. (சி.அ.யோதிலிங்கம்.)

இழுவைப்படகுகளுக்கு தடைகோரும் சுமந்திரனின் “முல்லைத்தீவிலிருந்து
பருத்தித்துறைவரை”(m2P) போராட்டம் தாயகத்திலும் தமிழகத்திலும் பலத்த
அதிர்வலைகளைத் தோற்றுவித்திருக்கின்றது. கடந்த 17 ம் திகதி
ஞாயிற்றுக்கிழமை பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தலைமையில்
மேற்கூறிய கடல்வழிப் போராட்டம் இடம் பெற்றது. சுமார் 100
வரையான படகுகளில் போராட்டக்காரர்கள் கடல் வழியாக ஆர்ப்பாட்டத்தை
நடாத்தினர். இப்போராட்டத்தில் சுமார் 300 பேர்வரை கலந்து
கொண்டனர் எனக் கூறப்படுகிறது.
சுமந்திரன், சாணக்கியன், சிறீதரன் ஆகிய பாராளுமன்ற
உறுப்பினர்களும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி
சிறீஸ்கந்தராசாவும், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களான
ரவிகரன், சயந்தன், சுகிர்தன், சிவயோகன் ஆகியோரும் பல
உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்களும் போராட்டத்தில் கலந்து
கொண்டனர்.

தமிழரசுக்கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் போராட்டத்தில் கலந்து
கொள்ளவில்லை. குறிப்பாக கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா. செயலாளர் சத்தியலிங்கம். சிவஞானம். சரவணபவன் போன்றோரும்
கலந்து கொள்ளவில்லை. பங்காளிக்கட்சிகள் எவரும் கலந்து கொள்ளவில்லை.
தங்களுக்கு எந்தவித அழைப்பும் வழங்கப்படவில்லை என பங்காளிக்கட்சிகளின்
தலைவர்கள் கூறினர்.

.
சுமந்திரன் தமிழரசுக்கட்சியியுடனோ பங்காளிக்கட்சிகளுடனோ எந்தவித கலந்துரையாடலையும் நடாத்தாமல் போராட்டத்திற்கான
ஏற்பாடுகளைச் செய்திருந்தார். பகிரங்க அழைப்பு விடுக்கப்பட்டது.
தனித்தனி அழைப்புக்கள் தேவையற்றது என இக்குற்றச்சாட்டுக்களுக்கு சுமந்திரன் பதிலளித்துள்ளார்.

கலந்துரையாடி முடிவுக்கு வருவதென்றால்
காலதாமதம் ஏற்படும் அதனாலேயே கலந்துரையாடாமல் ஏற்பாடு செய்ததாக
கூறியிருந்தார். கூட்டமைப்பின் பேச்சாளர் என்ற பதவியிலிருப்பவர்
சொந்தக்கட்சியுடனோ பங்காளிக்கட்சியுடனோ கலந்துரையாடாமல்
முடிவெடுப்பது எந்த வகை ஜனநாயகம் என்பது சுமந்திரனுக்கே வெளிச்சம்.
சுமந்திரன் ஒரு போராட்ட மரபுக்குரியவர் அல்லர். தமிழ்
மக்கள் நடாத்துகின்ற போராட்டங்களில் பொதுவாக அவர் கலந்த
கொள்வதில்லை. அவர் கலந்து கொள்கின்ற இரண்டாவது போராட்டம்
இதுவெனலாம். ஏற்கனவே நிகழ்ந்திருந்த “பொத்துவில் முதல் பொலிகண்டி
வரை” (P2P) போராட்டத்தில் அவர் முதலாவதாக கலந்து கொண்டார்.

இரண்டு போராட்டங்களிலும் அவர் தன்னை முன்னிலைப்படுத்துவதிலேயே கவனம்
செலுத்தினார். தன்னை முன்னிலைப்படுத்துவது என அவர் தீர்மானித்து
விட்டால் எந்த ஜனநாயக ஒழுக்க நெறிகளுக்கும் அவர் மதிப்புக்
கொடுப்பதில்லை. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவராக வரும் நோக்கமும்
இதற்குப் பின்னால் இருக்கலாம்
இந்தப் போராட்ட விவகாரத்தில் சுமந்திரனின் அணுகுமுறை
தொடர்பான விமர்சனக்களுக்கப்பால் போராட்டம் தமிழக மீனவர்களுக்கு
எதிராக உள்ளது என்ற விமர்சனமே கடுமையாக முன்வைக்கப்பட்டுள்ளது.
மறுவன்புலவு சச்சிதானந்தனும். காசி ஆனந்தனும் பிரதானமாக
விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். மறுவன்புலவு சச்சிதானந்தத்தின்
விமர்சனம் சற்று கடுமையாக இருந்தது எனக்கூறலாம்

.
தமிழக மீனவர்களுக்கு எதிராக போராட்டத்தை நடாத்திக்கொண்டு
இந்திய உதவியை எந்த முகத்துடன் கேட்பீர் என அவர்
கூறியிருக்கின்றார். இந்திய கன்னியா குமாரிக்கு தெற்கே உள்ள
குமரிப்பரப்பிலும்  அந்தமான் தீவுகள் தொடக்கம் விசாக பட்டினம்
தூத்துக்குடி வரைக்கும் இலங்கை மீனவர்கள் மீன்பிடித்து வருகின்றனர்.
தமிழக மீனவர்களோ தமிழக கரையோர காவல் படையோ
அதனைத்தடைசெய்யவில்லை என்றும் கூறியிருக்கின்றார். தமிழக மீனவர்கள் வடக்கின் பொருளாதாரத் தடையை முறியடிக்க உயிரைக் கையில்
பிடித்துக்கொண்டு உதவினர் என்றும். அகதிகளாகச் சென்ற எம்மவர்களை
தமிழக மீனவர்கள் காத்தனர் என்றும். மூன்றுலட்சம் பேருக்கும் இந்தியா
புகலிடம் கொடுத்தது என்றும் கூறியிருக்கின்றார். இந்தியாவை
சீண்டியவாறே இந்தியாவிடம் அரசியல் ஆதரவினை தமிழரசுக் கட்சி
கேட்கின்றது என்றும் அதனை எள்ளி நகையாடியிருக்கின்றார்.
தமிழர் நட்புறவு மையத்தின் தலைவர் உணர்ச்சிக் கவிஞர் காசிஆனந்தன்
தனது அறிக்கையில் இந்திய அரசுக்கும் தமிழீழ மக்களுக்குமிடையில் உள்ள
நட்புறவைச் சிதைக்கும் வகையில் தமிழக மீனவர்களை தமிழீழ மீனவர்களுடன்
மோதவிடும் சூழ்ச்சியில் சிறீலங்கா அரசு இறங்கியுள்ளது என்றும்
இதற்கு சுமந்திரன் உதவியிருக்கின்றார் என்றும்
கூறியிருக்கின்றார்.

.
சுமந்திரன் இப்போராட்டம் தமிழக மீனவர்களுக்கு எதிரானதல்ல.
இழுவைப்படகு தடை செய்வதற்கான போராட்டம் எனக் கூறினாலும் இழுவைப்படகு
தொழிலை இங்குள்ள மீனவர்களும் மேற்கொள்கின்றார்கள் என்ற நிலை
இருக்கின்ற போதும் போராட்டகாலம்  பாதிப்பின் தாக்கம்
என்பவற்றை பார்க்கும் போது இப்போராட்டம் தமிழக மீனவர்களுக்கு
எதிரான போராட்டமே என்பதில் சந்தேகமில்லை.

சுமந்திரனின் போராட்டத்திற்கு எதிராக இராமேஸ்வரம்
மீனவர்களும் போராட்டத்தை நடாத்தியிருந்தனர். அதில் அவர்கள் தாயக
மீனவர்களின் பாதிப்புப் பற்றி தாங்கள் உணர்ந்து கொள்வதாகவும்
தாங்களும் வாழ வேண்டும்.  வாரத்தில் இரண்டு நாட்களாவது இலங்கைக்
கடற்பரப்பில் தாங்கள் தொழில் புரிய அனுமதிக்க வேண்டும் என்றும்
இழுவைப் படகுத் தொழிலை உடனடியாக நிறுத்துவதில் கஸ்டங்கள் உண்டு.
படிப்படியாக நிறுத்துவதாகவும் கூறியிருந்தனர். இவர்களது இந்தக் கருத்தில்
நியாயம் இருப்பதாகத் தெரியவில்லை. இந்தியக் கடல் எல்லைக்குள் பெரும்
பரப்பு இருக்கும்போது பேரினால் பாதிக்கப்பட்ட தாயக மீனவர்களின்
வாழ்வு ஆதாரத்தில் பங்கு கேட்பது அறநெறிக்கு உட்பட்டதல்ல.

தமிழக மீனவர்களின் அத்துமீறல் பற்றி போர்க்காலத்திலும்
அதற்கு பின்னரும் என நீண்டகாலமாக பேசப்பட்டு வருகின்றது.
விடுதலைப்புலிகள் கூட இவ்விவகாரத்தை எவ்வாறு கையாள்வது
எனத்திணறியிருந்தனர். துரதிஸ்டவசமாக நீண்டகாலமாக நிலவி வரும்
இப்பிரச்சினையை தீர்ப்பதற்கு தகுந்த மூலோபாயங்கள்
தந்திரோபாயங்களை வகுத்து தமிழ்த்தரப்பு செயற்படவில்லை. இந்தப்
போராட்டம் கூட தமிழ் அரசியல்வாதிகள் எவரும் தமது பிரதேசத்திற்கு
வரக்கூடாது என வடமராட்சி மீனவர்கள் போர்க்கோலம் எழுப்பிய
பின்னர் தான் இடம் பெற்றிருக்கின்றது. கிழக்கில் தமிழ் – முஸ்லீம்
முரண்பாடு தொடர்பாகவும் இந்த நிலை தான் ஏற்பட்டிருக்கின்றது. தமிழ்
அரசியல் தலைமை கண்டும் காணாமல் விடுகின்ற போது விவகாரம் முற்றி
மேல்நிலைக்கு வருகின்றது. இழுவைப்படகுத் தொழிலை தாயக மீனவர்கள் சிலரும் மேற்
கொள்கின்றனர். குறிப்பாக குருநகரைச் சேர்ந்த சிலரும்
வல்வெட்டித்துறையைச் சேர்ந்த சிலரும் மேற்கொள்கின்றனர்.


சுமந்திரனின் இப்போராட்டத்திற்கு எதிராக குருநகரில் மீனவர்கள்
ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்தினர். சுமந்திரனின் கொடும்பாவிக்கு
செருப்பு மாலை அணிவித்து எரிக்கும் நிகழ்வும்
இடம்பெற்றிருக்கின்றது. இழுவைப்படகுத் தொழிலுக்கு எதிராக சட்டம்
கொண்டு வந்த போதும் வல்வெட்டித்துறையில் ஒரு போராட்டத்தை
நடாத்தியிருந்தனர்.

.
தாயக மீனவர்களின் இழுவைப்படகுத் தொழிலும் எதிர்காலத்
தலைமுறைக்குரிய மீன்வளங்களை அழிக்கும் என்பதும் உண்மைதான். இவர்களும்
இத் தொழிலை நிறுத்த வேண்டும் ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில்
மட்டும் இவர்கள் தொழில் புரிவதனால் ஏனைய மீனவர்களின் வலைகளை தமிழக
மீனவர்களின் படகுகள் போல இவர்களது படகுகள் அழித்துச் செல்வதில்லை.
வடக்கு மீனவர்களுக்கும் தமிழக மீனவர்களுக்கும் இடையில் உள்ள இந்த
முரண்பாடு தமிழத் தேசிய அரசியலைப் பொறுத்தவரை அக முரண்பாடே! அக முரண்பாடுகளை புற முரண்பாடுகளை கையாள்வது போல கையாள முடியாது.

அதனை கவனமாகக் கையாண்டு தீர்க்க முன்வராவிட்டால் எதிரிகள் தமக்கு சாதகமாக
பயன்படுத்துவர் என்பது எதிர்பார்க்க வேண்டியதே! இது இம் முரண்பாட்டிற்கு
மட்டுமல்ல சாதிரூபவ் மதரூபவ் பிரதேசரூபவ் பால் முரண்பாடுகளுக்கும்ரூபவ் தமிழ்-
முஸ்லீம் முரண்பாட்டிற்கும் பொருந்தும். இந்த விவகாரத்தை பொறுத்தவரை எதிர்முனையான இரண்டு விவகாரங்கள் களத்தில் உள்ளன. ஓன்று வடக்கு மீனவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
இரண்டாவது ஈழத்தமிழர் – தமிழகத் தமிழர் உறவு பாதிக்கப்படுகின்றது.
இதனைக் கையாளும்போது கத்தியின் கூர் விளிம்பில் நடப்பது போன்று
கவனமாகக் கையாள்வது அவசியம்.
தமிழக மீனவர்களின் அத்துமீறல்களினால் தாயக மீனவர்கள்
கடுமையான பாதிப்புக்களைச் சந்திக்கின்றனர். அதில் முதலாவது போர்
நடந்த காலத்தில் தாயக மீனவர்களினால் தமது தொழிலைச் செய்ய
முடியவில்லை. அக்காலங்களில் தமிழக மீனவர்கள் வட பகுதி கடல் எல்லைக்குள்
வந்து மீன்களைப் பிடித்தனர் இதனைப் பெரியளவிற்கு தாயக மீனவர்கள்
எதிர்க்கவில்லை. போர் முடிந்த பின்னர் பல்வேறு கடன்களைப்பட்டே
தொழிலை மேற் கொள்கின்றனர். தமிழக மீனவர்களும் பெரும்
எண்ணிக்கையில் போர்க்கால பழக்கத்தில் வடபகுதிக்கடல் எல்லைக்குள் வந்து
மீன் பிடிக்கும் போது ரூடவ்ழத்தமிழ் மீனவர்களுக்கு மீன்கள் கிடைப்பது
அரிதாகின்றது.

இது தொழிலுக்கே நட்டத்தை ஏற்படுத்துகிறது.
இரண்டாவது தமிழக மீனவர்களின் இழுவைப்படகுத் தொழில் ஆகும் இது
இரண்டு பாதிப்புகளை ஈழத்தமிழ் மீனவர்களுக்கு கொடுக்கின்றது. ஒன்று
மீன்கள் உருவாகக் கூடிய கடல் வளங்களை அது அழிக்கின்றது. இயற்கை வளங்கள்
எதிர்காலத் தலைமுறைக்கும் உரியவை. நிகழ்காலத்தலைமுறை இதனை கவனத்தில்
எடுத்தே வளங்களைப் பயன்படுத்த வேண்டும். இழுவைப்படகுகள் மீன்கள்
இனப்பெருக்கம் செய்யக்கூடிய கடல் தாவரங்களையும் பவளப்பாறைகளையும்
அழிக்கின்றது. இது எதிர்காலத்தலைமுறையின் வாழ்வையே
சூனியமாக்குகின்றது.

இரண்டாவது தாயக மீனவர்கள் கடன்பட்டு வாங்கிய வலைகளையெல்லாம்
இழுவைப்படகுகள் அறுத்துச் செல்கின்றன இதனால் ஒரே நாளில் பல லட்சம்
பாய்களை தாயக மீனவர்கள் இழக்க வேண்டிய நிலை ஏற்படுகின்றது.
இதைவிட தாயக மக்களின் அடிப்படைப் பொருளாதாரம் விவசாயமும் கடல்
தொழிலும் தான்.

இதில் விவசாயம் சிங்களக் குடியேற்றங்களினாலும்
அரசின் கவனிப்பாரற்ற நிலையினாலும் பல்வேறு நெருக்கடிகளைச்
சந்தித்து வருகின்றது. இந்நிலையில் கடல் தொழில் ஒன்று தான் வலுவாக
இருந்தது. இன்று சிங்கள் மீனவர்களின் அத்துமீறல்களினாலும் தமிழக
மீனவர்களின் அத்துமீறல்களினாலும் கடல் தொழிலும் நெருக்கடிகளைச்
சந்திக்க தொடங்கியுள்ளன. இதனால் பலர் இத்தொழிலை விட்டு வெளியேற
முயற்சிக்கின்றனர். இப்போக்கு வளருமானால் தமிழ்த்தேசத்தின்
இருப்பே கேள்விக்குறியாகிவிடும் அடிப்படைப் பொருளாதாரம்
அழிந்தால் தேசம் அழியும் என்பது இயற்கையானதே!
வடமராட்சி மீனவர் ஒருவர் விரக்தியினால் தனது அறுக்கப்பட்ட வலைகளை
ஒன்று குவித்து தீமூட்டி கொழுத்தி எரித்து இத்தொழிலே வேண்டாம் என
முடிவெடுத்திருக்கிறார். குறைந்தபட்சம் தமிழக மீனவர்கள் தமது இழுவைப்படகு
தொழிலை விட்டிருந்தால் கூடஈழத் தமிழ் மீனவர்களுக்கு அது ஆறுதலாக
இருந்திருக்கும்.

இந்த விவகாரத்தில் தமிழக மீனவர்களை ஒழுங்கபடுத்த வேண்டிய
பொறுப்பு தமிழக அரசியல் தலைமைகளுக்கும் தமிழக மீனவ தொழிற்சங்க
தலைமைகளுக்கும் உள்ளது. இந்தப் பொறுப்பை வினைத்திறனுடன் ஆற்ற
அவர்கள் முன்வரவில்லை. மறுபக்கத்தில் இலங்கை அரசாங்கத்திற்கு தமிழக
மீனவர்களின் அத்துமீறலைத்தடுப்பது பெரியகாரியமல்ல ஆனால்
அவர்கள் தமிழக மீனவர்களுக்கும்  ஈழத்தமிழர் மீனவர்களுக்குமிடையே
முரண்பாட்டை ஊதிப்பெருப்பிக்க வேண்டும் என்பதற்காகவே. இதனூடாக தமிழத் தேசியத்தின் இருப்பை அழிப்பதே சிறீலங்கா அரசின் நோக்கமாகும்.

இந்தச் சதிப் பொறிக்குள் தமிழகமீனவர்கள் மாட்டுப்படக் கூடாது. தமிழ்த் தேசத்தின் இருப்பை பாதுகாக்கும் பொறுப்பு தமிழக மீனவர்களுக்கும் உண்டு.

இரண்டாவது விடயம் தமிழக ஈழத்தமிழர் உறவு
பாதிக்கப்படுவதாகும். தமிழ்த்தேசிய அரசியலைப் பொறுத்த வரை தமிழக
மக்கள் நிறந்த சேமிப்புச் சக்திகளாவர்.  தமிழ்த்தேசிய அரசியல்
முனைப்போடு நகர வெண்டுமென்றால் தமிழக மக்களின் ஒத்தழைப்பு மிகவும்
அவசியம். ஈழத் தமிழர்கள் எண்ணிக்கையில் குறைந்த ஒரு தேசிய இனம். அது
தன்னுடைய அக ஆற்றலை மட்டும் வளர்த்துக்கொண்டு போராட்டத்தில்
வெற்றியடைய முடியாது. புற ஆற்றலையும் வளர்த்துக்கொள்ள வேண்டும்.
புற ஆற்றலில் முக்கியமாக இருப்பவர்கள் தமிழகத் தமிழர்கள்  மலையகத்
தமிழர்கள் உட்பட உலகெங்கும் வாழும் தமிழக வம்சாவழித்  தமிழர்களும்
சிங்கள முற்போக்கு ஜனநாயக சக்திகள் உட்பட உலகெங்கும் வாழும்
முற்போக்கு ஜனநாயக சக்திகளுமே.  இது பற்றி முன்னரும் இக்
கட்டுரையாளரினால் கூறப்பட்டிருக்கின்றது.
ஈழத் தமிழர்களுக்கான தங்களது பொறுப்பை தமிழக மக்கள் தங்களால்
இயன்றவரை நிறைவேற்றியுள்ளனர் என்றே கூற வேண்டும். தமிழக
அரசியல் தலைமைகள் தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் இருக்கலாம்.
ஆனால் தமிழக மக்கள் தங்களது கடமைகளை நிறைவேற்றியிருக்கின்றனர்.
ஈழத் தமிழர்களுக்காக 27 பேர் வரை தீக்குளித்து இறந்துள்ளனர் என்பதை
நாம் மறக்கக் கூடாது.

தமிழகத்தின் இன்றைய ஸ்ராலின் தலைமையிலான தி.மு.க
அரசு  ஈழத் தமிழர்கள் தொடர்பாக பல செயற்பாடுகளை முன்னெடுத்து
வருகின்றது. ஈழத் தமிழர்களையும் இணைந்த வெளிநாடு வாழ் தமிழர் அமைச்சை
உருவாக்கியுள்ளது. இலங்கை அரசே ஈழத் தமிழர்களுக்கு எனக்கூறி எந்த
நிதியையும் வரவு செலவுத்திட்டத்தில் ஒதுக்காமல் இருக்கின்ற போது தமிழக
அரசு  ஈழத்தமிழ் அகதிகளுக்காக வரவு செலவுத்திட்டத்தில் நிதி
ஒதுக்கியுள்ளது.

எனவே தமிழக மக்களின் இந்த அக்கறைகளுக்கு பாதிப்பு ஏற்படாத
வகையில் நடந்து கொள்ள வேண்டியது ஈழத்தமிழர்களின் கடமையாகும்.

ஈழத்தமிழர்களுக்கும் தமிழகத்திற்குமிடையிலான உறவு பாதிப்படையாத
வகையில் மீனவர் விவகாரம் கையாளப்படல் வேண்டும்.

இந்த விவகாரத்தில் வலுவான மூலோபாயங்களையும்
தந்திரோபாயங்களையும் வகுத்து செயற்பட வேண்டிய பொறுப்பு
ஈழத்தமிழர்களுக்கும் உள்ளது. தமிழகத் தமிழர்களுக்கும் உள்ளது. இதற்கு
முதற்படியாக தமிழக-ஈழத்தமிழ் அரசியல் தலைமைகளுக்கிடையேயும் தமிழக-
ஈழத் தமிழ் மீனவர்சங்கங்களுக்கிடையேயும் வலுவான உரையாடல் இடம்பெற
வேண்டியது அவசியமானதாகும்.
வடக்கு கிழக்கு ஆயர்கள் சங்கம் இது தொடர்பாக நடவடிக்கைகளை
மேற்கொள்ளும் முயற்சியில் இறங்கியுள்ளது. அவர்கள் தமிழக
முதலமைச்சருடனும் தமிழக ஆயர்கள் மன்றத்துடனும் கலந்துரையாடுவது எனத்
தீர்மானித்துள்ளனர். முதற்கட்டமாக இரு தரப்புக்கும் கடிதங்களை அனுப்பி
உத்தேசித்துள்ளனர் இம் முயற்சிகள் வரவேற்கத்தக்கதே!

Recommended For You

About the Author: Editor Elukainews