அமைச்சரையும் கடற்படையும் மீனவர்களுடன் கோர்த்துவிட்ட இந்திய துணை தூதரகம்!

இந்திய இழுவைப் படகுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த செவ்வாய்க்கிழமை இந்திய துணை தூதரகத்தை அண்மித்து உணவுத் தவிர்ப்பு போராட்டம் ஒன்று மீனவர்களால் ஆரம்பிக்கப்பட்டது.
இவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட போராட்ட களத்திற்கு அதிகாரிகள் எவரும் சென்று அவர்களது பிரச்சினைகளை கேட்டறியாததால் யாழ்ப்பாண மாவட்ட மீனவர்கள் இன்றையதினம் இந்திய துணைத் தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடாத்தினர்.
இந்நிலையில் யாழ்ப்பாண இந்திய துணை தூதரகம் ஆறு மீனவர்களை மாத்திரம் சந்திப்புக்கு உள்ளே அழைத்தது. அந்தவகையில் அந்த சந்திப்பில் கலந்துகொண்ட மீனவர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில்,
இந்தியன் ரோலர்களின் அத்துமீறல் குறித்து நாங்கள் இந்திய துணை தூதரக அதிகாரிகளை சந்தித்துள்ளோம். அவர்கள், தங்களது பக்கத்தால் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றது. உங்களது கடற்படையும் உங்களது அமைச்சும் விடுகின்ற பிழைகளால் தான் அவர்கள் உள்ளே வருகின்றார்கள். இதனை நாங்கள் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் கட்டுப்படுத்துவதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கின்றோம் என்றனர்.
அத்துடன் உத்தியோகபூர்வமற்ற தகவல் ஒன்றையும் தெரிவித்தனர். இரண்டு நாடுகளிலும் ஒரு பேச்சு வார்த்தை நடாத்தப்படுகின்றது. அதாவது மூன்று நாட்களுக்கு அவர்கள் இங்கே வந்து எங்களை அடிப்பதற்கான பேச்சு வார்த்தை என்று கூறினார்கள். இந்த தகவல் அமைச்சு மட்டத்திலேயே பேசப்படுகின்றது.
எங்களுடைய கடற்தொழில் அமைச்சும், கடற்படையும் தான் அவர்கள் ஊடுருவுவதற்கு காரணம். இந்த விடயம் மேல் மட்டத்திற்கு செல்ல வேண்டும் என்பதற்காகத்தான் நாங்கள் இங்கே வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம். எங்களது கடற்படையும் எங்களது அமைச்சரும் மனம் வைக்காவிட்டால் அவர்கள் தொடர்ந்தும் இலங்கை கடலினுள் வருவார்கள்.
எவ்வளவோ செய்து தமிழினத்தை அழித்தார்கள். அதுபோல கடற்படை நினைத்தால் அவர்களையும் சுட்டு விரட்டலாம் என்றார்.

Recommended For You

About the Author: Editor Elukainews