ஆனைக்கோட்டையில் கிறிஸ்தவ திருச் சொரூபங்கள் உடைத்தமைக்கு அங்கஜன் எம்.பி கண்டனம்!

யாழ்ப்பாணம் – ஆனைக்கோட்டை வீடுகளுக்கு முன்னால் அமைக்கப்பட்டிருந்த கிறிஸ்தவ திருச்சொரூபங்கள் மீது 28.07.2023 அன்று வெள்ளிக்கிழமை அதிகாலை வேளை இனம் தெரியாத கும்பல்கள் தாக்குதல் நடத்தியுள்ளதற்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.
அவரது உத்தியோகபூர்வ சமூக ஊடகத்தின் ஊடாக இந்த கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது,
அண்மைய நாட்களில் யாழ்ப்பாண மண்ணில் மதநல்லிணக்க செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இதனால் எம்மண் மீதும் மக்கள் மீதும் நல்லபிப்பிராயங்கள் நாடுமுழுவதும் தோற்றியிருந்தன. நல்லிணக்க செயற்பாடுகள் ஊடாக ஓர் முன்னுதாரணமான சமுதாயமாக எம்மை கட்டமைக்கும் சூழ்நிலைகளில் சில கும்பல்களின் இத்தகைய அருவருக்கத்தக்க செயற்பாடுகள் எம்மை நாமே சிதைப்பதாகவே அமைகின்றன.
இனங்கள் மற்றும் மதங்களுக்கிடையிலான ஒற்றுமையைச் சிதைக்க பாடுபடும் விசமத் தனமுடைய நபர்கள் மனிதனின் நம்பிக்கையோடு விளையாடுகின்றார்கள்.
அனைத்து மதத்தவருக்கும் தமது மத வழிபாடுகள், நம்பிக்கைகளை பின்பற்றவும் மேற்கொள்ளவும் சுதந்திரம் உள்ள அதேவேளை, எக்காரணத்தைக் கொண்டும் பிறருடைய மத நம்பிக்கைகளை சேதப்படுத்த எவருக்கும் சுதந்திரமில்லை என்பதையும் அது சமூகவிரோதச் செயல் என்பதையும் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
மதங்களை வஞ்சித்து சமூக ஒற்றுமையை சிதைக்காதீர்கள்.
நாட்டில் மதங்களுக்கிடையிலும் – இனங்களுக்கிடையிலும் நல்லிணக்கத்தை மலரச்செய்ய பலரும் உழைக்கின்றனர். அந்தக் கடின உழைப்பை உங்கள் விசமச் செயல்களால் சிதைப்பதனை ஏற்க முடியாது.
யாதும் ஊரே யாவரும் கேளீர் என வாழும் சமுதாயமே நாம் என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும் – என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews