யாழ்.கல்வி வலயத்திற்குட்பட்ட சிங்கள மகா வித்தியாலய கட்டிடம் இராணுவத்திற்குத் தாரைவார்க்கப்படவில்லை – மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் அருளம்பலம் உமாமகேஷ்வரன்

யாழ்.கல்வி வலயத்திற்குட்பட்ட சிங்கள மகா வித்தியாலய கட்டிடம் இராணுவத்திற்குத் தாரைவார்க்கப்படவில்லை என கூறியுள்ள மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் அருளம்பலம் உமாமகேஷ்வரன்.

ஆனால் கடந்த வருடம் குறித்த கட்டிடத்தை தமக்கு வழங்குமாறு இராணுவ தரப்பிலிருந்து கோரிக்கை விடுக்கப்பட்டமை உண்மை எனினும் அந்த கோரிக்கையை மாகாண கல்வி அமைச்சு நிராகரித்துவிட்டது எனவும் கூறியுள்ளார்.

மேற்படி விடயம் தொடர்பாக நேற்று மாகாண கல்வி அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தொிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதன்போது மேலும் அவர் கூறுகையில்,

சிங்கள மகாவித்தியாலயத்தை இராணுவத்திற்கு தாரைவார்த்துவிட்டதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தது.அது பற்றி ஊடகங்களுக்கு உண்மை நிலை பற்றிக் தெளிவுபடுத்துமாறு வடமாகாண ஆளுநர் பணிப்புரை விடுத்தார்.

சிங்கள மகாவித்தியாலயம் 1995 காலப்பகுதி தொடக்கம் இராணுவ கட்டுப்பாட்டில் இருந்தது வருகிறது. கடந்த வருடம் 2022 ஆம் ஆண்டு மாகாண கல்வி அமைச்சுக்கும் மத்திய கல்வி அமைச்சு க்கும் குறித்த பாடசாலை தமது தேவைக்கு தருமாறு இராணுவத்திடமிருந்து கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

ஆனால் மாகாண கல்வி அமைச்சு மத்திய கல்வி அமைச்சு குறித்த கோரிக்கையை ஏற்கவில்லை. ஆனால் குறித்த பாடசாலை கட்டிடம் இராணுவத்திற்கு கையளிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

மேலும் வடக்கில் மாணவர்கள் குறைவு காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டது உண்மையான விடயம் தான் ஆனால் நிரந்தரமாகப் பாடசாலைகள் மூடப்படவில்லை. பாடசாலைகள் மூடப்படும்வதற்கு மாணவர்கள் குறைவும் ஒரு காரணமாக இருப்பதோடு

மாணவர்கள் கிராமப்புற பாடசாலைகளை விடுத்து நகரப் பாடசாலையை நோக்கி நகர்வதே பிரதான காரணம். குறிப்பாக நகர்புற பாடசாலைகளை பார்த்தீர்களாயின் மாடிக் கட்டிடங்கள் தொடர்ந்தும் எழுப்பப்பட்டு வருவது மாணவர்கள் நகரத்தை நோக்கி வருவதை காட்டுகிறது.

அதனைத் தடுப்பதற்கு மாகாண கல்வி அமைச்சின் ஊடாக வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ள நிலையில் மூடப்பட்ட பாடசாலைகளில் இடைவிலகிய மாணவர்களுக்கான தொழில் கல்வி செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளோம்.

ஆகவே வடக்கு மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு செயலாளர் என்ற வகையில் எனது பொறுப்பை உரிய வகையில் நிறைவேற்றுவதாக கூறினார்.

Recommended For You

About the Author: Editor Elukainews