தென் கொரியாவுடன் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாகக் கூறும் வட கொரிய அதிபர் கிம்மின் சகோதரி அதற்காக சில நிபந்தனைகளை முன்வைக்கிறார்.
வட கொரியாவில் அதிபர் கிம் ஜோங் உன் தான் அனைத்து அதிகாரங்களும் கொண்ட தலைவர். அவருக்கு அடுத்தபடியாக அங்கே அதிகாரம் கொண்டவர் அவரின் சகோதரி கிம் யோ ஜோங்.
வட கொரியா அண்மையில் ஏவுகணை சோதனை செய்தது. ஆறு மாதங்களுக்குப் பின்னர் நடந்த முதல் சோதனை அது. இந்தச் சோதனை வட கொரியா நாங்கள் தொடர்ந்து எங்கள் படை பலத்தை அதிகரிப்போம் என்று உலகுக்கு அனுப்பிய செய்தி என்று நிபுணர்கள் கூறினர்.
இந்நிலையில் தான் கிம்மின் சகோதரி தென் கொரியாவுடனான பேச்சுவார்த்தைக்கு தயார் எனத் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது:
கொரியப் போருக்கு ஒரு முடிவுகட்ட தென் கொரியா முன்வந்துள்ளதில் மகிழ்ச்சி. ஆனால் அதற்கு முதலில் அவர்கள் வடகொரியா மீதான வெறுப்புணர்வுக் கொள்கைகளை விட்டொழிக்க வேண்டும்.
போர் நிறுத்தப் பிரகடனம் சாத்தியப்பட, பரஸ்பரம் இரு தரப்பும் ஒருவொருக்கொருவர் மரியாதை கொள்ள வேண்டும். முன்முடிவுகளுடன் கூடிய பார்வையை கைவிட வேண்டும். அதேபோல் இரட்டைக் கொள்கைகளை முதலில் கைவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
முன்னதாக ஐ.நா வருடாந்திர பொதுச் சபை கூட்டத்தில் பேசிய தென் கொரிய அதிபர் மூன் ஜே, 71 ஆண்டுகளுக்கு முன் கொரியாவில் ஏற்பட்ட மோதலுக்கு முடிவு கொண்டுவரப்பட வேண்டும். அணு ஆயுதங்களை விடுத்து பூரண அமைதியை ஏற்படுத்த வேண்டும் என்று கூறியிருந்தார்.