வாள்வெட்டு குழு ரவுடிகளையும், போதைப்பொருள் விற்பனையையும் அரசு ஒழிக்கவேண்டும்! பருதித்துறை – புனிதநகர் மக்கள் கோரிக்கை.. |

யாழ்.பருத்தித்துறை  கற்கோவளம் – புனிதநகர் பகுதியில் வாள்வெட்டு குழு ரவுடிகளை அடக்காவிட்டால் தாம் ஊரைவிட்டு வெளியேறப் போவதாக கூறியிருக்கும் பொதுமக்கள் வீட்டிலிருந்து வெளியேற முடியாத நிலையில் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டியிருக்கின்றனர்.

நேற்று முன்தினம் மாலை கற்கோவளம் – புனிதநகர் பகுதியில் சுமார் 50ற்கும் மேற்பட்ட ரவுடிகள் வீடுகளுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த சம்பவத்தில் 6 வீடுகள் பாரியளவில் சேதமடைந்துள்ளதுடன் சிறுவர்கள், குழந்தைகள், பெண்கள் என மக்கள் வீடுகளில் இருந்து தப்பி ஓடியிருக்கின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மக்கள் ஊடகங்களுக்கு தகவல் தருகையில் புனிதநகர் கிராமத்தில் உள்ள ஒருவர் வீட்டில் வைத்தே போதைப்பொருள் மற்றும் கசிப்பு வியாபாரம் செய்வதுடன் சட்டவிரோதமான அத்தனை நடவடிக்கைகளுக்கும் துாண்டுதலாக உள்ளார்.

அவர் பின்னால் உள்ள வாள்வெட்டு குழு ரவுடிகள் கிராமம் முழுவதிலும் அட்டகாசம் புரிந்து வருகின்றனர். குறிப்பாக பெண் பிள்ளைகள் வீதியில் போக முடியாத நிலை உருவாகியிருக்கின்றது. வயதான பெண்களை கூட போதையில் துாசணத்தால் அழைப்பது போன்ற சம்பவங்கள் நடக்கிறது. இது குறித்து நாங்கள் கேட்டதற்கே வீடு புகுந்து தாக்குதல் நடத்தினார்கள். 

வீடுகளின் கதவுகள் ஜன்னல்கள், வாகனங்கள் என கண்ணில் பட்டவை அத்தனையையும் அடித்து நொருக்கி சேதப்படுத்தினார்கள். மாலை 3 மணியளவில் பாரிய சத்தத்துடன் வாள்கள், கம்பிகளுடன் வீடுகளுக்குள் புகுந்து அடித்தார்கள் நாங்கள் தப்பி ஓடினோம். இந்த பிரச்சினை இன்று நேற்று வந்ததல்ல.

இந்த பிரச்சினை தொடர்ந்தும் இருந்து கொண்டே இருக்கின்றது. இனினும் நடக்கும். அதில் எமக்கு எந்தவொரு சந்தேகமும் இல்லை. எனவே அரசாங்கம் இந்த விடயத்தை கவனத்தில் எடுத்து பொறுப்பு வாய்ந்தவர்களை கைது செய்வதுடன் இவ்வாறான சம்பவங்கள் இனிமேல் நடக்காமல் இருப்பதற்கு ஆவண செய்யவேண்டும்.

போதைப் பொருள் வியாபாரத்தை நிறுத்தி ரவுடிகளின் அட்டகாசத்தை அடக்க நடவடிக்கை எடுப்பதுடன் ரவுடிகளால் அழிக்கப்பட்ட எங்கள் சொத்துக்களுக்கு இழப்பீட்டையும் அரசாங்கம் பெற்றுத்தரவேண்டும்.

இல்லையென்றால் நாங்கள் இந்த ஊரில் வாழவே முடியாது. நாங்கள் எங்கள் இருப்பிடங்களில் இருந்து வெளியேறி வேறு இடங்களுக்கு செல்லவேண்டும் அல்லது சாகவேண்டும் என மக்கள் கூறுகின்றனர். 

Recommended For You

About the Author: Editor Elukainews