கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டில் மரணமடைவதை தடுப்பதற்கு உள்ளூர் சுகாதார அதிகாரிகளால் மாற்றுத் திட்டங்கள் செயற்படுத்தப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சின் பிரதி பணிப்பாளரான வைத்தியர். ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
வீட்டில் ஏற்படும் கொரோனா இறப்புகளைக் குறைப்பதற்கான வழிமுறைகள் குறித்த கேள்விக்கு பதிலளிக்கும் விதமாகமே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னர் இறக்கும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தொற்றுநோயியல் பிரிவினால் வெளியிடப்பட்ட தரவுகளின்படி, அனைத்து கொரோனா இறப்புகளில் 19.5 வீதம் வீட்டிலும் மருத்துவமனையில் சேர்க்கப்படுவதற்கு முன்பும் நிகழ்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
செப்டெம்பர் 3 ஆம் திகதி நிலவரப்படி, 1,339 கொரோனா நோயாளர்கள் தங்கள் வீடுகளில் இறந்துள்ளனர், மேலும் 573 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.
கம்பஹா மாவட்டத்திலேயே இவ்வாறான இறப்புக்கள் அதிகளவில் பதிவாகியுள்ளன.
முடக்கலின் போது அம்புலன்ஸ் வாகனங்களை அழைப்பதில் சிரமங்கள் இருக்கலாம் என்றும், இதுவே வீட்டில் சம்பவிக்கும் இறப்புகளுக்கு பிரதான காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.