நாட்டில் இனங்காணப்படும் தொற்றாளர்களில் நூற்றுக்கு 98 சதவீதமானோர் டெல்டா வைரஸ் தொற்றினாலேயே பாதிக்கப்பட்டுள்ளனர்!

நாட்டில் இனங்காணப்படும் தொற்றாளர்களில் நூற்றுக்கு 98 சதவீதமானோர் டெல்டா வைரஸ் தொற்றினாலேயே பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்டா வைரஸ் பரவல் காரணமாக நாம் இக்கட்டான சூழலில் இருக்கின்றோம் என்று நீதி அமைச்சர் எம்.அலிசப்ரி தெரிவித்துள்ளார்.

அரசாங்கத் தகவல் திணைக்களம், தேசிய அபிவிருத்திக்கான ஊடக மத்திய நிலையம், வெகுஜன ஊடக அமைச்சு என்பன இணைந்து ஒழுங்குசெய்திருந்த ஊடகசந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.

டெல்டா வைரஸ் தொற்று இனங்காணப்பட்ட அனைத்து நாடுகளும் பாரிய பாதிப்பை எதிர்கொண்டுள்ளன. இந்தியா, வியட்நாம், நேபாள், பிரசேல், இந்தோனேசியா, பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகள் டெல்டா வைரஸ் தொற்றுப்பரவலுக்கு முகங்கொடுத்துள்ளன.

இவ்வாறானச் சூழலில் இலங்கையிலும் டெல்டா வைரஸ் பரவல் மிகவேகமாக பரவிக்கொண்டிருக்கின்றது.
இந்நிலையில் அரசாங்கத்தின் வருமானமும் குறைவடைந்துள்ளது.

வெளிநாடுகளிலிருந்து வரும் வருமானம், சுற்றுலாத் துறை வருமானம் என அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளன.

தற்போதையச் சூழலில் எந்த அரசாங்கமாக இருந்தாலும் பாரிய சவாலை எதிர்கொள்ளக்கூடியக் காலக்கட்டமாகவே இதனை பார்க்க வேண்டியுள்ளது.

இந்த சந்தர்ப்பத்தை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்வதற்கு சிலர் நினைக்கின்றனர். சாதாரண விலைக்கு விற்பனை செய்ய வேண்டிய அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர்.

அதிக விலைக்கு விற்பனை செய்யமுடியாத பட்சத்தில் அரிசியை பதுக்கி வைக்கின்றனர்.

சீனிக்கான தீர்வை வரியை இல்லாமல் செய்துள்ளோம். இதன காரணமாக சீனியை பதுக்கி வைத்துள்ளனர்.

அத்தியாவசியப் பொருட்களை கட்டுப்பாட்டு விலைக்கு மக்களுக்கு பெற்றுக்கொடுப்பதற்கான பொறுப்பு அரசாங்கத்துக்கு உள்ளது என்றார்.

Recommended For You

About the Author: Editor Elukainews